திவ்ய பிரபந்தம்

Home

PT 1.10 வன்பெரு வானகம்

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய * துன்பமிகு துயர் அகல அயர்வொன்று இல்லாச் சுகம் வளர அகமகிழும் தொண்டர் வாழ * அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் * இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்றுகொலோ இருக்கு நாளே

பெருமாள் திருமொழி 1.10

(நைமித்திக பிரளயத்திலும்) அழியாத பெருமை வாய்ந்த ஸத்யலோகம் முதலிய மேல் உலகங்கள் உஜ்ஜிவிக்கும்படியும், அங்குள்ள பிரம்மா முதலிய தேவர்கள் உஜ்ஜிவிக்கும்படியும், பூமி உஜ்ஜிவிக்கும்படியும், பூமியில் பிறந்த மனிதர்கள் உஜ்ஜிவிக்கும்படியும், மிக்க துக்கத்தை உண்டாக்கும் பாபங்கள் நீங்கவும், மனதிலே (பகவத் அனுபவத்தால் வந்த) ஆனந்தத்தை உடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவும் (ஸ்ரீ விபிஷணாழ்வானிடம் உண்டான) அன்புடன் தெற்கு திக்கை நோக்கி கண் வளர்ந்திருக்கும் பெரிய பெருமாளின் உள் திருமுற்றத்திலே ஆனந்தம் நிரம்பிய ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பெரிய கோஷ்டியை கண்டு, நானும் அவர்களிலே ஒருவனாகக் கூடி அவர்களுடன் சேவித்திருப்பது என்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நைமித்திக பிரளயம் :

பிரளயம்விளக்கம்
நித்ய பிரளயம்ஒவ்வொரு உயிரின் மரணம்
நைமித்திக பிரளயம்பிரம்மாவின் ஒரு பகல் முடிவில் ஏற்படும் தற்காலிக உலக அழிவு
பிராகிருத (மகா) பிரளயம்பிரம்மாவின் ஆயுள் முடிவில் முழுப் பிரபஞ்சமும் இயற்கையில் ஒடுங்குதல்
ஆத்தியாந்திக பிரளயம்உயிர் மோட்சம் பெற்று பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுதல்

நைமித்திக பிரளயத்தின் போது பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் உள்ளிட்ட கீழ் உலகங்கள் அழிவடைகின்றன. அதற்கு மேல் உள்ள சத்தியலோகம்/பிரம்மலோகம் மற்றும் மேல் உள்ள உலகங்கள் அழிவதில்லை.

ஸ்ரீரங்கமஹாத்மியாம் என்ற நூலில், பூமியும், பூமியை ஆளும் அரசர்களும், பிராமணர்களும் உய்யும் பொருட்டும், தேவலோகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், தேவதைகளுடைய நன்மைக்காகவும், சோழ வம்சத்தில் உதித்த அரசர்களுக்கு நீங்காச் செல்வத்தை அளிப்பதற்காகவும் ஸ்ரீரங்க விமானம் திருக் காவேரிக் கரையை அடைந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த லோகத்தில் ஸ்ரீ விபிஷண ஆழ்வானுக்காக எழுந்தருளி உள்ளதாலே மண்ணும் மண்ணுலகில் உள்ளவர்களும் உய்ய என்கிறார். இவரின் கோவிலாழ்வார் பிரம்மலோகத்தில் உள்ளதால் அங்குள்ள பிரம்மாதிகள் உஜ்ஜிவிக்க வாய்த்தது என்கிறார்.

நித்ய துன்பத்தை விளைவிப்பதான பாவங்கள் அகன்று, நித்யமான சுகம் வளர பகவத் அனுபவத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ என்கிறார்.

ஸ்ரீ விபிஷண ஆழ்வானுக்காக ராஜ்ஜியத்தைக் கொடுத்து அந்த திசையைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற பெரியபெருமாள் என்கிறார்.

ஷத்திரியன் என்று நினைக்காதே என்றும், ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழுவில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொள் என்றும், என்னை சிலர் சேவிக்க, அரசனாக நான் இருக்கும் நிலையை மாதிரி, ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளில் ஒருவனாக இருப்பது என்றோ என்றும் கூறுகிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply