திவ்ய பிரபந்தம்

Home

PT 5.1 தருதுயரம்

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை * விரைகுழுவு மலர்ப் பொழில் சூழ் விற்றுவக்கோட்டு அம்மானே * அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் * அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே

பெருமாள் திருமொழி 5.1

திருமந்திரத்தால் அநந்யார்ஹ சேஷத்தவம், அதாவது, வேறொருவருக்கு அடிமையாக இல்லாமல், எம்பெருமான் ஒருவனுக்கே அடிமையாக இருப்பது சொல்லப்பட்டது. இதற்கு எதிரியாக இருப்பது ‘நான்’ ‘என்னது’ என்று இருக்கும் அகங்காரம், மமகாரம் ஆகியவை. ஆன்மா அல்லாத ஜடப் பொருட்களையும், நிலையற்ற உடலையும் “இவையே ஆத்மா / நானே இவை” என்று தவறாகக் கருதும் புத்தி மற்றும் தன்னுடையது அல்லாததை என்னுடையது என்று எண்ணும் உரிமை கொண்டாடும் புத்தி(மமாகாரம்), இவையே பிறப்பு இறப்பு என்ற சம்சார சூழலுக்கு அடிப்படையான விதை என்று சாஸ்திர பிரமாணங்கள் கூறுகின்றன. அப்படி இல்லாமல் ராஜாக்களாக இருப்பதால் அகங்காரம், மாமகாரம் அதிகமாக இருப்பது இயல்பு என்கிறார்.

எப்படி நிலா, தென்றல், சந்தனம் ஆகியவை எம்பெருமானுக்குச் சேராதவரை ஆன்மாவிற்கு இன்பம் தருவன இல்லையோ, அதே போல ஆன்மா எம்பெருமானுக்கே உரிமையானது / எம்பெருமான் கைங்கர்யத்திற்கே என்ற எண்ணம் இல்லாமல் அகங்கார மாமகாரங்களுடன் இருந்துவிட்டால் உண்மையான பயன் சிதைந்து அழியும் என்கிறார்.

இதனை, யஸ்யாஸ்மி ந தமந்தரேமி, அதாவது எவனுக்கு நான் தாஸனாய் இருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்ல மாட்டேன் என்ற வேத வாக்கியமும், பதிம் விஸ்வஸ்ய என்ற சொற்தொடர், பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் ஸ்ரா வதம் ஸ்வமச்யுதம் நாராயணம், அதாவது உலகிற்கு எல்லாம் பதியாக இருப்பவனும், தனக்குத் தானே ஈஸ்வரனும், நித்தியமானவனும், பரிசுத்தமானவனும், அடியவர்களை நழுவ விடாதவனும் நாராயணனே என்ற வேத வாக்கியத்தில் சொல்லியபடி இவன் ஒன்றுக்கும் உடையவன் அல்லன்; அவனே எல்லாவற்றுக்கும் உடையவன் என்பது விளங்கும்.

பிராட்டியோடு கூடிய எம்பெருமானே நமக்கு நாதன் என்ற அறிவும், எம்பெருமான் ஒருவனுக்கே தாம் அடிமை என்ற உணர்வும் இருந்தும், அவை தனக்கு உடனடியாக பலன் தரவில்லை என்று உணர்ந்தார். தாமே முயற்சி செய்வதாகக் கருதி அமைதியாக இருக்கவில்லை. நம் மனதின் ஆழத்தில் உள்ள ஆர்வத்தையும் அவசரத்தையும் எம்பெருமான் நன்கு அறிபவன் என்பதால், அவனது திருவுள்ளப்படியே நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்ற உறுதியுடன் அமைதியாக இருந்தார்.

நம்மை போல அன்றி எல்லாவற்றையும் அறிந்து இருப்பவன், நினைத்ததை முடித்து வைக்க வல்லவன், ஏதோ சில காரணங்களுக்காக தள்ளி போகிறது என்று உணர்ந்த ஆழ்வார் ‘எனக்கு நானும் இல்லை, பிறரும் இல்லை, பெறுவதற்கு அவசரபட்டு துடிக்கிறேன். எம்பெருமானுக்குரிய காரியங்களை தம் சொந்த ஆற்றலாலோ, தகுதியாலோ நிறைவேற்றிவிடக் கூடிய வலிமையற்றவன், தம்மிடம் போதிய சாதனமோ, அநுஷ்டான வலிமையோ இல்லை என்பதை உணர்ந்து, எம்பெருமானின் திருவுள்ளமும் அருளுமே அனைத்தையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் நிற்கிறார்.

எம்பெருமானைத் தவிர வேறு எந்த கதியும் இல்லாத உயிர்கள் எவ்வாறு எம்பெருமானையே நம்பி நிற்கின்றன என்பதைத் தெளிவான உதாரணங்களின் வாயிலாக, தனக்கும் திருவித்துவக்கோட்டு அம்மானின் திருவடிகளைத் தவிர வேறு எந்தப் புகலும் இல்லை என்பதை ஆழ்வார் திருவடிகளில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கிறார்.

