வாழாட்பட்டு நின்று உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின், * கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம், * ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை, * பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
பெரியாழ்வார் திருமொழி 1.1.3
திருபல்லாண்டு 3
கைங்கர்யமாகிற போகத்துக்கு பொருந்தி, நிலை நின்றவர்களாய், இருப்பீர்களானால் விரைவாக வந்து (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமக்கையும் (அந்த கல்யாணதிற்கு) அபிமானிகளாய் இருப்பதும் ஸ்வீகரியுங்கள்; சூதிருக்காக, பிறர்க்கு அடிமைப்பட்டு (எங்கும் பரந்து) நிற்கும் உங்கள், (அநன்யபிரயோஜனரான) எங்களுடைய கோட்டத்திலே சேர விட மாட்டோம்; நாங்கள், முன்னேழ், பின்னேழ், நடுவேழ் ஆகிய இருபத்தொரு தலைமுறைகளிலும் (ஓரு விதமான) குற்றமும் இல்லாதவர்கள்; (இராவணன் முதலான) ராக்ஷசர்கள் வாழ்ந்து வந்த லங்கையானது பாழடைந்த ஆட்களை உடையதாகும்படி யுத்தத்திலே அன்று சண்டை செய்து அருளிய எம்பெருமானுக்கு இன்று திருபல்லாண்டு பாடுபவர்களாய் இருக்கிறோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முதல் இரண்டு பாடல்களால் திருபல்லாண்டு பாடினார்; இனி தங்களுடைய மங்களாசாசனத்தால் திருப்தி அடையாமல், கீதையில் எம்பெருமான் அருளிய ‘சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ ர்ஜுரு | * ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷபII‘ (கீதை 7-16) என்ற ஸ்லோகத்தின்படி நான்குவித ஸம்ஸாரிகளை, (இழந்த செல்வத்தை அடைய விரும்புவர், புதிய செல்வத்தை அடைய விரும்புவர்கள், ஆத்மாபிராப்தியை விரும்புபவர் மற்றும் பகவானை அடைய விரும்புபவர்கள்), மூன்று வகையினாராகப் பிரித்து, ஐஸ்வர்ய, கைவல்யம் பகவத் லாபார்த்தி என்ற மூன்று வகையானோர்களைக் அழைத்து மங்களாசாசனம் செய்கிறார்.
இந்த பாடலில் பகவத் லாபார்த்திகளை அழைக்கிறார். இதனை எல்லோரும் புசிக்க வேண்டும் என்பதால் அழைக்கிறார் என்றும், அவர்களோடு தாமும் சேர்ந்து மங்களாசாசனம் செய்வது தனக்கும் தாரகம் என்பதால் அழைக்கிறார் என்றும் சொல்கிறார். ‘அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்று கொலோ இருக்கு நாளே’ (பெருமாள் திருமொழி 1.10) என்ற பாடலும், ‘கூடுவதென்றுகொலோ, துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழி சங்கேந்தி, அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே‘ (திருவாய்மொழி 2.3.10) என்ற பாடலும் குறிப்பிட்டு அடியார் குழாங்களை கூடுவது என்று கொலோ என்று இருப்பவர்கள் என்கிறார்.
உள்ளீரேல் என்று சொல்வது, வாசுதேவனே எனக்கு எல்லாம் என்று இருக்கிற சம்சாரி அரிது என்கிறார். கீதையில் (7.19) ‘ப நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞாந வார் மாம் ப்ரபத்யதே * வாஸுதேவஸ் ஸர்வ மிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப :’ (பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானி யானவன், “வாஸுதேவனே (எனக்கு) எல்லாம், என்று என்னை வழிபடுபவன். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தது அரியவன் என்பது ஓரு மேற்கோள். இன்னொன்று இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், பிரம்மாஸ்திரத்தினால் அனைவரும் கட்டப்பட்டு மயங்கி விழுந்து இருப்பதைக் கண்ட விபிஷணனும் ஹனுமானும், பிராணன் உடையவர் யாரேனும் உண்டோ என்று தேடியதைப் போல ஸம்ஸாரத்தில், ஸ்வரூப ஞானம் உடையவர்கள் இருப்பது அரிதாக உள்ளது என்று சொல்கிறார். இதில் ‘ரேல்’ என்ற விகுதி, ஸம்ஸாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபமாக உள்ளது என்கிறார்.
