திவ்ய பிரபந்தம்

Home

NT 2.8 வட்ட வாய் சிறுகாதை

நாச்சியார் திருமொழி 2.8

ஒளி பொருந்திய ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரை, திருக் கையில் தரித்தவனான கண்ணனே, கடல் வண்ணனே, வட்டமான வாயை உடைய சிறிய பானையோடு சிறிய முச்சிலையும் மணலையும் வந்து இஷ்டபடி, விளையாடுகிற எங்களின் சிற்றிலை மறுபடியும் உபயோகிக்க முடியாதபடி அழிப்பதனால், என்ன பயன்; கையால் தொட்டும், காலால் உதைத்தும் துன்புறுத்தாமல் இருந்தாய்; நெஞ்சு கசந்து போனால் கருப்பு கட்டியும், ருசியாது என்பதை அறிவாய் அன்றோ. 

கற்கண்டு ஆனாலும் நெஞ்சு கசந்தால் சுவை இராது என்று அறிவாயாக என்கிறார்கள்.

வட்டவாய்ச் சிறுகாதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு, இட்ட மா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்?

இந்த சிற்றில்களின் விசித்திரமான அமைப்பை பார்த்தாயா, மணலை வைத்துக் கொள்ள வட்ட வடிவில் வாய் கொண்ட பானை, அதில் இருந்து நுண்மணலை புடைத்து எடுப்பதற்காக ஒரு சிறிய சுளகு, புடைத்து எடுத்த நுண்மணல், ஆகிய இவை எவ்வளவு அழகியதாய் உள்ளது என்கிறார்கள். இவற்றை கொண்டு, எங்கள் இஷ்டத்திற்கு எவராலும் தடை செய்ய முடியாதபடி, விளையாடுகிற எங்கள் சிற்றிலை, மறுபடியும் உருவாக்கி காண முடியாதபடி அழிப்பதானால் என்ன பயன், மற்றவர்களை கொண்டு இதனை தடுக்க கூடிய வயதும் எங்களுக்கு இல்லை என்கிறார்கள். அழிப்பது என்னுடைய பயனுக்காகவே என்று கண்ணன் அவற்றை அழிப்பதுடன் அவர்களையும் தொட முயல்கிறான்.

தொட்டு தைத்து நலியேல் கண்டாய்

அவர்கள் தடுக்க முயல, கண்ணனும் காலால் உதைக்க தொடங்குகிறான். அதனால் துவண்டு அவர்கள் தீம்பு செய்யாதே என்று கூற, சர்வேஸ்வரனான நான் தொட்டால் உங்களுக்கு துன்பம் ஆகிறதோ என்கிறான். அர்ஜுனனுக்கு விஸ்வ ரூபம் காட்டியது போல, சங்கு சக்கரங்களுடன், ‘கூர் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் ‘ (திருவாய்மொழி 6.9.1) என்று அன்புடையார் அனைவரும் காண ஆசைப் படும், இந்த வடிவழகு உங்களுக்கு கசக்கிறதோ என்று எம்பெருமான் கேட்கிறார்.

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்கண்ணனே

கரும்பு கட்டியே ஆனாலும் நெஞ்சு கசந்து விட்டால் சுவை இராது என்கிறார்கள். நீ எங்களுக்கு அப்படி ஆகி விட்டாய் என்ற கருத்து. கடல் வண்ணா என்று சொன்னதால், கண்ணால் கண்டு களிக்கலாமே தவிர, எடுத்து முகத்தை கழுவவோ, குடிக்க முடியாததாகவோ உள்ளது. நீயும் எங்களுக்கு அப்படி ஆகி விட்டாய் என்கிறார்கள்.

Leave a comment