இனி பாடலுக்குச் செல்வோம்.

பரிமளம் மிகுந்துள்ள புஷ்பங்களை உடைய சோலைகளாலே திருவித்துவக் கொட்டில் எழுந்தருளி இருக்கும் ஸ்ர்வேஸ்வரனே, நீயே தரும் ஸம்ஸாரமாகிய இந்த துக்கத்தை (நீயே) போக்காவிட்டாலும் உன்னுடைய திருவடிகள் அல்லது வேறு உபாயம் இல்லை; பெற்ற தாயானவள் மிகுந்த கோபம் கொண்டு (குழந்தையை) தள்ளினாலும் மறுபடியும் அவளுடைய அன்பையே நினத்து அழுகின்ற சிறு குழந்தையை போல இருந்தேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சாஸ்திரங்கள், தனக்கு தன்னாலே விரோதி வந்தது என்றும் அதற்கு தானே அனுஷ்டானங்கள் செய்து போக்கி கொள்ள வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் ஆழ்வார் தருதுயரம் என்று சொல்வது, அவனே துயர் தந்தான் என்பதாகும். அதற்கு காரணம், ஆழ்வார் தான் செய்த கருமமும் பரதந்திரம், அதற்கு ஆழ்வார் செய்த அனுஷ்டானத்தின் பலன் தருபவன் அவன் தானே ஆகையால் அதுவும் பரதந்திரமாகையால் இதனை தருதுயரம் என்கிறார்.

தடாயேல் என்பதற்கு கீழ்கண்ட விளக்கம் சொல்லப்படுகிறது.

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா *
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே
(பகவத் கீதை 7.14)

அர்ஜுனா ! ஸர்வேஸ்வரனான என்னால் உண்டாக்கப்பட்ட மாயையை யாராலும் கடக்கமுடியாது ; எவர் என் ஒருவனையே சரணமாகப் பற்றுகிறார்களோ, அவர்களே இந்த ப்ரக்ருதியான மாயையைத் தாண்ட முடியும்.

மாயை என்றால் ப்ரக்ருதி (இயற்கை) என்பது பொருள். இந்த மாயை என்னுடையது, ஸத்வ ரஜஸ் தமோ என்ற மூன்று குணங்களாலானது. எவராலும் கடக்க முடியாது. எவராலும் என்பதினால் எத்தகைய அறிவு பெற்றவர்களாலும் தங்கள் முயற்சியினால் கடக்கப் போகாது. அவர்களும் இந்த மாயைக்குக் கட்டுப்பட்டவர்களே. ஒரு குருவி பிணைத்த கூட்டை ஒருவராலும் அவிழ்க்கப் போவதில்லை. ஸர்வ சக்தி படைத்தவன் கர்ம, அனுஷ்டாங்களால் கட்டிய கட்டை, அவனுடைய திருவடிகளை பற்றியே, அவிழ்த்துவிட பிரார்த்திக்கொள்ள வேண்டும். அவன் காலை நாம் கட்டினால், நம் கட்டு, தானே விலகும் என்பது சுருக்கமான பொருள்.

உன் சரணல்லால் சரணில்லை என்று சொல்வது, இவ்வளவு விளைத்துக் கொண்ட நான் எனக்கில்லை; பிறர் இருந்தாலும் நான் அவர்களை ரக்ஷகராகக் கொள்ள மாட்டாமையாலே அவர்களுமில்லை; தேவரீர் திருவடிகள் அல்லது வேறு உபாயமில்லை என்கிறார்.

ஸர்வகந்த: ஸர்வரஸ: என்று சாஸ்திரம் சொல்லியபடி, எல்லா கந்தங்களையும் உடையவன்; எல்லா ரஸங்களையும் உடையவன் (பரமாத்மா), வந்து இருக்கும் இடம் திருவித்துவக்கோடு என்கிறார்.

அம்மானே என்று சொல்வது பிள்ளை உறங்கும் தொட்டில் கீழே உறங்கும் தாயைப் போல் இங்கே வந்து எங்களுக்கு கிட்டியவனே என்கிறார். தாய் தனை உதாரணமாக இந்த பாடலில் எடுப்பதால் ‘அம்மானே’ என்று ப்ராப்தி தோன்றச் சொல்கிறார்.

தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே .. எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே. (திருவாய்மொழி 2.9.4) சொல்வது போல, இவ்வாத்மாவுக்கு வகுத்ததான பாரதந்த்ரியத்தை அவன் பக்கலிலே யாசிக்கிறார். இந்த பாடலில் ஆட்செய், எனக்கு ஆட்செய், எனக்கே ஆட்செய், எக்காலத்தும் எனக்கே ஆட்செய், என்று பிரித்து பிரித்து பார்த்து ரசிக்க வேண்டும்.

அகற்றிடினும் என்பதில், இயல்பாகவே பந்துவான தேவரீர் கை விடிலும் வேறு எனக்குப் புகலில்லை என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply