பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை, * முன்னை அமரர் முதல் தனி வித்தினை, * என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட * மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் * மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்
‘எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’ என்று சொல்லும் வண்ணம், திருஅவதாரம் தொடங்கி எல்லா அனுபவங்களையும் அனுபவித்த யசோதை மஞ்சனமாட வாராய், என்று அவனை அழைத்து, கஷ்டப்பட்டு அவனை நீராட வைத்து, இப்போது அவன் குழல் வார அழைக்கிறார். அதற்கும் அவன் மறுக்க, பாசத்துடனும் மிரட்டியும் அவனை குழல் வார நிற்க வைக்கும் பாடல்களை இந்த பதிகத்தில் யசோதா பாடுவதாக பெரியாழ்வார் பாடுகிறார்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.1
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய், திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசத்தில் பள்ளி கொண்டு அருளியவனாய், நித்ய சூரிகளுக்கு தலைவனாய், தனித்தன்மையான காரணபூதனாய், என்னையும், ஏழு தலைமுறை பழிப்பிலாத எங்கள் குடியில் உள்ள எல்லோரையும் அடிமை கொண்ட ராஜாவானவனை அருகே வந்து குழல் வார வருவாய், ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு பதியானவனுக்கு அருகே வந்து குழல் வார வாராய், என்பது இந்த பாடலின் பொழிப்புரை. ‘உற்றன பேசி நீ ஓடித் திரியாதே’ என்றும் ‘பிண்டத் திரளையும், பேய்க்கு இட்ட நீர்சோறு முண்டர்க்கு வேண்டி நீ ஓடி திரியாதே’ என்று சொல்வதால் இவை காகத்தை நோக்கி சொல்லும் பாசுரங்களாக கொள்ளலாம்.
‘ ஏழாட் காலும் பழிப்பிலோம் ‘ என்று திருப்பல்லாண்டில் (1.1.3 ) சொன்னது. மேன்மைக்கு மாதவன் என்று ஸ்ரீயப்பதியை சொன்னது; நீர்மைக்கு அல்லது எளிமைக்கு நப்பின்னை வல்லபன் என்று சொன்னது; திருப்பேர் நகரில் கிடந்தது முன் சொன்ன எளிமைக்கு இன்னொரு படி மேல் ஆகும். ‘கொம்பினார் பின்னை கோலம் கூடுவதற்கு ஏறு கொன்றான்; தென் திருப்பேரில் மேவும் எம்பிரான்‘ (பெரிய திருமொழி 5.9.8) என்பதால் இது அர்ச்சாவதார எளிமை ; நற்பின்னைக்கு மணாளன் ஆகி, பின்பு அவளோடு வந்து திருப்பேர்நகரில் கண் வளர்ந்து அருளினான் போலும் என்று உரையாசிரியர் கூறுகிறார். நித்ய சூரிகளை பற்றி சொன்னது, முன்பு சொன்ன எளிமைக்கு எதிரானா மேன்மையை சொல்கிறது.
நப்பின்னை பிராட்டியின் நாயகனும் திருப்பேர்நகரில் பள்ளி கொண்டு இருப்பவனும் நித்யசூரிகளின் சத்தைக்கு ஒப்பற்ற காரணமாக இருப்பவனும், எங்கள் குடியில் உள்ள எல்லோரையும் அடிமை கொண்ட கண்ணனுக்கு நீ வந்து கூந்தல் முடிவாய் என்றும் மாதவனுக்கு குழல் வருவாய் என்றும் யசோதை காக்காயை அழைக்கும் பாடல்.
Leave a comment