திவ்ய பிரபந்தம்

Home

NT 4.4 ஆய்ச்சிமார்களும்

நாச்சியார் திருமொழி 4.4

காலால் காளிங்க நரத்தனம் ஆடியவன், கையாலே எனக்கு சௌபாக்கியம் கிடைக்கும்படி நீ கூடுவாயாக என்கிறாள்.

ஆச்சியர்களும், இடையர்களும் பயப்படும்படியாக புஷ்பங்கள் நிறைந்த உயர்ந்து இருந்த கடம்ப மரத்தில் மேல் ஏறி, காளியன் தலையும், திருவடியும் தண்ணீரில் மூழ்கும் படி எழும்பி குதித்து, பாக்கிய சாலியான காளிய நாகத்தின் மேல் நர்த்தனம் செய்த நாட்டிய சாஸ்திர நிபுணனான கண்ணன் வரக்கூடுமாகில் கூடலே கூடிடு என்கிறாள்.

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட

பயமே இயல்பாக உடைய ஆச்சியர்களும், ‘உந்து மத களிற்றன்’ (திருப்பாவை 18) நந்தகோபனை போல அச்சம் என்பதே என்னது என்று தெரியாத ஆயர்களும், ஒரே போல் பயப்படும் ‘போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை ‘ (நாச்சியார் திருமொழி 12.5) என்றபடி, கண்ணன் காளியன் தலை மேல் பாய்ந்தான் என்று கேட்டவுடன், கேட்ட இடத்திலே ஆயர்களும் ஆச்சியர்களும் செத்தவர்கள் போல மயங்கி விழுவதாலே, ஆய்பாடியும், பொய்கைகரையும் பிணக்காடாய் போர்க்களமாக காட்சி அளிக்கின்றன.

பூத்த நீள்கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து

காளியனுடைய விடத்தினால் உலர்ந்து எரிந்த கடம்ப மரம், அமுத தாரை பொழியும் கண்ணனுடைய திருவடிகள் பட்டவுடன், பூக்கள் நிறைந்த மரமாக புஷ்பித்தது. விஷ்ணுவுடைய திருவடிகளில் அமுதம் வெள்ளமிடுகிறது என்றும், வேதத்தால் எம்பெருமான் திருவடிகளில் அமிர்த பிரவாகம் பொழிவதாக சொல்லப்பட்ட எம்பெருமான் திருவடிகளால், காய்ந்த மரமும் எம்பெருமான் திருவடி பட்டவுடன் பூக்கும். ஸ்ரீ ராமபிரான் திருவடிகளால், கல் பெண்ணால், ஸ்ரீ கண்ணனின் திருவடிகளால் பட்ட மரம் பூக்க கூடாதா என்கிறாள்.

நீள்கடம்பு என்று சொன்னது, காளியன் தலையில் குதிப்பதற்கு தகுந்தபடி கடம்ப மரத்தின் உச்சியில் ஏறினான் என்ற கருத்தை தெரிவிப்பதற்காக என்கிறார்.

புகப் பாய்ந்து என்று சொன்னது, கண்ணன் கடம்ப மரத்தில் இருந்து குதித்தவுடன், அவனுடைய திருவடியும், காளியன் தலையும் ஒரே நேரத்தில் பொய்கையின் உள்ளே சென்றது என்பதை தெரிவிக்க என்கிறார்.

வாய்த்த காளியன் மேல் நடமாடிய

தன்னுடைய தலையில் எம்பெருமானின் திருவடிகள் பலமுறை தொடர்ந்து மாறி மாறி துகைக்கும் படி பாக்கியம் பெற்ற காளியன் என்கிறார். தன் ஸ்தனங்களில் அவன் கை நடனமாடவேண்டும் என்று ஆசை படுகிற அவளின் மனோரதம் ஈடேறவில்லை, ஆனால் காளியன் ஆசைபடாமலே அவன் தலைமேல் எம்பெருமான் திருவடிகள் நடனமாடுகின்றன என்கிறாள்; பெண்ணாக பிறந்து ஆசைபட்டு கிடைக்காமல் இருப்பதைவிட, காளியானாக ஆசைபடாமல் இருந்தால் கூட கிடைத்து இருக்கும் என்று ஆண்டாள் திருவுள்ளம்.

‘விஷங்களை பொதிந்து கொண்டு இருக்கும் தலை, தலையான பேற்றை பெற்றது; அனைவருக்கும் ஞானம் அளிக்கும் ஞான பாலான அமுதத்தை பொதிந்து கொண்டு இருக்கும் முலைகள் பேறு பெறாது ஒழிவதே’ என்பது வியாக்யான கர்த்தாவின் வார்த்தைகள்.

கண்ணன் காளியன் மேல் ஆடிய நடனத்தை கொண்டே பரதமுனி முதலானோர் நாட்டிய சாஸ்திரங்களை எழுதினார்கள் என்கிறார்.

கூத்தனார் வரில் கூடிடு கூடலே

காளியன் தலை மேல் நடனம் ஆடி ஓசிந்த உடம்போடு வந்து தன்னை அணைக்க வேண்டும் என்று ஆசைபடுகிறாள்; அவனை எதிர் பார்த்து இருக்கும் நான், இப்போது கூடலாகிற உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் என்று முடிக்கிறாள்.

Leave a comment