திவ்ய பிரபந்தம்

Home

PT 1.3 எம்மாண்பில் அயன்

எம்மாண்பில் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு * எம்மாடும் எழிற் கண்கள் எட்டினோடும் தொழுதேத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் * அம்மான் தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் * அம்மான் தன் அடியிணைக் கீழ் அலர்களிட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே

பெருமாள் திருமொழி 1.3

எல்லா விதத்தாலும் உண்டான பெருமையை உடைய பிரஹ்மா (ஸ்தோஸ்திரம் செய்வதற்கு என்று ஏற்பட்ட) தன்னுடைய நான்கு நாக்குகளாலும் தன் ஆர்வத்துக்குத் தக்கபடி தொழுது (நான்கு வேதங்களை ஒதுவதற்கு என்று ஏற்பட்ட) நான்கு முகங்களாலும் எல்லாப் பக்கங்களிலும் அழகிய எட்டு கண்களுடன் கைகூப்பி ஸ்தோத்திரம் பண்ணி, ஸாஷ்டாங்கமாக சேவிக்கும்படி நின்ற சிவந்த பொன் போல ஸ்வாமியான தன்னுடைய தாமரைப்பூவை உடைய திரு நாபி தோன்ற ஸம்ஸாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளர்ந்து அருளுகிற ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளின் கீழ் புஷ்பங்களை சமர்ப்பித்து அங்கே அடியார்களோடு கிட்டும் நாள் என்றைக்கோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஸ்தோத்ரங்களை பண்ணும் தன்மையில் குறைவற்று இருப்பது என்பது பிரம்மாவின் மாட்சிமை என்கிறார். நான்கு நாக்குகளாலும் தன் ஸ்ரத்தைக்கு தக்கபடி ஏத்தி, நான்கு வேதத்திற்கு என்று ஏற்பட்ட நான்கு முகங்களையும் கொண்டு, எல்லா திசைகளிலும் அழகை அனுபவிக்கைகாக பல கண் படைத்த பயன் பெற்றான்.

செம்பொன் அம்மான் தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற என்று சொன்னது, பிரம்மாவின் காரியங்களுக்கு எல்லாம் காரணம் தான் என்ற மகத்துவம் தோன்றும் படி தாமரைப் பூவை உடைய தன் திருநாபி தோன்ற என்பதற்காக.

அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே என்று சொன்னது, அங்கு அந்தரங்க கைங்கர்யங்களை செய்பவர்களோடு தானும் சேர்வது எப்போது என்று கேட்பதாகும்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடமதுரை திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புருஷோத்ததமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply