திவ்ய பிரபந்தம்

Home

PT 1.1 இருளிரிய

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனம் துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த * அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி * திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் * கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே

பெருமாள் திருமொழி 1.1

தனியன்கள்

தனியன் என்பது ஆழ்வார்கள்-ஆச்சார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம். இந்த ஆழ்வாரின் சரித்திரத்தை சுருக்கமாக இங்கே காணலாம். பெருமாள் திருமொழிக்கு இரண்டு தனியன்கள் உள்ளன. முதல் தனியனின் பெருமையே இது சுவாமி இராமானுஜர், அருளிச் செய்த தனியன் என்பதாகும்.

இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள்
பொன்னஞ்சிலை சேர் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு

இதன் பொருள், அழகான பசுமையான நிறத்தை உடைய கிளியே இங்கே வா, உனக்கு இனிமையான அமிர்தத்தை உண்ணக் கொடுக்கிறேன், என் அருகே வா; தெற்கு திக்கில் உள்ள ஸ்ரீரங்கத்தை குறித்து, இனிய கவிகளை இயற்ற வல்லவராய், பக்தி முதலான குணங்களில் நிரம்பியவராய், வில்போல் அழகிய புருவங்கள் கொண்டவரும், எல்லா மாதர்களாலும் வணங்கப்படுகின்றவராகிய, எங்கள் சேர குலத்திற்கு அதிபதியாய், பிரபன்னர்களுக்கு (மோக்ஷம் வேண்டுபவர்களுக்கு) தலைவரான அவரை, குலசேகரா என்று சொல்லிக்கொண்டே (பிதற்றிக் கொண்டே) இரு.

மற்றொன்று,  மணக்கால் நம்பி என்ற ஆச்சார்யன் அருளிச் செய்த தனியன்

ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கை இட்டவன் – மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குல சேகரன் முடி வேந்தர் சிகா மணியே

இதன் பொருள், (மந்திரிகளின் சூழ்ச்சியினால்) நவரத்ன மாலை ஒன்று கேட்டு போக, அதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருடியதாக, கள்ள மந்திரிகள் சொல்ல, “பாகவதர்களாகிய இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ய மாட்டார்கள்” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு, பாம்புக்கு குடத்தில் கைவிட்டு அருளியவரும், எதிரிகளை தனது வில்வலிமையினால் வெல்பவரும், சேர குலத்திற்கு ரத்னம் போன்றவரும் குலசேகர ஆழ்வார் ஆவார் என்பதாகும்.

குலசேகர ஆழ்வார் பரம காருணிகனான எம்பெருமானின் அருளால் பெற்றது பக்தி ரூபமான ஞானம். அவனை அப்போதே காண வேண்டும் என்று ஆசை பிறந்து, பரமபதத்தில் சென்று அனுபவிக்கும் வரை காத்து இருக்க முடியாமல், பரமபதத்தில் மேன்மைக்கு உறுப்பான குணங்களோடு, எளிமைக்கு உறுப்பான நீர்மை முதலான குணங்களோடு திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமாளை அனுபவிப்பதற்கு ஏங்கி, ராஜ்ஜிய காரியங்களாலும், பாகவத ததியாராதன தடைகள் உண்டாவதால், ‘அணி அரங்கத்தில் பள்ளி கொள்ளும் கருமணியை அடியேன் கண்டு களிப்பது எந்நாளோ’ என்று தம் ஆசையை வெளியிடுகிறார். இது நம்மாழ்வார் ‘அடியார் குழாங்களை – உடன் கூடுவது என்று கொலோ ‘ (திருவாய்மொழி 2.3.10), மற்றும் ‘அந்தமில் பேரின்பத்தடியரோடு இருந்தமை’ (திருவாய்மொழி 10.9.11) பிரார்த்தித்து பெற்ற பேற்றை இங்கே அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

