திவ்ய பிரபந்தம்

Home

PT 2.10 அல்லி மாமலர்

அல்லி மாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம் * எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தனாம் * கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குல சேகரன் * சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே.

பெருமாள் திருமொழி 2.10

உள் இதழ்களை உடைய சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பிராட்டியின் நாயகனான அரங்கநாதனுடைய உண்மையான அடியார்களுடைய எல்லை இல்லாத கைங்கரியச் செயலிலே எக்காலத்திலும் பொருந்திய திருவுள்ளத்தை உடையவரும் கொல்லி நகருக்கு அரசரும் மதுரைக்கு ராஜாவும் உரையூருக்கு அரசருமான குலசேகரப் பெருமாளுடைய சொற்களான இனிய சப்தங்களுடன் கூடிய தமிழ்ப் பாட்டுக்களை படிக்க வல்லவர்கள் அடியார்களுக்கு அடியார்கள் ஆவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் என்று ஆத்ம தாஸ்யத்திலே என்றும் முழுவதும் பொருந்திய திருவுள்ளத்தை உடையவர் என்று சொல்கிறார். இதனை, ‘உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்பமிருக்குமாகில், உன் இருப்பில் ஆசையிருக்குமாகில், ஆத்மாவினுடைய தாஸத் தன்மையையும், ஹரியின் ஸ்வாமியாயிருக்கும் தன்மையையும், (இவைகளின்) ஸ்வபாவத்தையும் எப்போதும் நினைப்பாயாக’ என்ற கீழ்க்கண்ட ஸ்லோகத்தை உரையாசிரியர் மேற்கோளாக காட்டுகிறார்.

ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி * ஆத்மதாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர II

கொல்லிக்காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் என்பது கொல்லிக்கும் மதுரைக்கும் உரையூருக்கும் நாயகரான குலசேகர ஆழ்வார் என்ற பொருளில் வருகிறது. இப்படி ஆழ்வார் பெருமை படலாமா என்று கேட்டு அதற்கு விடை கொடுக்கிறார். இது, ‘பெருமாள்(இராமன்), வனவாஸோ மஹோதயா என்று பிரியமாக இருந்தவர்க்கு (லக்ஷ்மணன்) சொல்லி வனதிற்கு சென்றது என்று கூறி, பின்னர் ராஜ்யாத் பிரம்ஸோ வநேவாஸ என்று சொல்லி இந்த இழப்பாலே மேலே சொன்ன பெருமைகள் அனைத்தும், தம்முடைய வெறுப்பிறகு உடலாக அமைந்தது என்று ஸ்ரீ ராமன் சொன்னது போல இந்த ஆழ்வாரும் சொல்வதாக உரை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

குலசேகர ஆழ்வாரின் வெறுப்புக்கு உடலாக, “ஊனேறு
செல்வத்துடற் பிறவி யான் வேண்டேன்” (பெருமாள் திருமொழி (4.1) என்றும், “வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” (பெருமாள் திருமொழி 4.2) அமைந்து உள்ளன. இங்கேயும் தொண்டர்களுக்கு அடிமை செய்யும் இந்த ஜன்மத்தையும், அரச ஜன்மத்தையும் சேர்த்து கொண்டாடுகிறார்.

ராமாயண ஸ்லோகங்களும் அவற்றின் அர்த்தங்களும் பின் வருமாறு :

மா ச லக்ஷ்மண! ஸந்தாபம் கார்ஷீர் லக்ஷ்ம்யா விபர்யயே * ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய: II (அயோத்யா காண்டம் 22.29)

லக்ஷ்மணா ! ராஜ்யஸ்ரீயானது கைநழுவியதற்காக வருந்தாதே; ராஜ்யம், வனவாஸம் என்னுமிரண்டில் வனவாஸமே மேலானதாகத் தோன்றுகிறது. அரசாட்சியாக இருந்தாலும் சரி, வனவாசமாக இருந்தாலும் சரி வருந்தாதே! அரசாட்சியும் வனவாசமும் சமமானவையே. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், வனவாசமே மிகச் சிறந்த பேறாகும்; ஏனெனில், அதில் அரசு நிர்வாகம் சார்ந்த தொல்லைகள் இல்லை, அதே சமயம் முன் எப்போதும் கண்டிராத புதிய காட்சிகளைக் காணும் இன்பமும் கிடைக்கிறது.

ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ் : ஸீதா நஷ்டா த்விஜோ ஹத: * ஈத்ருரீயம் மமா லக்ஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் || (ஆரண்ய காண்டம் 67.24)

ராஜ்யத்தை இழந்தது, வனத்தில் வசிப்பது, சீதையை இழந்தது, ஜடாயு கொல்லப்பட்டது என்று இம்மாதிரியாக எனக்கு நேர்ந்த துக்கங்கள் நெருப்பைக் கூட தஹிக்கச் செய்யும்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply