திவ்ய பிரபந்தம்

Home

PT 5.5 வெங்கண் திண்களிறு

வெங்கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டம்மானே * எங்குப் போய் உய்கேன் உன் இனி இணையடியே அடைய லல்லால் * எங்கும் போய்க் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும் * வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

பெருமாள் திருமொழி 5.5

பயங்கரமான கண்ணையும் வலிய நெஞ்சையும் உடைய (குவாலயா பீடம் என்னும்) யானையை கொன்றவனே ! வித்துவகோட்டு அம்மானே, உன் இரு திருவடிகளையே சரணம் அடைவது அல்லால் வேறு யாரிடத்தில் போய் உஜ்ஜீவிப்பேன் ? அலைகள் வீசும்படியான கடல் நடுவில் நான்கு திக்குகளிலும் சென்று கரையைக் காணாமல் திரும்பி வந்து அங்குள்ள கப்பலினுடைய கொடி மரத்தின் மீது இருக்கும் பெரிய பறவையை ஒத்து இருந்தேன்.

வலிமையான குவலயாபீடத்தை கொன்றவனே, உயர்ந்த கைங்கரியப் பலனிலும் அன்பிலும் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்தத் தடைகளை எல்லாம் நீக்கி அருள வல்ல தேவரீர் இருக்க, “தடைகள் இருக்கின்றன” என்று சொல்லிக்கொண்டு அந்தத் தடைகள் நீங்காமல் இருப்பது பொருந்துமா? நீ இருக்கும்போது தடைகள் நிற்கலாமா?

தடைகளை அவதார காலத்தில் நீக்கினீர்கள்; பிற்பாடர் இழக்காதபடி, திருவித்துவக்கோட்டில் வந்து தங்கியவனே, பரமபதம் நித்திய விபூதியாக, இயல்பான இடமாக இருக்கிறது. எம்பெருமானுக்கு ஆன்மாக்கள் மீதுள்ள ஆளுமையை வெளிப்படுத்த அல்லவோ இந்த லீலா விபூதியில் உள்ள திவ்யதேசங்களில் எழுந்தருளி இருப்பது என்கிறார்.

வித்துவக்கோட்டு அம்மானே உன்னை விட்டு, பரமபதத்தில் விரும்பிய அனைத்தையும் அல்லது எல்லா நலன்களையும் ஏற்கனவே பெற்று நிறைந்திருப்பவனையா, எங்கு போய் உய்வேன் என்று கேட்பேன் என்கிறார். போகும் இடம் வேறு இல்லை; அழிந்து போவது என்றால், நிறைய வழிகள் உள்ளன. திவ்ய தேசங்களை விட்டு மற்ற தெய்வங்களை பற்றுவதும் அழிந்து போகிற வழியில் ஒன்று என்கிறார். உன் திருவடிகளை பற்றுவது அவசியமாகிறது என்கிறார்.

மிகவும் கொந்தளித்த நிலையை உடைய நடுக்கடலில் ஒரு படகு, அதன் கொம்பில் உள்ள ஒரு பறவை, நான்கு திசைகளிலும் போக்கிடம் தேடிப் பறந்தாலும் கரையை காண முடியாதே; மீண்டும் வந்து கால் பதிப்பது இந்த மரக்கலத்திலே தானே; சுற்றும் அலைகளை தூக்கி எறிந்து கொண்டுஇருக்கிற கடலில் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து, தான் இருந்த இடமான கப்பலுக்கே, திரும்பி வரும் பெரிய பறவைப் போன்று, தானும் வித்துவக்கோட்டு அம்மானின் பாதங்களில் சரண் அடைவதாக ஆழ்வார் தெரிவிக்கின்றார். அப்படியே சம்சார சாகரத்தை கடப்பதற்கு உகந்து அருளின தேசமான திருவித்துவக்கோட்டைப் பற்றி கடக்கலாமே ஒழிய, வேறு ஒரு உபாயம் இல்லை என்கிறார்.

மா பறவை, தான் உயர ஏறிச் சென்று பார்த்த, பரந்து விரிந்த அளவு, நீரில் முழ்குவது போல தோன்றுவது என்று சொன்னது, எம்பெருமான், ஸம்ஸாரக் கடலில் நம்மை அழுத்தி நன்றாக மூழ்க செய்வது போல தோன்றுவதைக் குறிக்கும். இனி செய்ய வேண்டியது என்று ஆழ்வார் சொல்வது, எம்பெருமான் மேல் உள்ள பற்றை விட்டு விலகாமல், பிடித்த அடி மட்டையை, இன்னும் இறுகப் பற்றுவது போல பற்ற வேண்டும் என்பதாகும்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply