திவ்ய பிரபந்தம்

Home

PT 2.1 தேட்டரும்

தேட்டரும் திறல் தேனினைத் தென்னரங்கனைத் திரு மாது வாழ் * வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் * ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள் தம் * ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே

பெருமாள் திருமொழி 2.1

வேதமறிந்தவர்கள் இந்த சரணாகதியை ஆறு வகைப்பட்டதாகச் சொல்லுகின்றனர். அவையாவன:

  • பகவத், பாகவத விஷயத்தில் அனுகூலனாக இருப்பதாக ஸங்கல்பித்துக் கொள்வது
  • அவர்களுக்கு பிரதிகூலமாயிருப்பவற்றை விடுவது,
  • உடையவன் உடைமையைக் காப்பாற்றுவான்’ என்னும் நம்பிக்கை
  • நீ என்னை ரக்ஷிக்கவேண்டும் என்று எம்பெருமானை வேண்டுவது
  • தன்னுடைய ஆத்மாவை அவனிடத்திலே வைப்பது,
  • தன்னிடம் ஒரு ப்ரவருத்தியும் இல்லாமல் இருப்பது என்று ஆறுவிதமான ஸ்வபாவங்களுடன் கூடியது சரணாகதி

இதில் முதல் இரண்டு விஷயங்கள் :

ஆநூகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம்

பகவத் விஷயத்தில் அனுகூலனாக இருப்பதில், அது பூரணமாக உள்ளதால், இவனுக்கு அனுகூல்யம் செய்வதற்கு வழி இல்லை; மேலும், அவர்கள் திருமஞ்சனம் செய்யும் போது, செய்து கொள்வதும், அமுது செய்யும் போது, அமுது செய்தும், மீதி நேரங்களில் பட்டினி கிடந்தும், அவர்களுக்காக இவன் தன்னை அமைத்து கொள்வதும், இவனுக்கு கொஞ்சம் கூட அனுகூல்யம் செய்வதற்கு வழி இல்லாமல் செய்கிறது.

கீழ் சொல்லும் மேற்கோள்கள் மூலம், பாகவதனுக்கு அனுகூல்யம் செய்வது அவனுக்கே செய்வது போல ஆகும் என்கிறார்.

உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞா த்வாத்மைவ மே மதம் (கீதை, 7.18)

‘ஆர்த்தன், ஜி ஞாஸு, அர்த்தார்தி, ஞானி என்னும் இந் நால்வருமே உதாரர்கள். ஆனால் ஞானியோ என்றால் எனக்கு ஆத்மா என்பது என் கருத்து. ஏனெனில் ஞானி என்னுடன் கூடியிருப்பதையே மேலான பயனாக எண்ணியிருப்பவன். ஞானியினால் என்னை விட்டுப் பிரிந்து ஒரு க்ஷணமும் தரித்திருக்க முடிகிறதில்லை. ஆதலால் நானும் அந்த ஞானியை விட்டு ஒரு க்ஷணமும் பிரிந்திருக்க சக்தன் அல்லேன். ஞானியே எனக்கு ஆத்மா என் ஆத்ம ஸ்தானத்திள் இருப்பவன்.’ என்று கண்ணன் சொல்கிறான்.

மம ப்ராணா ஹி பாண்டவா : II (பாரதம் – உத்யோ 74- 27)
அதாவது, பாண்டவர்கள் எனக்கு ப்ராணன் என்று கண்ணன் சொல்கிறான்.

பத்தர் ஆவியை (பெரிய திருமொழி 10.1.8)ல் திருமங்கை ஆழ்வாரும் பக்தர்களுக்கு ஆத்மாவாகவுள்ளவனை என்று கூறுகிறார்.

பகவத் விஷயத்தில் பிறந்த அனுகூல்யம் பற்றி முன்பு சொன்னார், இந்த திருமொழியில் பாகவத விஷயத்தில் பிறந்த அனுகூல்ய சங்கல்பம் பற்றி கூறுகிறார்.

(தன்னுடைய முயற்சியால்) தேடி அடைவதற்கு அருமையானவனும் தன்னை அனுபவிக்கைக்குத் தகுந்த பலத்தை கொடுப்பவனும் தேன் போல பரம போக்கியனும் திருவரங்கத்தில் நித்ய வாசம் செய்பவனும் பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்வதற்கு உகந்ததாய் எப்போதும் செவ்வி மாறாது அழகு பெற்று இருக்கிற திருமாலையை அணிந்துள்ள திரு மார்பை உடையவனுமான பெருமானை, (அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு குறைவு வாராதபடி) மங்களா சாசனம் செய்து, அவன் மேல் அன்பு கொண்ட மனதை உடையவராய் (அதனால்) ஆடுவதிலே ஈடுபட்டு (ஆடலின் மிகுதியால்) வருந்தி, (வாய் படைத்த பயன் பெற பகவத் நாமங்களை) சொல்லி மெய் மறந்து இருக்கும் அனன்யபிரயோஜனரான அடியார்களின் குழாங்களை காணப் பெறுவோமாகில் அதுவே கண் இருப்பதன் பரோயோஜனம் அன்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தேட்டரும் திறல் தேனினைத் தென்னரங்கனைத் திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை என்பது பகவத் குணங்களை பேசுவது போல இருந்தாலும், வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் என்று சொல்லியது பாகவத விஷயத்தை சொல்லியதால் மொத்த விஷயமும் பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் செய்யும் பாகவதர்களை பற்றியது விளங்கும்.

நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாநவைராக்யராஸயே 1
நாதாய முநயே காதபகவத்பக்திஸிந்தவே ||
(ஸ்தோ-ரத்னம் 1)

(இப்படிப்பட்டதென்று)நினைக்கமுடியாததும், ஆச்சர்யமானதும், (பகவானுடைய அருளாலே) எளிதாகக் கிடைத்ததுமான ஞானத்தினுடனும் , வைராக்யத்தினுடனும், குவியல் போன்றவராகவும், பகவானை மனனம் செய்பவராகவும், ஆழ்ந்த
பகவத் பக்திக்குக் கடலாகவுமிருக்கிற நாதமுனிகளுக்கு நமஸ்காரம் என்பது மேல் ஸ்லோகத்தின் அர்த்தம். அதாவது, பாகவதனை (ஆச்சாரியனை) துதிக்கும் போது அவரை பகவத் பக்தியில் ஞானத்துடன், வைராக்கியத்துடன் இருக்குமவர் என்று பகவத் பக்தியை பிரதானமாகக் கொள்கிறார்.

‘வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ” (திருபல்லாண்டு 2) என்கிறபடியே அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு இங்கு மங்களாசாஸநம் செய்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply