திவ்ய பிரபந்தம்

Home

PT 5.4 வாளால் அறுத்து

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் * மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் * மீளாத் துயர் தரினும் விற்றுவக்கோட்டம்மா நீ * ஆளா(க) உனதருளே பார்ப்பன் அடியேனே

பெருமாள் திருமொழி 5.4

வித்துவக்கோட்டம்மா, கத்தியாலே அறுப்பதும் சூடு போடுவதும் செய்தாலும் வைத்தியனிடத்தில் நீங்காத அன்பை உடைய நோயாளியைப் போல நீ (உன்) மாயையினால் (எனக்கு) நீங்காத துன்பத்தைத் தந்தாலும் உன் அடிமையான நான் உனக்கு அடிமை செய்கைக்காக உன் கிருபையையே நோக்கி இருப்பேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘எம்பெருமான் ஒருவனாலே நமக்கு ஹிதம்’ என்றும் ‘பலன் அளிப்பதில் தொடர்பு அவன் ஒருவருக்கே’ என்றும் மனதில் நிச்சயம் செய்தால், நமக்கு நன்மையும் பலன்களையும் தருபவன் எம்பெருமான் ஒருவனே; நமக்கு துன்பங்கள் மற்றும் தீமைகள் போன்றவற்றை எம்பெருமான் செய்கிறான் என்று வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் அவனே நம்மை காப்பவன்; அவனை பற்றிக் கொண்டு இருப்பதே ஆன்மாவின் கடமையாகவும் இயல்பாகவும் இருக்க வேண்டும்.

தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்திற்கு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் கிடைக்கப் போகும் பெரும் பேற்றில் குறை இல்லை என்றால் இந்த சங்கடங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், அதுவே மஹா விஸ்வாஸம் ஆகிறது என்றும் சொல்கிறார்.

துன்பம் கொடுக்கும் சாதனத்தைக் கொண்டு அறுப்பது, சுடுவது போன்றவற்றை மேலும் மேலும் செய்தாலும், இவன் நமக்கு நலனைக் கொடுக்குமவன், என்று அவனுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து அந்த மருத்துவனிடம் ஸ்னேகம் செய்யும் வியாதியாளர் போல் இருக்க வேண்டும் என்கிறார்.

மம மாயா (பகவத் கீதை 7.14) என்னும்படியான உன்னுடைய பிரகிருதி சம்பந்தத்தாலே இந்தச் சம்சார உலகிற்குத் திரும்பி திரும்பி பிறக்கும் சுழலில் துக்கத்தை விளைவித்தாலும், ஸம்ஸாரத்தில் என்னுடைய பாதுகாப்பிற்காக இங்கே வந்து வாசம் செய்யும் நீ தினமும் துக்கத்தை விளைவித்தாலும், பெற்ற தாய் பிள்ளைக்கு துன்பம் கொடுப்பதைப் போன்றது நீ செய்வது என்கிறார்.

என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவனாகையாலே, இப்போது தோன்றுகின்ற துன்பங்களை பொருட்படுத்தாமல் உன் கிருபையையே எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்.

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தாநம் பரீப்ஸதா * வதம் சாஸ நிச்சதா கோரம் த்வயாஸ் ஸௌ புருஷர்ஷப: II சுந்தர காண்டம் (21-20).

(ராவண!) நீ உன்னுடைய குடியிருப்பை விரும்பினால், கோரமான வதத்தை விரும்பாமல் இருந்தால், இந்த புருஷ ச்ரேஷ்டரான ஸ்ரீராமபிரானை நண்பனாகக் கொள்வது தகுந்தது

அன்று யுத்த களத்திலே இராவணன் இராமபிரானைக் கண்டது போலவே, இப்போதும் அவன் கையில் வில்லும் அம்புமாகவே காட்சியளிப்பான். தன் மீது கொண்ட அன்பினால், நேரில் காட்சி தருவதற்காக முன்னே வந்து நிற்பான். அளவற்ற பெரும் தவறுகளைச் செய்த எனக்குப் பெருமாள் கருணை காட்டுவாரோ என்ற அச்சமும் தயக்கமும் ஏற்படுகிறது. அந்தத் தயக்கத்தைப் போக்கும் விதமாக, “நீ மனமாறி, அவனுக்கு அனுகூலனாய், நல்ல எண்ணத்தோடு, ஓரடி எடுத்து வைத்து அவன் முன்னே வந்து நின்றால் போதும்; நீ இதுவரை செய்த தீங்குகளையெல்லாம் அவன் மனதில் வைத்துக் கொள்ள மாட்டான். ஏனெனில் அவன் புருஷோத்தமன் எல்லா குணங்களிலும் உத்தமன்.”

‘முன்பூழி காணானைக் காணென்னும்” (முதல் திருவந்தாதி 72) என்று சொல்லியபடி ‘குற்றத்தை மறப்பது மட்டும் இன்றி, குற்றம் செய்த நாளையும் மறப்பான் ‘. இது பிராட்டி இராவணனுக்கு அருளிச் செய்தது, அதன் படியே ‘இனி நீங்கள் அல்லாமல் எனக்கு புகலில்லை’ என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply