திவ்ய பிரபந்தம்

Home

PT 1.9 தூராத மனக்காதல்

தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி * ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் * சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் * போராழி அம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே

பெருமாள் திருமொழி 1.9

(பகவத் அனுபவத்தில்) குறைவற்ற ஆசையை உடைய மனத்தை உடையவரான ஸ்ரீ வைஷ்ணவர்க்களின் கோஷ்டியில் கலந்து (எம்பெருமானுடைய) கல்யாண குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களைப் பாடி (அதனால்) தணியாத மனதில் உள்ள சந்தோஷத்தோடு அழுத கண்களில் உண்டான ஆனந்த கண்ணீர் மழை போல் பெருகி வர (எம்பெருமானை) நினத்து, மனம் உருகி ஸ்தோத்ரம் செய்து தினந்தோறும் ஐஸ்வரிய வாத்தியங்களின் கோஷமானது சமுத்தர கோஷத்தைக் காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொண்டு, யுத்தத்தை சந்திப்பதற்கு தயார் நிலையில் உள்ள திருவாழியை கையில் ஏந்திய ஸர்வேஸ்வரனை சேவிக்கப் பெற்று (ஆனந்ததாலே) தலை கால் தெரியாமல் கூத்தாடி பூமியில் புரளுவது என்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன் (திருவாய்மொழி 5.8.6) என்று ஸம்ஸாரிகள் உலக விஷயங்களில், பல நாள் அனுபவித்து இருந்தாலும், இந்திரியங்களை திருப்தி அடையாதவர்கள் குழுவில் இருந்து விலகி, எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும் ‘போதாது’ என்று இருக்கும் மெய்யடியார்கள் / ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுவினில் என்னையும் கூட சேர்த்திடு என்கிறார்.

“இன்கனி தனி அருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்பது போல, பகவத்குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால், அக்குணங்களை பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து பாடும் அனுபவத்தை கேட்கிறார்.

இப்போது ராஜ்ய சிம்மாசனத்தில் நெஞ்சு நிமிர்ந்து இருப்பதைத் தவிர்த்து ஆனந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ என்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply