மாட மாளிகை சூழ் மதுரைப் பதி * நாடி நந் தெருவின் நடுவே வந்திட்டு * ஓடை மா மத யானை யுதைத்தவன் * கூடு மாகில் நீ கூடிடு கூடலே
நாச்சியார் திருமொழி 4.5
நெற்றி பட்டை உடைய, மிக்க மதம் கொண்ட, குவலயாபீடம் என்ற யானையை உதைத்து தள்ளிய கண்ணன், மாடங்களை உடைய, மாளிகைகளால் சூழப்பட்ட மதுரை மாநகரில், நம் வீட்டை தேடிக் கொண்டு, நம் வீதி வந்து நம்மோடு கூடுமாகில் கூடிடு கூடலே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
குவலயா பீடமென்னும் யானையை முடித்த கண்ணன், மாட மாளிகைகளாலே சூழப்பட்ட (திருவட)மதுரை மாநகரிலே நம் வீட்டைத்தேடி, நம் தெருவிற்கே வந்து நம்மை கட்டுவானாகில் கூடிடு கூடலே என்று ஆண்டாள் பாடுகிறார். ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர். கண்ணன் திருவாய்ப்பாடியில் இருந்து வருவதாகவும், ஆண்டாள் திருவடமதுரையில் இருப்பதாகவும் விளக்கம் செய்வார்கள். திருவடமதுரை செழிப்புடன் இருப்பதையும் நோக்கலாம்.
விரோதிகளை அழிக்கும் தன்மையை இயல்பாக உடையவன், கூடிடும்படி கூடலே நீ கூடிடு என்கிறாள்.
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
கம்ஸன் வில்விழவை ஏற்பாடு செய்து, வடமதுரை மாநகரில் மாட மாளிகைகள் அமைத்தது, கண்ணன் தன் மேல் உள்ள காதல் காரணமாக, தன்னை தேடி வருவதற்காக என்று கருதுகிறாள்.
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
தேடி நேரே என் வீட்டிற்கு வந்தால், அதில் ஸ்வாரஸ்யம் இல்லை என்றும், மதுரை மாநகரில் ஒவ்வொரு தெருவிலும், ‘இவள் வீடு எது, இவள் வீடு எது’ என்று தேடி, எல்லோரும், ‘இவள் கண்ணனுக்கு வேண்டியவள்’ என்று ஆராவரம் உண்டாகும்படி தன்னை தேடி அதனால் உண்டான ஆயாசம், திருமேனியில் தோன்றும்படி வர வேண்டும் என்று ஆசை பாடுகிறாள்.
விஷ்ணு புராணத்தில் சொன்னது போல, பல ராம கிருஷ்ணர்களுக்கு மிக உகப்புடன் மாலக்காரர் மாளிகைக்கு நுழைந்தனர். அன்பில் விஞ்சியவர்களாய், ஸ்வாமிகளாய் உள்ள அவ்விருவரும் தன்னுடைய குடிசைக்கு எழுந்து அருளினார்கள் என்று மாலக்காரர் சொல்ல, நன்றி உடைய தான் அவர்களை அர்ச்சிக்க கடவேன் என்றும் சொல்கிறார். இந்த மாலாகாரரை மூலை மூடுக்கெல்லாம் உள்ள தெருக்களை எல்லாம் தேடி உகப்புடன் வந்தார் என்று இந்த மதுரையின் பல தெருக்களை தாண்டி இந்த மாலக்காரரை அடைந்த உகப்பு தோன்றுகிறது. அன்பு விஞ்சியவர் என்று சொன்னது, இருவரும், பரத்துவம், சௌலப்யம் என்ற இரண்டும் தோன்றினாலும், சௌலப்யம் விஞ்சி இருப்பதை சொல்கிறார். சுவாமி என்பதால், பரத்துவம் அவர்களுடனே உள்ளதும் விளங்கும். மாலாகாரரின் குடிசைக்கு எழுந்தருளியதால், அவர்களிடம் பரத்துவம் இருந்த போதும் சௌலப்பியம் விஞ்சி இருந்தது விளங்கும். நன்றி உடைய தான் என்று சொன்னது, பெரியவர்கள் எல்லாம் தேடி சென்று பெற முடியாத புதையலை, தான் இருந்த இடத்திலேயே கண்டு கொண்டதால் தான் பாக்கியசாலியானதை சொல்ல என்கிறார்.
இப்படி மாலக்காரரை தேடி வந்தது போல, பெரியாழ்வார் புதல்வியான ஆண்டாளும் தன்னை தேடி கண்ணன் வருவான் என்கிறாள்; திருவாய்பாடியை தன்னுடைய நினைத்ததை போல, திருவடமதுரையிலும் தனக்கு மாளிகை இருப்பதாக பாடுகிறாள். விஷ்ணு புராணத்தில் சொல்லியது போல, அவன் தேவனாக அவதரிக்கும் போது, இவளும் தேவ ரூபம் எடுக்கிறாள்; அவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் இவளும் மனித ரூபம் எடுக்கிறாள்; விஷ்ணு தேகத்திற்கு தகுந்தாற்போல் இவள் அவதாரம் எடுக்கிறாள்; அவன் உகந்து அருளின தேசங்களில், இவள் ஒரு திருமாளிகை ஆசைப்படுவதில் வியப்பில்லை.
தான் வாழும் தெருவில் வரும் போது, தன் வீட்டிற்கு தான் வருகிறான் என்று எவரும் அரியமுடியாதபடி எல்லோரும் ஆச்சரியம் அடையும்படி சடக்கென்று தன் வீட்டில் நுழைய வேண்டும் என்று விரும்புகிறாள்;
இயல்பாகவே விரோதிகளை அழிக்கும் தன்மை உடைய கண்ணன் தன்னுடன் கூடுவதற்கு தடையாக இருந்த குவலயாபீடத்தை அழித்து விட்டான், எனவே நீ கூடி அவனை என்னோடு கூடும்படி செய்வது உன் கடமை என்று சொல்லி முடிக்கிறாள்.
Leave a comment