துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே * ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால், * எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், * அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், அரங்கத்தரவணைப் பள்ளி யானே.
சென்ற இரண்டு பதிகங்களில் பெரியபெருமாளின் திவ்ய வைபவங்களையும், திருவரங்கம் திருப்பதியின் வைபவங்களையும் பாடி அனுபவித்தார். ‘தன்னடியார் திறத்தகத்தே‘ என்ற பாடலில் எம்பெருமான் அடியார்களை விடாமல் பிடித்து கொண்டு உள்ளதையும், ‘இருளகற்று எறி கதிரோன் ‘ என்ற பாடலில், திருவடிகளை போற்றி, எம்பெருமானை ஏற்றுக் கொண்டவர்களை, அர்ச்சிராதி மார்க்கத்திலே பரமபதம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கு அருள் கொடுத்து, அடிமை கொள்ளும், பெரியபெருமாளுடைய திவ்ய குணங்களை அனுபவித்தவர் என்பதால், எம்பெருமான் தனக்கும் , திருந்திய அடியவர்களுக்கும் பரமபதத்தை அருளும் திருவுள்ளம் கொண்டவர் ஆதலால், ஆழ்வாருக்கு அங்கு சென்று கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற ஆசை பெருக, அதற்கு இந்த தேக சம்பந்தம் அறுந்து போகும்படி, வேண்டி இந்த பதிகத்தில் பாடுகிறார். இப்படி தேக சம்பந்தம் அறுபடும் போது, யம கிங்கரர்களால் வருத்தப்பட நேரிடும் என்று எம பயம் வந்து, துன்பம் நேரிடும் போது , அப்படிபட்ட துன்பங்களில் இருந்து, எம்பெருமான் விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். அது தன்னை எம்பெருமான் திருவடிகளில் விழுந்து பாடி, தெரிவித்துக் கொள்வோம் என்ற நிலையில், இறுதி காலத்தில் கர்ம வினை பயன்களால் யம கிங்கரர்களால் துன்பம் நேர்கையில், அத்தகைய கவலைகளால் எம்பெருமானின் திருவடிகளை நினைக்க மறந்து விடவும், அவனது கீர்த்திகளை பாடவும் சக்தி இல்லாதவனாக இருப்பேன் ஆதலால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்று சொல்லி, எம்பெருமான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவன் திருவடிகளில் சரணாகதி அடையும் பொருட்டு இந்த பதிகத்தில் விண்ணப்பம் செய்கிறார். மேற்சொன்ன பயமும், பிரார்த்தனையும், சந்தேகங்களுக்கு மூல காரணமான குழப்பத்தினால் ஏற்பட்டது என்று விளக்கம் கொடுத்து, பாகவதர்களுக்கு எம பயம் வரக்கூடாது என்ற கருத்தில் இருந்து ஆழ்வார் சொல்வது வேறு பட்டது அல்ல என்றும் உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 4.10.1
அரங்கத்து அரவு அணை பள்ளியானே, அடுத்தவரைக் காக்கும் நிறமுடைய உன்னை அடைக்கலம் புகுவது என்னுடைய கரணங்கள் எல்லாம் சோர்ந்த காலத்தில் நீ துணை ஆவாய் என்று (ஆழ்வார் சொல்ல) அது செய்வது ஒரு முறை பிரபத்தி செய்தவர்களுக்கு அன்றோ (என்று எம்பெருமான் திருவுள்ளமாக), அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு நான் ஒப்பு இல்லை என்றாலும் உன்னை சரணமாக அடைந்தேன் (என்று ஆழ்வார் சொல்ல, நாம் யாரை ரக்ஷிப்பதை கண்டு நம்மை வந்து அடைந்தீர் என்று எம்பெருமான் திருள்ளமாக), தேவரீர், ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு க்ருபை செய்ததால் (என்று ஆழ்வார் சொல்ல, அப்போது வந்து ரக்ஷிக்கிறோம் என்று எம்பெருமான் திருவுள்ளமாக), மூன்று தோஷத்தால் உண்டான இளைப்பானது என்னை வந்து கிட்டி வருந்தும் காலத்தில் அந்த அவஸ்தையில் அடியேன் சிறிதேனும் தேவரீரை நினைக்க மாட்டேன்; அந்த காலத்திற்காக என் கரணங்கள் (உடல் உறுப்புக்கள்) தெளிவுடன் இருக்கிற இப்போதே சொல்லி வைத்தேன் என்கிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, “திருமாலே! அடியவர்களை காப்பாற்றுவதே குறிக்கோளாக கொண்ட உன்னை அடியேன் அடைவதற்கு அணுகுவது, ‘செவி, வாய், கண், மூக்கு முதலியவை எல்லாம் தளர்ச்சி அடைந்து ஒரு காரியத்திற்கும் உதவப் பெறாத காலத்தில் நீ துணையாவாய்’ என்ற நிச்சயத்தினால் அன்றோ” என்று அருளிச் செய்ய அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! பரமபத பதவி அடைய வேண்டிய அதிகாரிகளுக்கு நீர் ஒப்போ?” என்று கேட்க; ஆழ்வார், “அப்படிப்பட்ட அதிகாரிகளோடு எனக்கு ஒப்பு இல்லையாயினும், எம்பெருமானின் எல்லை இல்லாத கருணையை எதிர்பார்த்து, அடியேனுடைய துக்கம் பொறுக்க மாட்டாமல் உன்னை அடைந்தேன்” என்று சொல்ல, இப்படி நான் யாரை காப்பாற்றியதை கண்டு என்னை நீர் அடைந்தது? ” என்று எம்பெருமான் கேட்க “ஆர்த்தியும் அநந்ய கதித்வமும் ஒழிய வேறொரு யோக்யதை இல்லாத, ஸ்ரீகஜேந்ததிர ஆழ்வானுக்கு நீ அருள் புரிந்தது மிகவும் பிரஸித்தம் அன்றோ” என்று ஆழ்வார் அருளிச் செய்ய, அது கேட்ட எம்பெருமான், “ஆனால் அந்த ஸ்ரீகஜேந்திராழ்வானைப் போல் நீர் உமக்குத் தளர்ச்சி வரும் போது நினைத்தீராகில் அப்போது வந்து நாம் ரக்ஷிக்கிறோம்” என்று சொன்னார். ஆழ்வார் “வாதம், பித்தம் போன்ற தோஷங்களால் உடல் வருந்தி, அதனால் உண்டாகும் தளர்ச்சியினால் உம்மை அடியேன் நினைப்பது எப்படி ?” என்று கேட்டு, ஆழ்வார், “இறுதி காலத்துக்காக இப்போதே சொல்லி வைக்க முடியும்; அதைத் தான் சொல்லி வைத்தேன்” என்று சொல்ல, “இப்படி நீர் சொல்லி வைத்தால் இதை நான் நினைத்திருந்து உம்மை ரக்ஷிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?” என்று எம்பெருமான் கேட்க அதற்கு ஆழ்வார், “ஸ்ரீவைகுந்தத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் கோயிலில் (திருவரங்கதிற்கு) வந்து பள்ளி கொண்டருளினது இதற்காகத் தானே” என்று சொல்வதாய் அமைந்துள்ளது இந்த பாசுரம்.
Leave a comment