திவ்ய பிரபந்தம்

Home

PT 4.1 ஊனேறு செல்வத்து

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் * ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறமல்லால் * கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து * கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

பெருமாள் திருமொழி 4.1

பகவத் ஞானமும் பிறந்து, இதர விஷயங்களை துறந்து, எம்பெருமானின் கல்யாண குணங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ருசியும் பிறந்து, அந்த குணம் பூர்ணமாக அனுபவிக்க வேண்டிய இடத்தில் அநுபவிக்க வேண்டும் என்னும் ஆசையும் பிறந்து, “அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி 2.3.10) என்றது போல், ‘அடியார்கள் தம் ஈட்டங் கண்டிடக் கூடுமேல்” (பெருமாள் திருமொழி 2.1) என்றதுவும் பிறந்து, இப்படி பகவத் விஷயத்திலும், பாகவத விஷயத்திலும் ஆநுகூல்யமும், இதர விஷயங்களை முழுவதுமாக துறக்கும்போது, விரோதியும் போய் பகவல் லாபமாகவும் காணவில்லை; அவனை குறை சொல்லமுடியாது ; ஏன் என்றால், அவனாகவே முன்வந்து அபயம் அளித்த இரண்டு இடங்களை உரையாயசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

ஆநயைநம் ஹரிச்ரேஷ்ட! தத்தமஸ்யாபயம் மயா * விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி வா ராவண: ஸ்வயம் || (யுத்த காண்டம் 18.34)

வானரர்களுள் சிறந்த சுக்ரீவனே ! இவனை அழைத்து வா; விபீஷணனாக இருந்தாலும், ராவணனாகவே இருந்தாலும், இவனுக்கு என்னால் அபயமளிக்கப்பட்டது.

‘ஆள் பார்த்து உழிதருவாய்’ (நான்முகன் திருவந்தாதி 60), அதாவது நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே! என்று திருமழிசையாழ்வார் கூறுகிறார்.

பகவத் லாபம் பெற வேறு ஒரு இதயம் உண்டாக வேண்டும் என்று ஆழ்வார் நினத்து, “நான் அரசனாகப் பிறந்து எல்லா சுகங்களையும் அனுபவிப்பதால், இந்த ஆயுள் முடிந்த பிறகு பகவானை அடையலாம் என்று தான் காத்திருப்பதாகப் எம்பெருமான் நினைத்துவிட்டான் போலும்! ஆனால் என்னால் அதுவரை பொறுத்திருக்க முடியாது; சென்ற பதிகங்களில் அனுபவித்த பெரியபெருமாளே திருவேங்கடமுடையானாக, சம்சார பந்தம் அறுத்துக் கொடுப்பதற்கும், கைங்கர்யம் கொள்ளுகைக்கும், திருமலையில் நிற்கிறார் என்று அவர் திருவடிகளில் விழுந்து விரோதியில் அருசியும், கைங்கர்யத்தில் ருசியும் பிறக்க, இப்போதே திருவேங்கடத்தில் ஏதேனும் ஒரு பிறவி எடுத்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும்” என்று தன்னுடைய ஆழ்ந்த பக்தியையும் அவசரத்தையும் இந்த பதிகத்தில் தெரிவிக்கிறார்.

இதற்கு கீழ்க்கண்ட மேற்கோள்கள் சொல்லப்பட்டு உள்ளன.

  1. மந்திபாய் வட வேங்கட மாமாலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் ‘ (அமலனாதிபிரான் 3), அதாவது, குரங்குகளானவை (ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு) தாவும், வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே நிதியசூரிகள் பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய் திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் என்ற போக்யமான படுக்கையை உடையனான அழகிய மணவாளன்
  2. ஒன்றி யாக்கை புகாமல் உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம்‘ (திருவாய் மொழி 9.3.8) அதாவது, (ஆத்மா) சரீரத்தோடே சரீரமாகக் கலந்து போகாதபடி உஜ்ஜீவனப்படுத்தும் எம்பெருமான், (அடியார்களை எதிர்பார்த்து) நிற்கிற திருவேங்கடம்

இனி இந்த பாடலை பார்க்கலாம்.

(நப்பின்னை பிராட்டியை மணம் புரிவதற்காக) பலம் பொருந்திய ஏழு எருதுகளையும் ஜெயித்த எம்பெருமானுக்கு அடிமை செய்வதையே விரும்புதல் அல்லால் (நாளுக்கு நாள்) மாமிசம் அதிகரிப்பதாகிற செல்வத்தை உடைய இம்மானிட பிறவியை நான் விரும்ப மாட்டேன். வளைந்து இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்னியத்தை இடது திருக்கையில் உடையவண்ணன் எம்பெருமானுடைய வேங்கடத்து புஷ்கரிணியில் வாழும் நாரையாகவது பிறக்கக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஜடப்பொருள் எது, ஆத்மா (புருஷர்) எது என்று பகுத்தறியும் தகுதியும் அறிவும் கொண்ட மனிதப் பிறவியாக இருந்தாலும், அந்த மனிதப் பிறவியிலும் மற்றவர்களைக் காக்கும் பொறுப்பும் அதிகாரமும் உடைய அரச குலப் பிறப்பு எனக்கு வேண்டாம்; பகவானுக்குத் தொண்டு செய்வதற்கு ஏற்ற எளிய இடமாகத் திகழும் திருவேங்கடத்தில், ஒரு நாரையாக பிறந்தாலே எனக்குப் போதும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

நாள் செல்லச் செல்ல சரீரம் தடித்து ஆத்மா அத்தனை அளவு இளைக்கும், அதனால் சரீரத்திற்கு குற்றம், அதனால் அதனை வேண்டாம் என்கிறார். அணுவாய் நித்யமாய் இருக்கிற ஆத்மா இளைக்குமோ என்றால் இல்லை, என்று சொல்லி, உடலோடு கூடிய பிறவி என்பது ஆத்மாவின் இயல்பான அறிவைச் சுருங்கச் செய்வது. மேலும், உலக விஷயங்களில் மனத்தைச் செலுத்தி அறிவுச் சுருக்கத்தை மேலும் உண்டாக்கக் கூடியது. அதனால் தான் அப்படிபட்ட உடலை “வேண்டேன்” என்கிறார்.

தண்டனைக்காகத் தலை வெட்டப்பட இருக்கும் குற்றவாளிகளுக்குச் சந்தனம் பூசி அலங்கரித்து அழைத்துச் செல்வதைப் போல, சம்சாரத்தின் ஆழமான துன்பத்தை அறியாத ஒருவன்தான் இந்த உடற்பிறவியை விரும்ப வேண்டும். நன்மை, தீமை எனப் பகுத்தறியும் விவேக ஞானம் பெற்ற நான் அந்தப் பிறவியை விரும்பவில்லை.

உடலின் இழிநிலையையும், ஆத்மாவின் தனித்துவமான சிறப்பையும், ஆத்மா எம்பெருமானுக்கே உரிமையானது என்ற உண்மையையும், எம்பெருமானே தனக்கு உணர்த்த அறிந்து கொண்ட நான், அந்த உடற்பிறவியை நிச்சயமாக வேண்டாம் என்கிறேன்.

அடிமைத்திறம் அல்லால் என்று ஆழ்வார் வேண்டுவதற்கு, லக்ஷ்மணன் ஸ்ரீராமனிடம் சொல்லும் கீழ்கண்ட இராமயண ஸ்லோகம் மேற்கோள் காட்டப்படுகிறது.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே * அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச தே – (அயோத்யா 31 – 25.)

இருப்பினும், நீங்கள் வைதேகியுடன் மலைச் சரிவுகளை ரசிப்பீர்கள். நீங்கள் விழித்திருந்தாலும் சரி, உறங்கினாலும் சரி, நான் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வேன்.

கூனேறு சங்கமிடத்தான் என்பதற்கு கைங்கர்ய ருசி உடையாரை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன் என்கிறார்.

ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் என்று சொல்வதைப் போல பகவத் அனுபவச் செருக்காலே இளைய பெருமாளை (லக்ஷ்மணனை) போல காட்சிக்கு நோக்காய் இருக்கிற பாஞ்ச ஜன்ய ஆழ்வான் என்கிறார்.

இத்யேவமுக்தோ மாத்ரேதம் ராமோ ப்ராதரமப்ரவீத் * ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ (அயோத்யா 4.42) அதாவது, தாயால் இம்மாதிரி சொல்லப்பட்ட ராமன், கைகூப்பி வணங்கி இருந்த தம்பியாகிய லக்ஷ்மணனைப் பார்த்து, புன்சிரிப்புடன் பின்வருமாறு சொன்னார்.

வலது கையில் திருவாழி ஆழ்வானை பார்த்து வலக்கை ஆழி (திருவாய்மொழி 6.4.9) என்கிறார்.

திருமார்பில் பிராட்டியைக் கண்டபின், “நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை” (திருபல்லாண்டு 2) என்கிறார்.

அடிமை கொள்வதற்குப் பாங்கான தேஸம் ஆகையாலே அவன் விரும்பின திருமலையில் என்கிறார்.

பரமபதத்தில் அல்லது ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள விரஜா நதியின் கரையில் முக்தர்கள் அமானவர் என்ற பரமபத அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் இன்பமாக உலாவிக் கொண்டிருப்பது போல திருக்கோனேரியைப் பற்றி வசிக்கும் குருகாய் பிறப்பேன் என்கிறார். புண்ணிய சரீரமான ஷத்திரிய உடல் வேண்டாம் என்கிறார்.

திருவேங்கடத்தில் வசிப்பதே கைங்கர்யத்திற்கு எல்லை என்கிறார்.

நாரைகளுக்கு சிறகுகள் இருப்பதால், அவை திருவேங்கடத்தை விட்டு பறந்து செல்லக்கூடும். ஆதலால், திருவேங்கடத்தில் மீனாய்ப் பிறக்க, ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் (2) வேண்டுகிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply