திவ்ய பிரபந்தம்

Home

NT 2.10 சீதை வாய் அமுதம்

நாச்சியார் திருமொழி 2.10

சீதா பிராட்டியின் அமிர்தாமிரதத்தை அனுபவித்தவனே, நாங்கள் இழைக்கும் சிற்றில்களை அழிக்காமல் இருக்க வேண்டும், வீதியில் விளையாடும் இடை பெண்களுடைய இளம் பருவத்திற்குரிய மெல்லிய சொல்லை உட்கொண்டு வேதத்தை உச்சரிக்கின்ற வாயை உடைய வைதீகதொழில் செய்பவர்களுடைய பரம காந்திகள், வாழுமிடமான ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாளுடைய திருவாக்கில் நின்று அவரித்த தமிழ் பாசுரங்கள் ஓத வல்லவர்கள் குறைவில்லாமல் பரம்பதம் சேரப் பெறுவர். 

இந்த பத்தையும் அனுசந்திப்பவர்களுக்கு பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார். 

கதாநுசாருபிம்போஷ்டஂதஸ்யாஃபத்மமிவாநநம் * ஈஷதுந்நம்யபாஸ்யாமிரஸாயநமிவாதுரஃ “ (இராமாயணம், யுத்த காண்டம் 5.13) ’அவளது தாமரை போன்ற திருமுகத்தை நான் எப்போது சற்றே உயர்த்தி கோவைகனி போன்ற அவளது அழகான உதடுகளை ஒரு துன்பப்பட்ட மனிதன், மேலான ரசாயனத்தை உடைய இனிப்பு ரசம் குடிப்பது போல, எப்போது குடிப்பேன் என்று தெரியவில்லை’ என்று ஸ்ரீராமன் சீதையை குறித்து சொல்லியதை சொல்லி, பருவம் நிரம்பிய சீதா பிராட்டியுடன் இந்த செயலை செய்தால் பலன் உண்டு, சிறுமிகளான எங்களிடம் இதை செய்வதால் என்ன பயன் என்கிறார்.

எங்கள் சிற்றில் நீ சிதையேல்

உன் நினைவு அறிந்து பரிமாறுவதற்கு தக்க பருவமும் அறிவும் இல்லாத எங்கள் சிற்றில்களை வலிய வந்து அழிக்காதே என்கிறார்கள். 

வீதி வாய் விளையாடும் அயர் சிறுமியர் மழலைச் சொல்லை

எல்லோரும் கூடுகிற வீதி நடுவிலே மறைக்க வேண்டிய அவயங்களை மறைக்கவும் அறியாமல் வஸ்திரங்களை தாறுமாறாக உடுத்திக் கொண்டு இஷ்டபடி விளையாடும் பருவம் நிரம்பாத இடை பெண்களுடைய சிறு பிள்ளை பேச்சை

வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் , கோதை வாய்த் தமிழ் வல்லவர்

வாயால் உச்சரிப்பது எல்லாம், வேத சப்தம் ஆகையால், செய்யும் காரியங்கள் எல்லாம் வைதீகமான காரியங்களாய் இருக்கும் அந்தணர்கள் வாழ்கிற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தலைவரான விஷ்ணுசித்தன் என்னும் பெரியாழ்வாருடைய திருமகளான கோதையின் திரு வாயில் படிபடியாய் அவதரித்ததாய், பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்டு சொல்லிய இந்த பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் கற்க வல்லவர்கள்

குறைவின்றி வைகுந்தம் சேர்வரே

ஆண்டாளை போல அணைத்தவுடன். ‘இந்த பக்கம் நின்றவர் என்ன சொல்வார்களோ’ என்று பயந்து வார்த்தை சொல்லுகிற குறை இன்றி, காமன் காலிலே விழ வேண்டிய குறையும் இன்றி, அணைத்தவுடன் அருகில் நிற்பவர்களையும் திருவாய்மொழி (8.3.6) சொல்லியபடி பணியா அமரர்‘ என்ற நித்யசூரிகள் ஆகும்படி ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அனுபவிக்க பெறுவார்கள் என்று சொல்லி முடிக்கிறார்.

Leave a comment