திவ்ய பிரபந்தம்

Home

PT 3.5 தீதில் நன்னெறி

தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் * நீதி யாரொடும் கூடுவதில்லை யான் * ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப் * பேதை மாமணவாளன் தன் பித்தனே

பெருமாள் திருமொழி 3.5

குற்றமற்ற நல்ல வழி இருக்க, (அந்த வழியில் செல்லாமல்) தேவையற்றவைகளை விரும்புவதையே விரதமாக உடையவர்களோடு நான் கூடுவதில்லை; எல்லா லோகங்களுக்கும் காரணமாய், கிருஷ்ணானாய் அவதரித்து எல்லோருக்கும் சுலபனாய், அழகிய தாமரைப் பூவினை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாரின் திரு மணவாளனான ரங்கநாதன் விஷயத்தில் பித்தனாக நின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தீமையோடு இல்லாத நல்வழி இருக்க, இவனைத் தவிர மற்ற எல்லா பலன்களுக்கும் அனுஷ்டானம் செய்து பெரும் பேற்றில் கிடைக்கும் கெட்ட பலன்களையே நல்லது என்று எண்ணி இருப்பது என்கிறார். இப்படி இதர பலன்களை ஆசைப் படுவதையே வாழ்கை பயணமாகக் கொண்டு இருப்பவர்களோடு தான் கூடுவதில்லை என்கிறார்.

ஆதி என்பது, பிரமாணங்களால் (ஆதாரங்கள்) வணங்கத்தக்கவர் / தியானிக்கப்படுபவர் / அடைய வேண்டிய இலக்கு / பூஜை செய்யப் படுபவர்/ ஆராதிக்கப்படுபவர் என்பதாகும்.

ஆயன் என்பது அப்படிபட்ட வணங்கத்தக்கவர், அரிது என்று சொல்ல முடியாதபடி, அவதரித்து சுலபன் ஆனவன் என்கிறார்.

அரங்கன் என்பது, அவதாரம் போல அவதாரப் பயன் முடிந்தவுடன் புறப்பட்டு சென்று பிற்பாடு வருபவர்கள் இழந்துவிடும் படி இல்லாமல், கோயிலில் வந்து அருகில் இருப்பவர் சொல்வதாகும்.

அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு வல்லபரானவர்க்குப் பித்தன் ஆனேன் என்கிறார். இவன் புக நின்றால், அவன் நெஞ்சில் புண்படும்படி இவன் பண்ணின அபராதங்களை, அவன் காணாதபடி இருக்கிற புருஷக்கார பூதை என்பதை மா மணவாளன் என்பதன் மூலம் தெரிவிக்கிறார். இவளுக்கு வல்லபன் ஆகையால் வந்த பெருமையை உடையவன் விஷயத்தில் நான் பித்தன் என்கிறார். இது ராமயணத்தில் கீழ்கண்ட ஆரண்ய காண்டம் ஸ்லோகம் கொண்டு விளக்கப்படுகிறது.

அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா *
ந த்வம் ஸமர்த்தஸ் தாம் ஹர்த்தும் ராமச பாஸ்ரயாம் வநேII (ஆரண்ய 37.18)

யாதொரு தேஜஸ்ஸக்கு ஜனகராஜன் திருமகளான பிராட்டி உரியவளோ, அந்த ராம தேஜஸ்ஸானது அளவிட முடியாதது. ராமனுடைய வில்லிலே ஒதுங்கி இருக்கும் அவளை எடுத்து வர நீ வல்லன் இல்லை என்பது மாரீச வாக்கியம். அதாவது, ஜனகனின் மகளின் மகிமை அளவற்றது, இராமனின் வில்லின் கீழ், அவளை நீ காட்டில் இருந்து பறிக்க முடியாது என்று மாரீசன் சொல்கின்றான்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply