திவ்ய பிரபந்தம்

Home

2.6.1 வேலிக்கோல் வெட்டி

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி, * தாலிக் கொழுந்தைத் தடங் கழுத்தில் பூண்டு, * பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு, * காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா * கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.

திருமஞ்சனம் முடிந்த பிறகு, கண்ணனின் குழலை வாரிவிட்ட யசோதை அதற்கு பூச்சூடி அழகு பார்க்க நினைக்கிறார். ஆனால் கண்ணன் மற்ற சிறுவர்கள் போல, பசுகூட்டங்களை மேய்க்க செல்ல விருப்பப்பட்டு அதற்கான கோலினை கேட்கிறான். அவனிடம் நேரிடையாக கொடுக்காமல் கோல் கொண்டு வா என்று இந்த பதிகத்தில் அழைக்கிறார். யாரை கொண்டு வர சொல்கிறார் என்றால் அந்த காக்காயை கொண்டு வர சொல்கிறார். இது இதே பதிகத்தின் 7 வது பாட்டிலும், 10 வது பாடலிலும் தெரியும்.

பெரியாழ்வார் திருமொழி 2.6.1

வேலிக் கால்களிலே வளர்ந்து இருக்கின்ற கோலை வெட்டி, விளையாடுவதற்காக வில்லாகச் செய்து, அதிலே நாணை ஏற்றி, பனையின் வெண் குருத்தை பெரிய கழுத்தில் ஆபரணமாகப் பூண்டு மயிலின் தோகைகளை சேர்த்து திருமுதுகில் தொங்க விட்டு, கன்றுகளின் பின்னே மேய்க்கப் போகும் கடல் நிறத்தை ஒத்த வடிவுடையவனுக்கு, கன்றுகள் மேய்த்து மறிக்கிற ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஆயர் குல வழக்கபடி ஆமைத்தாலி என்னும் ஒரு வகை ஆபரணத்தைக் கழுத்தில் அணிந்தும், மயில் தோகைகளைச் சேர்த்துக் கட்டிப் பின்புறத்தில் இருந்தும் வேலிக்கால்களிலே வெட்டின சிறு கோல்களை வில்லாகச் செய்து நாணேறிட்டு வளைத்து விளையாடிக் கொண்டே கன்றுகளை மேய்த்துக் கொண்டே செல்லுகின்ற என் மகனுக்குக் கோல் கொண்டு வா என்று அழைக்கிறார்.

Leave a comment