பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம், * மாயச் சகடும் மருதும் இறுத்தவன், * காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல், * தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் * தூமணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.2
இந்த சிறு பிள்ளை ஆனவன், முன்பு, பூதனையின் முலைப்பாலை அமுது செய்த பிள்ளை; வஞ்சகமாக வந்த சகடத்தையும், யமளார்ஜுனங்கள் ஆகிற இரட்டை மருத மரங்களையும் முறித்து போட்டவன்; காயாம் பூ போன்ற திரு நிறத்தை உடையவன்; (இப்படி உள்ள) கண்ணனுடைய கறுத்த திருக்குழலை நன்றாக வார வாராய் காக்காய்; பழிப்பற்ற நீலமணி போன்ற திரு நிறத்தை உடையவனுடைய திருகுழலை வார வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பூதனையை, தாய் முலை உண்ணுவதை போல் இருந்து உண்ட முக்தன் இவன்; பிரதிகூலித்து வந்த பூதனை முடிந்த கதை அது; ஆத்ம குணங்கள் நிறைந்து இருந்த, அப்போது அலர்ந்த காயாம் பூ போல் இருந்த கண்ணன், யமளார்ஜுனார்களை மடித்தது அனுகூலர்களை விடிவித்த வடிவழகு என்கிறார். இதன் மூலம் கண்ணனின் சௌலப்யம் சொல்லப்பட்டது. காயாம் பூ போல காலத்திற்கு ஏற்ப மாறாமல் எப்போதும் நிறம் மாறாமல் இருக்கும் நீல மணி போல வடிவழகு படைத்தவன் என்கிறார்.
தலையிற் சிக்குப்படாமல் மழமழவென்றிருக்கும்படி, “குழல்வாராய்” என்று சொல்கிறார். பூதனை, சகடாசுரன், யமளார்ஜுனர்கள், சரித்திரங்களை சொல்லி, காய மலர் கண்ணன் என்று புகழ்கிறார்.
Leave a comment