ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள் * கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு * பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து * செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே
பெருமாள் திருமொழி 4.4
ஒளியுள்ள பவளங்களை கரையிலே கொண்டு வந்து சேர்த்து (அலைகளாகிற கால்களால்) உலாவுகிற, குளிர்ந்த திருப்பாற்கடலிலே கண்வளருகின்ற ஆச்சர்ய குணசேஷ்டிதனான எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளையும் சேவிக்கும் பொருட்டு இன்னிசைகளைப் பாடும் வந்துகளின் கூட்டங்கள் இசை பாடும்படியான திருமலையில் செண்பக மரமாய் இருக்கும் பாக்கியம் உடையவன் ஆவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மனித சரீரம் மன்னர் ஆவதற்கும் பொதுவாகையாலே, அது வேண்டாம், திருவேங்கடமுடையானுக்கு உறுப்பாக திருமலையில் நிற்பதொரு தாவரமாகவே வேண்டும் என்கிறார்.
ஒள்ளிய பவளத்தைக் கரையிலே கொண்டு வந்து கொழிக்கிற பாற்கடல் என்கிறார். ஒள்ளிய பவளங்களைக் கொண்டு உலாவுகிற திரைகளை உடைய களைப்பைப் போக்கக்கூடிய அல்லது அலுப்பை நீக்குகின்ற அல்லது சிரமத்தைத் தீர்க்கும் அல்லது இனிமையான அல்லது ஆறுதல் தருகின்ற. திருப்பாற்கடல் என்கிறார்.
ஆழ்வார்கள் பாசுரத்துக்குச் சேர வண்டுகள் கானம் பண்ணுகிற சோலைகளை உடைய திருவேங்கடம் என்கிறார். மேலும் வண்டுகள், தங்கள் பாட்டுக்குச் சேரத் தாங்களே கானம் பண்ணுகிறது என்றும் சொல்லலாம்.
‘ கிடந்ததோர் கிடக்கை‘ (திருமாலை 23) என்று சொல்லும்படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதன். அங்கு சென்று கிட்டி காணக் கிடைக்காத அருமை தீராக இந்த தேசத்திலே காணலாம்.
திருவேங்கடமுடையானின் சந்நிதியில் எந்தப் பிறவியாகவும் இருக்கத் தயார் என்கிறார் ஆழ்வார்.
பகவானுக்கு மிக அருகில் இருப்பதே / சந்நிதியில் நெருங்கியிருப்பது பிரதானமானது. அந்தப் பகவானின் அருகாமையும் சந்நிதியும் கிடைப்பதாக இருந்தால், அசையாத ஒரு தாவரமாக (செடி, கொடி, மரம் போன்ற தாவரப் பொருளாக) நின்றால் கூட எனக்குப் போதும் என்கிறார்.
அந்தச் சந்நிதி அருகாமையோடு ஒப்பிடும்போது, “மேலே ஏறின அசையும் திறனும் உயர்ந்த அறிவும் கொண்ட பிறவிகளால் (மனிதப் பிறவி, உயர்ந்த ஜீவராசிகள் போன்றவற்றால்) எனக்கு எந்தப் பயனும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
வழக்கமாக அறிவும் அசைவும் கொண்ட பிறவியே மேலானது என்று கருதப்படும். ஆனால் எம்பெருமானின் திருச்சந்நிதியில் நெருங்கி இருக்கும் பாக்கியம் கிடைக்குமானால், நடமாடும் அறிவுள்ள பிறவியை விட, அவனருகே நிலையாக நிற்கும் ஒரு தாவரப் பிறப்பும் ஆழ்வாருக்குப் போதுமானதாக உள்ளது.
யாரேனுமொருவர் செண்பக மரத்தின் மேல் ஆசை கொண்டு, அதையும் பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் இருக்க முடியாது எனக் கருதி பூ, காய், பழம், நிழல் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு ஸ்தம்பமாய் திருமலையில் பிறக்க ஆழ்வார், தன்னுடைய அடுத்த (5) பாசுரத்தில் வேண்டுகிறார்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply