திவ்ய பிரபந்தம்

Home

PT 5.8 தொக்கு இலங்கு

தொக்கு இலங்கு ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே * புக்கு அன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் * மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் விற்றுவக்கோட்டம்மா உன் * புக்கு இலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே

பெருமாள் திருமொழி 5.8

மிகுந்த நீர் வேகத்துடன் பிரகாசமாக நதிகள் எல்லாம் (கண் பார்க்கும் இடங்களில் எல்லாம்) பரவி ஓடி, ஆழ்ந்த சமுத்திரத்திலே சென்று அடைந்தது அல்லது வேறு ஒரு இடத்தில் போய் சேராது; மிகவும் பிரகாசிக்கிற காளமேகம் போன்ற நிறத்தை உடையவனே, வித்துவக்கோட்டம்மா முதலில் செய்த புண்ணியத்துக்கும் நிர்வாஹகனே, அப்படிப்பட்ட ஆறுகள் போல (என் மனதில்) புகுந்து பிரகாசிக்கின்ற உனது கல்யாண குணங்களை அன்றி (வேறு எதுவும்) என் மனதில் பதியவில்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஸர்வதா பிகத: ஸத்பி: ஸமுத்ர இவ வந்துபி: (பாலா காண்டம், 1-16) அதாவது, நதிகளால் அடையப்படும் கடலைப்போல், எல்லோர்களால் எப்போதும், ஸ்ரீ ராமபிரான் அடையப்பட்டான் என்று வால்மீகி சொன்னது போல, இந்த நதிகள் புகுந்ததால் கடல் நிறையும் என்பதும், இல்லையாகில் குறையும் என்பதும் இல்லை. அதே போல எம்பெருமானின் (ஸ்ரீராமனின்) குணங்களில் எத்தனை பேர் வந்தாலும் வராவிட்டாலும் ஒரு மாற்றமும் இல்லை.

மிகுந்த பிரகாசமான காளமேகம் போன்ற நிறத்தை உடையவனே, நீ, என் நெஞ்சினில் ஆழமாக உள்புக, உள்புக பிரகாசமாகவும், மிருதுவாகவும், இனியமையாகவும் விளங்கும் உன் கல்யாண குணங்களில் அல்லது வேறு ஒன்றிலும் மனத்தை செலுத்தாதவனாக இருக்கிறேன், அதற்கு காரணம், புண்ணியனே, எல்லா நல்வினைகளுக்கும், புண்ணியங்களுக்கும் முதல் காரணமாகவும் ஆதாரமாகவும் இருப்பவன் நீயே என்பதால் என்று சொல்லி முடிக்கிறார்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் இராமாயணம் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நப்பின்னை நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply