மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் அடக்கி இடர்ப் பாரம் துன்பம் * துறந்து இரு முப்பொழுதேத்தி எல்லையில்லாத் தொல் நெறிக் கண் நிலை நின்ற தொண்டரான * அறம் திகழும் மனத்தவர் தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் * நிறம் திகழும் மாயோனைக் கண்டு என் கண்கள் நீர்மல்க என்று கொலோ நிற்கும் நாளே
பெருமாள் திருமொழி 1.7
கொலை, சினம், கொடுமை முதலியவை மனதை வாசனையுடன் போக்கி, பொய்யைப் போக்கி, கொடிய ஐந்து இந்திரியங்களை (உலக) விஷயங்களில் புகாவண்ணம் அடக்கி மிகவும் துக்கத்தை விளைவிப்பதான பழவினைகளாகிய பெரும் சுமையை களைந்து பஞ்ச காலங்களில் தொழுது அளவிறந்த பழைய வரம்பில் இருந்து வழுவாத அடியார்களான இரக்கம் நிறைந்த மனதை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மேலான சேரும் இடமாய், காவேரியால் சூழப்பட்டு அழகு பெற்று இருக்கும் திருவரங்கத்திலே ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கும் அழகுடன் கூடிய ஆச்சரியப்படும் மேலானவனை சேவிக்கப் பெற்று, என் கண்கள் ஆனந்த கண்ணீர் சொறியும்படியாக நிற்கும் நாள் என்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முதல் இரண்டு அடிகளும் ஸ்ரீவைஷ்ணவனுக்கு உரிய அடையாளங்களை கூறுகின்றன. மனத்தில் இருந்து கொடுமையை நீக்கியதை சொல்கிறது. இடர்ப்பாரத் துன்பம் துறந்து என்பது, “பாரமாய பழவினை பற்றறுத்து” (அமலானதி பிரான்,5) என்று திருப்பாணாழ்வார் சொல்லியதை போல ஆகும்.
இரு முப்பொழுதேத்தி என்றதில் இரண்டும் மூன்றும் ஐந்து என்று கொள்ளவேண்டும். சூரிய உதய காலத்தில் இருந்து இரவு வரை, ஐந்து காலங்களாகப் பிரித்து அவற்றில் பாகவதன் என்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும். இரவில் ஐம்பொறிகளை அடக்கி மனத்தைப் பரமாத்மாவினிடத்தே நிலைநிறுத்தி பள்ளி கொள்ள வேண்டும். இவ்வாறு அநுஷ்டிக்கும் பாகவதர் பஞ்ச கால பராயணர் எனப்படுவர்.
பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் என்றது, பொன்னி சூழ் அரங்கம் மேய (திருசந்தவிருத்தம், 55)ல் கூறியபடி ஆகும்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply