ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ * வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் * தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் * மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
பெருமாள் திருமொழி 4.2
அழியாத (இளமையாகிற) சொத்தினை ரம்பை முதலிய தேவலோக பெண்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, ஸ்வர்கத்தை ஆளுகையாகிற செல்வத்தையும் இந்த பூமியை அரசாளுவதையும் நான் விரும்ப மாட்டேன். தேன் மிகவும் உள்ள பூக்களுடன் கூடிய சோலைகளை உடைய திருவேங்கடமலையில் உள்ள சுனையில் மீனாகவாவது பிறக்கும் பாக்கியத்தை உடையவனாகக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த பூமியில் அனுபவிக்கும் இன்பங்களைப் போல அளவற்றதாக, முடிவுக்கு வராமல், ஸ்வர்க்கத்தில் உள்ள இன்பங்கள் நிலையானதாகத் தோன்றினாலும் அல்லது கருதபட்டாலும், பூமியில் உள்ள போகங்களும் சேர்த்து கிடைத்தாலும் அவை வேண்டாம் என்கிறார். இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, சொர்க்கத்தில் புண்ணியம் தீரும் வரைதான் இன்பம் நிலைக்கும் என்பது வைணவ கருத்து.
அழியாத இளமையை உடைய அப்ஸரஸ்ஸுகள் சூழ, இவன், தான் தப்ப நினைத்தாலும், தப்ப முடியாதபடி, அவர்கள் மேல் விழும் வண்ணம் ஸ்வர்க்காதிகள் அனுபவிக்கும் சொத்துக்களுடன், கடந்த காலங்களில் அனுபவித்த ராஜ்ய செல்வமும் சேர்ந்தாலும், இவை, தாம் நினைத்த புருஷார்த்தம் இல்லாததால், வேண்டாம் என்கிறார்.
தேன் மிக்குள்ள பொழில் என்றும், வண்டுகள் மிக்க பொழில் என்றும் பொழில் சூழப்பட்டு இருக்கிற திருமலையின் சுனைகளில் என்கிறார். நாரைகளுக்கு சிறகுகள் இருப்பதால், அவை திருவேங்கடத்தை விட்டு பறந்து செல்லக்கூடும். ஆதலால், திருவேங்கடத்தில் மீனாய்ப் பிறக்க வேண்டுகிறார்.
மீன் நீரிலே இருக்க வேண்டியது, அதனால் கோவிலுக்கு சென்று பகவானுக்கு சேவை செய்ய முடியாது என்றும், அதேபோல் நீர் வற்றிவிட்டாலும் திருமலையில் வாழ்வது முடியாது என்றும் உணர்ந்து, பெருமாள் வாய்நீர் உமிழும் பாத்திரத்தை (பொற்காளாஞ்சி) ஏந்திச் செல்லும் சாதாரணமான தொண்டனாக வேண்டும் என்று மூன்றாம் பாசுரத்தில் விரும்புகிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply