பூ மகன் புகழ் வானவர் போற்றுதற் * ஆம் மகன் அணிவாணுதல் தேவகி * மாமகன் மிகு சீர் வசுதேவர்தம் * கோமகன் வரில் கூடிடு கூடலே
நாச்சியார் திருமொழி 4.3
பூவில் பிறந்த பிரமனும் புகழ் பெற்ற நித்யசூரிகளும், பாடி துதிப்பவர்க்கு தகுந்த, புருஷோத்தமனாய், அழகிய ஒளி உடை நெற்றியை உடைய தேவகியினுடைய சிறந்த புத்திரனாய், மிகுந்த நற்குணங்கள் உடைய வசுதேவருடைய மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணன் என்னை அணைக்க வருவார் ஆகில் கூடலே கூடிடு.
உபயவிபூதி நாயகனான இருந்து கண்ணனாய் அவதரித்தவனை கூட்டி வைக்க வேணும் என்கிறாள்.
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆம் மகன்
உந்தி தாமரை பூவில் உதித்த பிரமன் என்று சொல்வது இந்த உபயவிபூதியில் (இந்த உலகத்தில்) அவனால் படைக்கப்பட்ட அனைவரையும் சொன்னதற்கு சமம். இராமாயணம் பாலகாண்டத்தில் (18.28)ல் சொல்வது, ‘ஸர்வ ப்ரியகரஸ்தஸ்ய ராமஸ்யாபி ஷரீரத:৷৷ * லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்நோ பஹி:ப்ராண இவாபர:. (18.28) – கைங்கர்ய லக்ஷ்மி அதிர்ஷ்டம் பெற்ற லக்ஷ்மண் தனது சொந்த உடலை விட தனது சகோதரருக்கு (இராமருக்கு) எல்லா பிரியத்தையும் செய்து தருபவனாகவும், வெளியில் இருக்கும் இன்னொரு உயிர் போலவும் விளங்கினான். இப்படிபட்ட இளையபெருமாளை போல புகழப்படும் கைங்கர்யங்களை செய்து வரும் நித்யசூரிகள் என்று கூறுகிறார். இதனால் முன்னே சொன்ன இந்த உலகத்தில் உள்ளவரோடு மேல் உலகத்தில் உள்ளவர்களையும் சொல்கிறது. படகில் போகிறவனை, இரண்டு கரைகளில் உள்ளவர்களும் அழைப்பது போல, உபயவிபூதியில் உள்ளவர்களும் புருஷோத்தமனை போற்றுகிறார்கள்.
அணிவாணுதல் தேவகி
அழகிய ஒளியை உடையதாய், தனக்கு ஒரு ஆபரணமும் தேவை இல்லாத நெற்றியை உடைய தேவகிக்கு என்று கருத்து.
மாமகனுக்கு
அவள் இவனை செல்லம் கொடுத்து வளர்த்ததனால் வந்த செருக்கால், இவன் மகன் அல்ல, சகோதரன் போலும் என்று உருவத்திலும், அதிகார தோரணையிலும் மிகுந்து இருக்கும் மகன் என்பதால் மா மகன் ஆகிறான். இப்படி தாயார் வழியில் வந்த பெருமை மட்டுமா என்று கேட்டு கொண்டு மேலே சொல்கிறாள்.
மிகு சீர் வசுதேவர்தம் கோமகன்
தந்தைக்கு உரிய பரிவு குணத்தால் மிகுந்த வாசுதேவரையும் நியமிக்க வல்ல மகன் ஆதலால், கோமகன் என்கிறார். தசரத சக்ரவர்த்தியை நியமித்த ஸ்ரீராமன் போல அல்ல என்கிறார். மிகு சீர் வாசுதேவர், கம்சனால் கண்ணனுக்கு என்ன துன்பங்கள் வருமோ என்று கவலை பட்ட போது, ‘கவலை படாதீர்கள், எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன், நீங்கள், இங்கே சுகமாக இருங்கள்’ என்று நியமித்ததால் இது வேறு பட்டது என்கிறார்.
வரில் கூடிடு கூடலே
இப்படி வாசுதேவன், நந்தகோபன் இருவருக்கும் மகனாக பிறந்து,வளர்ந்ததால், இருவர் சாயலும் நடையில் தோற்றம் தர வரும்படி நடந்து வந்தால், நீ கூடி என்னையும் கூட்டிட்டு என்று சொல்கிறாள்.
Leave a comment