திவ்ய பிரபந்தம்

Home

PT 5.2 கண்டார் இகழ்வனேவே

கண்டார் இகழ்வனவே காதல் என்றான் செய்திடினும் * கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் * விண்டோய் மதிள் புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா நீ * கொண்டாளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே

பெருமாள் திருமொழி 5.2

ஆகாயத்தை எட்டும்படியான மதில்களால் சுற்றிலும் சூழப்பட்ட வித்துவக்கோட்டம்மா, பார்ப்பவர்கள் எல்லோரும் இகழத் தக்க காரியங்களையே கணவனானவன் செய்தாலும் (தன்னை) மணம் புரிந்த கணவனை அன்றி வேறு ஒருவரையும் மனத்தினாலும் நினையாதவளான மேலான குலத்துதித்த கற்பரசியைப் போல் நீ என்னை அடிமை கொண்டு ரக்ஷிக்காமல் நிராகரித்தாலும் உன்னுடைய ஒலிக்கும்படியான வீரக்கழல்களை உடைய திருவடிகளையே சரணமடைவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

காதலன் என்பதற்கு தன் ஆசையை சொல்லி அதனை நிரூபிக்க வேண்டியவன் என்கிறார். அப்படிபட்ட காதலன், அன்பினால் வரும் ஊடலையும் சமாதானத்தையும் தாண்டி, வெளியாரும் இகழும்படியான தாங்க முடியாத செயல்களை செய்தாலும் அவனை காதலன் என்று கொள்ளும் குலமகள் என்கிறார்.

கொண்டானை அல்லாது அறியாகக் குலமகள் போல் என்பதற்கு அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ர்வேஸ்வரனை சாட்சியாகக் கொண்டவனை அல்லது வேறு அறியாதவளை போல் என்கிறார்.

“கொண்டானை யல்லாதறியா” என்பதை தம்மை மணந்து கொண்ட நாயகனை அல்லாமல் வேறொருவரையும் அறியாத பெண் என்கிறார். இது கணவனிடம் மாறாத அன்பும், பிறரை நினையாத் தூய்மையும் கொண்ட என்ற பண்பை எடுத்துக் காட்டுகிறது.

“குலமகள்” என்பது, உயர்ந்த குலத்தில் பிறந்த பெண் என்ற சொல், அந்தக் குலத்தின் பெருமை, நற்பண்பு, அடக்கம், மற்றும் பிறரை நாடாத உயர் பிறப்பு ஆகியவற்றைக் குறிக்கும் என்ற பண்பை வெளிப்படுத்துகிறது.

இவற்றில் இருந்து அறிவது, எம்பெருமானைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையோ, புகலையோ, பலனையோ ஆன்மா விரும்பாமல், அவனுக்கே உரியதாக இருப்பது, மற்றும், ஆன்மா எம்பெருமானுக்கு அடிமை என்ற உயர்ந்த கைங்கர்ய குலத்தில் நாட்டம் கொண்டு தாழ்ந்த உலகியல் விஷயங்களில் மயங்காமல் இருப்பது என்பதாகும்.

வித்துவக்கோட்டம்மா என்பதை, சீதா பிராட்டி ஸ்வயம்வரத்திற்காக ஸ்ரீமிதிலையில் புறச்சோலையிலே இருந்தாப் போலே, இவரை ஸ்வயம்வரிக்கைக்காக திருவித்துவக்கோட்டிலே வந்து நிற்கிறதாகச் சொல்கிறார்.

உன் திருவடிகளல்லது எனக்கு வேறு புகலில்லை. உபகாரகனான நீ, என்னை தள்ளி வைக்கிறாய் என்பதற்காக பின்வாங்குபவன் நான் அல்ல, எம்பெருமானின் உபகாரத்தை மறவாமல் தலை வணங்குபவன் ‘ என்கிறார். “எனதாவியார் யானார்” (திருவாய்மொழி 2.3.4) என்று, ‘நீ பண்ணின உபகாரத்துக்குத் தலையைக் கொடுப்பவன் நான்’ என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply