திவ்ய பிரபந்தம்

Home

PT 1.8 கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம்

கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனற் சங்கம் கொலை ஆழி கொடுந் தண்டு கொற்ற ஒள் வாள் * காலார்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக் கடும் பறவை இவை அனைத்தும் புறஞ் சூழ் காப்ப * சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் * மாலோனைக் கண்டு இன்பக் கலவி யெய்தி வல்வினையே என்று கொலோ வாழும் நாளே

பெருமாள் திருமொழி 1.8

அம்புகளுடன் கூடியதாகவும் பெரியதாகவும் இருக்கும் ஸ்ரீ சாரங்கம் என்னும் வில்லும், பகவத் அனுபவத்தால் கர்வமுற்று அதனால் வளைந்து இருக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும், விரோதிகளை முடிக்கும் திருவாழியாழ்வானும், விரோதிகளுக்கு பயத்தை விளைவிக்கும் ஸ்ரீ கௌமோதகீ என்ற கதையும், ஜயத்துடன் பிரகாசிக்கும் நந்தகமென்னும் வாளும், காற்றினுடைய வேகத்தைப் போன்ற வேகத்தை உடைய கருடன் என்னும் வெற்றி வீரனான கருடாழ்வானும் ஆகிய இவைகள் எல்லாம் சுற்றிலும் பாதுகாக்க, மீன்கள் நிரம்பிய வயல்களும் சோலைகளும் சூழ்ந்த திருவரங்கத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் சர்வாதிகனான எம்பெருமானை, மகா பாவியான நான் சேவித்து ஒப்புயர்வற்ற ஆனந்தத்தை அனுபவித்து உஜஜீவிக்கும் தினம் என்றோ என்பது இந்த பாசுரத்தின் பொழிப்புரை.

கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் என்று சொன்னது, எப்போதும் கைகழலா நேமியான் (பெரிய திருவந்தாதி 87), அதாவது ஒருபோதும் கையை விட்டுப் பிரியாத திருவாழியை உடையனான எம்பெருமான் என்று சொல்வது போல, எப்போது வினை வரும் என்று அறியாமையாலே திருச்சரங்களை தொடுத்த படியே ஸ்ரீ சாரங்கம் இருப்பது என்கிறார்.

பஞ்ச ஆயுதங்களில் பாஞ்ச ஜன்னியம் மட்டுமே பகவத் அனுபவத்தில் ஆழ்ந்து இருப்பது. மற்றவை எல்லாம் விரோதிகளை ஒழிப்பதற்கு என்கிறார்.

ராம லக்ஷ்மண குப்தாஸா ஸுக்ரீவேண ச வாஹிநீ | * பபூவ துர்த்தர்ஷதரா ஸேந்த்ரைரபி ஸுராஸுரை : (யுத்த காண்டம் 25.33) அதாவது ராம லக்ஷ்மணர்களாலும், ஸு க்ரீவனாலும் காப்பாற்றப்பட்ட அந்த வானரஸேனை, இந்திரனுடன் கூடிய தேவாஸுரர்களாலும் எதிர்க்க முடியாததாக இருந்தது என்றபடி, கடற்கரை வெளியில் சேனை எல்லாம் தாமும் தம்பியாரும் காப்பாற்றியதை போல, பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவதாகையாலே பெரிய திருவடி முதலாக பஞ்சாயுதாழ்வார்கள் சுற்றும் பாதுகாத்துக் கொண்டு இருப்பதாயிற்று என்கிறார்.

வைகுந்தம் சென்று கிடைக்க வேண்டிய அனுபவம் இங்கேயே திருவரங்கத்தில் இருக்கும்போது அனுபவிக்க முடியவில்லையே என்றும் பகவத் அனுபவத்திற்கு விரோதியாக உள்ள எல்லாம் பாவம் என்றும் சொல்லி அதனால் தன்னை பாவி என்கிறார். இவர் பகவத் அனுபவம் செய்ய முடியாமல் இருந்தது ராஜ்ய காரியங்களுக்குத் தானே, அது பாவ பலமோ என்று உரையாசிரியர் அருளிச் செய்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply