திவ்ய பிரபந்தம்

Home

PT 3.1 மெய்யில் வாழ்க்கையை

மெய்யில் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் * இவ் வையம் தன்னொடும் கூடுவது இல்லை யான் * ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் * மையல் கொண்டு ஒழிந்தேன் என்றன் மாலுக்கே

பெருமாள் திருமொழி 3.1

‘பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன்‘ (பெரிய திருமொழி 7.4.4) என்று எம்பெருமானுக்கு பிரியமானது அவனது தொண்டர்களுக்கு தொண்டு செய்வது பற்றி சொல்லியது. இது சங்கல்ப அளவில் இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளப்படும். இது ஆனுகூல்யஸ்ய ஸங்கல்பம் – பகவானுக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொள்வது. இதனை சென்ற பதிகங்களில் சொன்னார்.

‘கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூட, அவனையுள்ளத் எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே‘ (பெரிய திருமொழி 11.6.7) என்றும், ‘ஆள் ஆனார் அல்லாதார் * மானிடவர் அல்லர் என்றே என் மனத்தே வைத்தேனே‘ (பெரிய திருமொழி 11.7.9) என்றும், ‘வடதிரு வேங்கடத் தெந்தை, * பேர்ப் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற‘, (திருவாய் மொழி 3.5.8) என்றும் சொல்லியபடி, பகவத் ஈடுபாட்டினால் பிறக்கும் அவஸ்தை உண்டு. அதனால் உண்டாவது பிராதிகூல்யஸ்ய வர்ஜனம், பகவானுக்கு விரோதமானவற்றை விலக்குவது, இதனை அறிந்தவுடன் செய்து முடிக்க வேண்டும். இதனை ஆழ்வார் இந்த பதிகத்தில் சொல்கிறார்.

மத்தஸ் ஸர்வ மஹம் என்ற சாமானிய புத்தி பண்ணின ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான், அவன் தந்தை ஸமுத்ரத்தில் தன்னைப் போட்ட போது ஸர்வேஸ்வரனைக் கண்டு தன் பிதா பண்ணின பாவத்தைப் பொறுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிராதிகூல்யத்திலே விஞ்சினவாறே அவனை ரக்ஷிக்கப் பார்த்தவன். இதனை நாம் கீழ் கண்ட விஷ்ணுபுராண ஸ்லோகங்களில் காணலாம்.

ஸர்வகத்வாதநந்தஸ்ய ஸ ஏவா ஹமவஸ்தித : * மத்த: ஸர்வமஹம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே (1.19.85)

அநந்தன் எங்கும் வியாபித்திருப்பதால் நானும் அவனாகவே இருக்கிறேன். என்னிடமிருந்தே எல்லாம் உண்டாகின்றன. நான் எல்லாமாக ஆகிறேன். ஸநாதனனான என்னிடத்திலேயே எல்லாம் இருக்கின்றன.

மயி த்வேஷாநுபந்தோ பூத் ஸம்ஸ்துதாவத்யதே தவ * மத்பிதுஸ் தத்க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது (1.20.21)

தேவனே ! உன்னைத் துதிப்பதில் விடா முயற்சி கொண்டிருந்த என்னிடத்தில், என் தந்தைக்கு த்வேஷம் உண்டாயிற்று. என்னுடைய தந்தைக்கு அதனால் ஏற்படும் பாபமானது நசிக்கட்டும்.

ஸ்ரீவிபீஷணாழ்வான் தன்னால் முடிந்தவரை இராவணனுக்கு ஹிதம் சொல்லிப் பார்த்தான். தன் ஹிதத்துக்கு மீளாத அவஸ்தையான போது, நெருப்புப்
பட்ட இடத்தில் இருந்து விலக்க முடியாத போது, தன்னைக் கொண்டு தான் தப்புவாரைப் போலே, ப்ராதிகூல்யம் முன்னிட்டு தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு, தான் தப்பினான்.

ப்ராதிகூல்யமாவது, தேஹா ஆத்மா அபிமானிகளாக இருப்பது, உலக விஷயங்களில் ஈடுபாடுடன் இருப்பது, தேஹ சுகங்களைத் தவிர வேறொரு பொருள் உலகில் உண்டு என்று அறியாமல் இருப்பது; இப்படி இருப்பவர்களோடு எனக்குப் பொருந்தாது என்று இந்த பதிகத்தில் அருளுகிறார்.

இனி இந்த பாடலின் பொழிப்புரை காண்போம்.

நிலை அற்ற இவ்வுலக வாழ்க்கையை நிலையானது என்று கருதுகிற இவ்வுலகத்தாரோடு நான் சேருவதில்லை; (நிஷ்காரண) பந்துவே, ஸ்ரீ ரங்கநாதனே என்று அழைக்கின்றேன். என் பக்கம் அன்பு பூண்டு உள்ள எம்பெருமானிடத்தில் அன்பு பூண்டவனாக இருக்கிறேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் என்பது மெய் என்றும், பொய் என்றும் நிலை இல்லாமையையும் நிலை நிற்பதையும் சொல்கிறது. நிலை நில்லாததிலே, நித்யமான ஆத்ம வஸ்துவில் பண்ணும் சரணாகதியை செய்வது என்பது மெய்யிலே உண்டான வாழ்க்கை என்று சொல்கிறார்.

தேக ஆத்ம அபிமாநிகளுடன் தனக்கு ஒரு சேர்த்தி இல்லை என்கிறார்.

மையல் கொண்டு ஒழிந்தேன் என்றன் மாலுக்கே என்று சொன்னது, அவன் எனக்குப் பித்தேறியதைக் கண்டு நானும் அவனுக்குப் பித்தன் ஆனேன் என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply