மாவினைவாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணணை என் கண்ணணை வல் குன்றம் ஏந்தி * ஆவினை அன்று உயக்கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அந்தமிழ் இன்பப் * பாவினை அவ் வடமொழியைப் பற்று அற்றார்கள் பயில் அரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் * கோவினை நா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே
பெருமாள் திருமொழி 1.4
கேசி என்னும் அசுரனின் வாயைக் கிழித்து (அடியார்களின் விரோதி ஒழிந்தான் என்று) மகிழ்ந்த, அடியவர்களிடம் அன்பு பூண்டவனாய், கடல் போன்ற நிறத்தை உடையவனாய், எனக்கு சுலபனான கிருஷ்ணனாய், இந்திரன் கல் மழை பொழிந்த அன்று, வலிமை பொருந்திய கோவர்த்தன மலையைத் தூக்கி, பசுக்களை காப்பாற்றிய இடையர்களுக்குத் தலைவனாய், நித்யசூரிகளுக்குத் ஸ்வாமியாய், அழகிய தமிழாலாகிய பரம போக்கியமான அருளிச் செயலைப் போல இனியவராய், அழகிய வடமொழியில் உள்ள ஸ்ரீ ராமாயணம் போல் இனியவராய், இவ்வுலக பந்தங்களை விட்ட அனன்ய பிரயோஜனர்கள் (எம்பெருமானைத் தவிர வேறு ஒருவரையும் பின்பற்றாதவர்கள்) நித்ய வாசம் செய்கின்ற கோயிலிலே திருவனந்தாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகின்ற ஸ்வாமியான ஸ்ரீ ரங்கநாதனை நாக்கு தழும்பேறும்படி துதித்து என்னுடைய கைகளால் பறிக்கப்பட்ட புஷ்பங்களைப் பணியாறி அஞ்சலி பண்ணும் காலம் என்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வேலை வண்ணனை என்று சொன்னது, அடியவர்களின் விரோதிகளை வளர்த்தாலும் விடமுடியாத வடிவழகை உடையவனே என்கிறார். இருட்சியால் வந்த அழகு என்றும் குளிர்ச்சியால் வந்த அழகு என்றும் கூறுகிறார்.
இந்திரன் பொழியும் கல் மழையை கண்டு சலிப்படையாத மலை என்று கூறுகிறார். வல் குன்றம் என்றாதல் சிரமமான மலை என்று கொள்ளலாம். காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளாத பசுக்களை காப்பாற்றிய எம்பெருமான் என்கிறார்.
ஆயர் ஏற்றை என்றதால் தன் பருவத்தில் உள்ள பிள்ளைகளைக் காட்டிலும் மேனி பூரித்தும் பளபளப்பாகவும் உள்ளவன் என்றாகும்.
Popular அந்தர்யாமி ஆதிசேஷன் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடமதுரை திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புருஷோத்ததமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்
Leave a Reply