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக என்பதை பார்ப்போம். துர் வர்க்கம் களித்து வாழ்ந்த தேசம் என்றது. புறம்பே சென்று, மற்றவர்களை துன்புறுத்தி, குளவி கூடு போல, கடலையும் மதிள்களையும் அரணாக்கி கூத்தடித்த தேசம் என்றது. ராவணனையும் அவனுக்கு துணையான ராக்ஷஸர்களையும் அழித்தது. இராமாயணம் யுத்த காண்டம் (36.11)ல் குறிப்பிட்ட த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயந்து கஸ்யசித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவோ தூரதிக்ரம்:|| (இரண்டாகப் பிளந்து போவேனே ஓழிய, இம்மாதிரி ஒருவனுக்கு வணங்க மாட்டேன். இது எனக்கு இயற்கையில் ஏற்பட்ட தோஷம். ஸ்வபாவம் தாண்ட முடியாத தன்றே.) இதே போல, பிராட்டி அருளிச் செய்த வார்த்தைகளான (சுந்தர காண்டம் 26.24) ‘சிதாதூமா குலபதா க்ருத்ர மண்டல ஸங்குலா * அசிரேண து லங்கேயம் மாந ஸத்ரு ஸீபவேத் ‘ [சிதைகளின் புகையினால் கலங்கின மார்க்கங்களை உடையதும், கழுகுக் கூட்டங்களினால் கலங்கினதுமான இந்த லங்கை வெகு சீக்கிரம் சுடுகாட்டைப் போல்ஆகும்.] நினைவில் கொள்ளலாம்.
பல்லாண்டு கூறுதுமே யுத்தம் நடக்கும்போது, வில்லும் கையுமாய் சீறி சிவந்து எதிரிகளை கொல்லும் போது உள்ள வடிவழகுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள். தாம்ஸ்து தே ஹம் ப்ரவக்ஷ்யாமி ப்ரேக்ஷமாணஸ்ய யூதபார் * ராகவார்த்தே பராக்ராந்தா யே ந ரக்ஷந்தி ஜீவிதம் (யுத்த காண்டம் 27,1) அதாவது, எவர்கள் ராகவனுக்காகத் தம் சக்தியைக் காட்ட நினைத்து, பிராணனையும் ரக்ஷித்துக் கொள்ள மாட்டார்களோ, அந்த ஸேநாபதிகளைப் பார்க்கிற உமக்கு நான் எடுத்துச்சொல்லுகிறேன் என்று இராவணனிடம் சொன்னபோது, அந்த நாளில் மங்களாசாசனம் செய்யவாரில்லை. பிராட்டி பிரிந்த போதே, நம் குடி இருப்பை பெற்றோம் என்று பிரம்மாதிகள் பிரீதி அடைந்தார்கள். அக்காலத்தில் இருந்து மங்களாசாசனம் செய்யாத குறை தீர இன்று இருந்து மங்களாசாசனம் செய்கிறோம் என்கிறார்.
எம்பெருமானுடைய அநுபவத்தையே விரும்புகின்ற பகவன் லாபார்த்திகளை, ஆழ்வார் மங்களாசாஸனத்துக்கு, “வாழாட்பட்டு நின்றீர்’’ என்று கூறி எம்பெருமானுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டு உள்ள அவர்களை முதலில் அழைக்கிறார். சோற்றுக்காக மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்து பிழைப்பவர்களை இந்த குழுவில் ஆழ்வார் சேர்க்க வில்லை என்பது தெரிகிறது. ஆண்டு ஆண்டு காலமாக எம்பெருமானையே உபாயமாகவும் அவரையே அடையும் நோக்காகவும் கொண்டு வாழ்வதாகவும், ஏழு தலைமுறைகளாக எந்த குற்றமும் இல்லாமல் வாழ்கிறோம் என்றும், என்றைக்கோ எம்பெருமான் செய்து அருளின ராவண வதத்தை போற்றி இன்று மங்களாசாசனம் செய்வதாகவும் சொல்கிறார்.
Leave a comment