திவ்ய பிரபந்தம்

Home

NT 2.9 முற்றத்தோடு புகுந்து

நாச்சியார் திருமொழி 2.9

கண்ணனே, ஒரு திருவடியினால் இந்த திருமண்டலம் முழுவதும் தாவி அளந்து பரமபதம் வரை தாவி அளந்து மற்றொரு திருவடியினால் மேல் உலகமும் அளந்தார். நாங்கள் ஏகாந்தமாய் விளையாடுகிற முற்றத்தில் நுழைந்து உன் திருமுகத்தை எங்களுக்கு காட்டி, புன்சிரிப்பு சிரித்து எங்கள் சிற்றிலையும் நெஞ்சத்தையும் அழிக்க கடவாயோ, அவ்வளோடு இல்லாமல் எங்களை பற்றி அணைத்து கொண்டால் அருகில் நிற்பவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்.

கண்ணனோடு சம்சேலேஷித்து கொண்டு (விவாதம் செய்து கொண்டு) இருப்பதை சொல்கிறார்கள்.

முற்றத்தூடு புகுந்து

நாம் சிறுமிகள் என்பதால், கண் காணாத இடத்தில் இருந்தாலே, தகாத வார்த்தைகளை பேசி விவாதம் செய்ய நினைக்கிறான், எதிரே இருந்தால் நிச்சயம் தீம்புகள் செய்வான் என்று இவர்கள் கூடி

ஸமேத்ய மந்த்ரயித்வா து ஸமதாகதபுத்தயஃ. * ஊசுஷ்ச மநஸா ஜ்ஞாத்வா வரித்தஂ தஷரதஂ நரிபம்৷৷ (இராமாயணம் அயோத்யா காண்டம் 2.20) (பிராமணர்கள், மன்னர்கள் மற்றும் பிற முக்கிய மனிதர்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள், அர்த்தமும் தர்மமும் அறிந்த தசரதரின் கருத்துக்களை முழுமையாக அறிந்தவர்கள் ஒன்றாகக் கலந்து ஆலோசித்தனர். அவர்கள் நன்கு யோசித்து தசரதன் வயதான மன்னன் என்ற ஒருமித்த கருத்துக்கு வந்து, தசரதரிடம் இவ்வாறு கூறினார்கள்.) அதே போல, இவர்கள் எல்லோரும் ஒன்றாக மறைந்து போனால், இவன் இவர்கள் பின்னால் வருவான் என்று எண்ணினார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு முற்றத்தில் புகுந்து எல்லா கதவுகளையும் சாத்தி, தாழ்பாள் போட்டு, இவன் உள்ளே புகுந்து விட முடியாத செய்தார்கள். இவன் இட்ட குறி அழியாமல் வெண்ணை திருட வல்லவன் ஆகியதால் இவர்களுக்கு முன்னே, இதே முற்றத்தின் நடுவில் இவன் நிற்பதை கண்டு வெட்கி தலை குனிந்தார்கள்.

நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து

ஒவ்வொரு பெண்ணின் குனிந்த முகத்தை நிமிர்த்து, ‘வந்து விட்டோம், பார்த்தீர்களா?” என்றும், ‘உங்களை பின்னுக்கு தள்ளி முன்னாள் யாம் வந்தோம் ” என்றும், ‘கூட வரும் அனுபவம் தவறி விட்டதே’ என்றும், ‘எந்த வழியாக வந்தீர்கள்’ என்றும், ‘நெடும் தூரம் வந்ததால் கால்கள் வலிக்குமே’ என்றும் சொல்லி வந்தான். அவர்கள் தோற்றதை நினைத்து வெட்கப் பட்ட போது, இவன் புன்முறுவல் தோன்ற சிரித்தான். அவர்கள் மீண்டும் அங்கு இருந்த படியே சிற்றிலை இழைக்க ஆரம்பித்தார்கள். 

இப்படி நாம் இங்கே இருக்க, இவர்கள் வேறு காரியம் செய்வது போல நடிக்கிறார்களே என்று அவர்கள் கைகளும் நெஞ்சும் சிற்றில் இழைக்க முடியாதபடி செய்தான்.

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா

கோவிந்தா, பசு மேய்ப்பதை உனது காரியம் அன்றோ, பெண்களை துன்புறுத்துவதும் உனது காரியம் ஆகி விட்டதோ என்கிறார்கள். சிற்றிலை சிதைப்பதோடு எங்கள் நெஞ்சத்தையும் சிதைப்பது நியாயமா என்று கேட்கிறார்கள்.

முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்

தனக்கு ஒன்றை கொடுத்தவனை குழியில் தள்ளுபவர்களை போல, உனக்கு மூன்று அடி நிலம், கொடுத்தவனை பாதாள உலகிற்கு தள்ளியவன் அன்றோ நீ என்கிறார்கள். ‘இறை பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த பெருமாள்‘ (பெரியாழ்வார் திருமொழி 4.9.7) என்று சொல்லபட்டவன் அன்றோ என்கிறார்கள். பழியின் உச்ச நிலையை இவர்களிடம் இருந்து கேட்டு விட்டோம், இனி கேட்பதற்கு ஒன்றும் இல்லை, என்று அவர்களுடைய துகில்களை பறித்து அவர்களை அணைத்து அவர்கள் தங்கள் தாய்மார்கள் முன்பு நிற்க முடியாமல் செய்தான்.

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்

‘எங்களை வலிந்து பற்றி உடலை அணைத்து கொண்டால்’ என்ற அர்த்தத்தில் வருகிறது. முனிவர்களும் என் உடலை அணைத்து கொள்ள ஆசை படுகிறார்கள். உங்களுக்கு பொறுக்க முடியாதபடி இருந்ததோ, கசந்ததோ, உங்களுக்கு வேண்டியது இல்லையா, என்கிறான். அதற்கு அவர்கள், எங்களுக்கும் வேண்டியது தான், ஆனால் பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்களே, நம்மை அந்த நிலையில் பார்த்தால் அபவாதம் சொல்ல மாட்டார்களா என்கிறார்கள். இதனால் கண்ணனுடன் சம்சேலேஷம் நடந்ததை சொல்கிறார்கள்.

ஆண்களான ஆழ்வார், நாயிகா பாவத்தில் பாடும் போது, வன்மையோடு கலந்த வார்த்தைகள் கொண்டு பேசுவது போல அல்லாமல் இவள் மென்மையான வார்த்தைகளால் பேசுகிறாள். ‘ஒரு நான்று தடி பிணக்கே’ (திருவாய்மொழி, 6.2.7); ‘பந்தும் கழலும் தந்து போகு ‘ (திருவாய்மொழி 6.2.1) என் சினம் தீர்வன் நானே (பெருமாள் திருமொழி 6.8) என்பவை சில உதாரணங்கள்.  இவள் இயற்கையிலே மென்மை மிக்க பெண் ஆனதாலும், அதற்கு மேலும் ஸம்சேலேஷத்தில் பிறந்த மேன்மையாலும், மிக்க மேன்மையுடன் வார்த்தை சொல்கிறாள் என்று தோன்றும் படி சொல்வதை நம்பிள்ளை ஆச்சர்யப்பட்டு வார்த்தை அருளி செய்வாராம்.

Leave a comment