ஸ்ரீரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறிப் போகும்படி ஜோதிஸ் உடைய மாணிக்கங்கள் விளங்கும் நெற்றியையும், இரண்டாய் சேர்ந்த திருவடிநிலை என்று சொல்லுகிறவற்றை உடைய ஆயிரம் படங்களையும் பூர்ணமாகவுடைய, நாகங்களுக்கு அரசனாய் மகா தேஜாசவியான திருவனந்தாழ்வானாகிய அழகு மிகுந்து உயர்ந்த வெண்ணிறமான திருப்படுக்கையிலே பொருந்தி, தெளிந்த நீரை உடைய காவேரியானது அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க, கண்வளர்ந்து அருளுகிறவராய், நீல ரத்தினம் போன்றவராய், ஒப்புயர்வற்ற சௌகரியங்கள் உடையவரான பெரியபெருமாளை என்னுடைய கண்களானவை இடைவிடாமல் சேவித்துக் கொண்டு உகக்கும் நாள் எந்நாளோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி என்றது இருள் சிதறிப் போகும்படி ஜோதிஸ்ஸை உடைய மணிகள் விழிக்கிற நெற்றி என்கிறார்.

இனம் துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த என்றது இரண்டாய் சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைய, பணங்கள் ஆயிரத்தையும் பூரணமாகக் கொண்டவனாய் என்பதாகும்.

அரவரசப் பெருஞ்சோதி என்றது நாகராஜா என்னும் மஹா தேஜஸ்ஸை உடையவன் என்று பொருள்.

அனந்தன் என்னும் என்று சொன்னது, எல்லாவற்றையும் வியாபித்து நிற்கிற ஸர்வேஸ்வரனை கொள்ளுகிற ஸ்வரூப குணங்களை உடையவனால் அனந்தன் என்று சொல்லப்படுகிறான் என்கிறார். ஸுமுகன் வாசுகி தக்ஷகன் என்று உள்ளவர்களை காட்டிலும் பகவத் கிருபை உடையவன் என்ற பிரசித்தியை பெற்றவன் என்கிறார்.

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி என்பது அழகுமிக்கு மறு அற்ற வெள்ளைப் படுக்கையாகிற திருவனந்தாழ்வானை மேவி என்று பொருள்.

திருவரங்கப் பெருநகருள் என்பது இந்த திருவரங்கம் ஆகிற மகா நகரத்தில் என்று பொருள். வைகுண்டே து பரே லோகே என்று சொல்லுமதுவும் இங்கே காணும் இவர்க்கு.

தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடி வருட என்பது ‘தெளிந்த நீரை உடைய காவேரி, திரைகளாகிற கைகளாலே திருவடிகளை வருட’ என்று பொருள்.

பள்ளி கொள்ளும் கருமணியை என்றது திருவனந்தாழ்வான் மேலே ஒரு நீல ரத்தினம் சாய்ந்தார் போலே கண் வளர்ந்து அருளிபவனை என்பதாகும்.

கோமளத்தை கண்ணால் துகைக்க ஒண்ணாத சௌகரியம் உடையவனை

கண்டுகொண்டு பசிஉள்ளவர்கள் ‘சோற்றைக் கண்டு கொண்டு ‘ என்றபடி.

என் கண்ணிணைகள் என்பது பட்டினி விட்ட என் கண்கள் என்று பொருள்.

என்று கொலோ களிக்கும் நாளே என்பது அங்கே கண்டு, ‘அஹம் அன்னம் அன்னம் ‘ என்று களிக்கும் களிப்பை இங்கே கண்டு களிப்பதுஎன்றோ என்பதாகும்.

Popular அந்தர்யாமி ஆதிசேஷன் உலகமுண்ட பெருவாயன் கம்ஸன் காளிங்க நர்த்தனம் கிருஷ்ணாவதாரம் குவலயாபீடம் கேசவன் கோவர்தனகிரி கோவிந்தன் சகடாசுரன் சந்திரன் சார்ங்கம் சிவன் சீதை சுதர்சன சக்கரம் திரிவிக்ரம அவதாரம் திருக்கண்கள் திருக்கோட்டியூர் திருப்பவளவாய் திருப்பாற்கடல் திருமாலிருஞ்சோலை திருமேனி திருவடமதுரை திருவடிகள் திருவரங்கம் திருவாய்பாடி திருவேங்கடம் நரசிம்ம அவதாரம் நாராயணன் பாஞ்சசன்னியம் பிரமன் புருஷோத்ததமன் புல்லாங்குழல் பூதனை பெரியதிருவடி (கருடன் ) மகாபாரதம் மாதவன் மாயன் யுத்தகாண்டம் ராமாவதாரம் வாமனாவதாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைகுந்தம்

Leave a Reply