கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை, * பற்றி எறிந்த பரமன் திருமுடி * உற்றன பேசி நீ ஓடித் திரியாதே, * அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் * ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.5
கன்றுகளின் திரளை மேய்த்து, அசுரமாய் வந்த ஒரு கன்றினை (வக்தாசுரன் என்ற அசுரன் ஒருவன் கன்றின் ரூபத்தில் வந்தான்) காலைப் பிடித்து தூக்கி எடுத்து அசுரமாய் நின்ற விளா மரத்தின் (கபிஸ்தாசுரன் என்ற அசுரன் ஒருவன் விளா மரம் வடிவில் வந்து நின்றான்) கனி கீழே விழுவதற்காக அதன் மேல் வீசி எறிந்த உபகாரகனுடைய அழகிய திருக்குழலை உனக்கு ஏற்றவைகளை சொல்லிக் கொண்டு நீ ஓடிப் போகாமல் நாள் தோறும் வந்து குழல் வாராய் ; திருவாழியை திருக் கையில் ஏந்தினவனுடைய குழல் வார வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சிறு வயதில் கன்றுகள் மேய்ப்பது; பெரியவன் ஆனவுடன் பசுக்கள் மேய்ப்பது. ‘விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து‘ (பெரிய திருமொழி 3.9.7) என்றது போல இரண்டு அசுரர்களையும் ஒரு சேர முடித்ததைச் சொல்கிறது. முள்ளை முள்ளாற் களைவது போல விளா மரம் உரு கொண்ட அசுரர்களை கன்று உரு கொண்ட அசுரனை கொண்டே அழித்தார் என்பது விளங்கும்.
Leave a comment