திவ்ய பிரபந்தம்

Home

PT 5.3 மீன் நோக்கும்

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் விற்றுவக்கோட்டம்மா என் * பால் நோக்காய் ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன் * தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார்வேந்தன் * கோல் நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே

பெருமாள் திருமொழி 5.3

(கடலில் உள்ள) மீன்கள் (கடல் வற்றினாலும் நமக்கு புகலிடம் இதுவே என்று) நோக்கும்படியான பரந்த வயல்களால் சூழப்பட்ட வித்துவக்கோட்டு அம்மானே, அடியேன் மீது நீ அருள் நோக்கத்தை காட்ட விட்டாலும் உன்னை சரணாகப் பற்றுவதை விட்டு விட்டு வேறு ஒருவரையும் சரண் அடைய மாட்டேன்; (மக்களை காப்பாற்றுவதற்காக) மாலை அணிந்துள்ள அரசன், தானே குடிகளைக் காப்பாற்றாமல் எப்படிப் பட்ட துன்பங்களைச் செய்தாலும் அவனுடைய செங்கோலைப் பார்த்து வாழும் மக்களைப் போலவே இருந்தேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பரமபதத்தில் உள்ளவர்களும் அவனுடைய சீல குணம் தன்னை அனுபவிக்கும் தேசம் இது என்கிறார். பரமபதத்தில் உள்ள அனைத்தும் அந்த எம்பெருமானுக்கே உரியதாகவும், அவனாலேயே இயக்கப்படுவதாகவும் இருக்கும். அவற்றை கண்டு அனுபவிக்கலாம்படி உள்ள திவ்ய தேசம், இது என்கிறார்.

பரமபத நாடாக உள்ள இந்த தேசத்தில் என் ஒருவனை நோக்கி வந்து இருந்து, இப்போது உன் கருணை பார்வை என் மீது படாமல் இருந்தாலும், என்னை காப்பாற்றுவதில் முனைப்பாக இருக்கும் உன்னை விட்டு வேறு ஒருவரை பற்றுவேனோ என்கிறார்.

குடிமக்களுடைய பாதுகாப்பில் காப்பு கட்டி இருக்கிற ராஜாவானவன், பாதுகாப்பில் தவறவிட்டது மட்டும் இல்லாமல், எல்லா துக்கங்களையும் விளைவித்தாலும் அவனுடைய ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் குடிமகன் போல இருந்தேன் என்கிறார். குடிமக்கள் தொடர்ந்து அந்த மன்னனையே தங்களுக்கு நன்மை செய்வான் என்ற எதிர்பார்ப்போடு காத்து இருப்பதைப் போல தானும் காத்து இருப்பதாகச் சொல்கிறார்.

சிறியதை பெரியது தின்னாமல் காக்க வேண்டியது ஒரு அரசனின் கடமை. என் பாதுகாப்பில் எனக்கு நாட்டம் இல்லை; சம்பந்தம் உடைய நீயே பாதுகாக்கும் வரையில் நான் செய்வது எதுவும் இல்லை ; உன்னால் முடியாததும் எதுவும் இல்லை என்று முடிக்கிறார்.

ராஜாவைக் கொண்டு தன்னை காப்பாற்றி கொள்ளும் முறை அந்த தேசத்தில் வசிப்பவர்களுக்கு உண்டு என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply