குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்* மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்* கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்* வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்* மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை* எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்* எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்* தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 19
திருப்பாவை முழுவதும், இரண்டு பாடல் தவிர, ஒவ்வொரு பாடலிலும் எம்பெருமானின் பெயர் சொல்லபட்டு உள்ளது. சென்ற பாட்டு முழுவதும், எட்டு வரிகளும், தாயாரை குறித்து பாடும் பாடலாக உள்ளது, இந்த பாடலில் பாதி (4 வரிகள்) தாயார் குறித்தும், மீதி எம்பெருமான் பற்றியும் சொல்லப் பட்டுள்ளது. அடுத்த பாடலில் இரண்டு வரிகளில் தாயார் பற்றியும், ஆறு வரிகளில் எம்பெருமான் பற்றியும் சொல்லப் பட்டுள்ளது. அதன் பிறகு வரும் பாடல்களில் எல்லா வரிகளிலும் எம்பெருமான் பற்றி மட்டுமே சொல்லப் பட்டுள்ளது.
சென்ற பாட்டினால், நப்பின்னைப் பிராட்டியை உணர்த்திச் “சீரார் வளை ஓலிப்ப வந்து திறவாய்” என வேண்டிய பிறகு, அவள், கதவைத் திறப்போம் என்று எழுந்து புறப்பட்டாள். அதனைக் கண்ட கண்ணன், “நம்மைப் பற்றினாரை, இவள் தன் அடியாராக அபிமானிப்பது போல, நாமும் இவளைப் பற்றினாரை நம் அடியாராக அபிமானிக்க வேண்டியது’ என்று திருவுள்ளம் கொண்டார். பிறகு, ‘நம்முடையவர்களான இந்த ஆய்ச்சியர்களுக்கு, இவளுக்கு முன் நாம் காரியம் செய்ய வேண்டும்’, எனக் கருதி, தான் சடக்கென எழுந்து நப்பின்னையைக் கதவு திறக்க விடாமல், மல்லு கட்டாகக் கட்டிப் பிடித்து, இழுத்து, படுக்கையில் தள்ளி, தானும் அவள் மேல் விழுந்து, அவளுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் தானும் மயங்கி, ஆய்ச்சியர்கள் வந்த காரியத்தையும் மறந்து கிடந்தார்கள்.
இவர்கள் அவனை எழுப்பின அளவில், நப்பின்னை, ‘நம் முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சியர்களின் வெறுப்புக்கு நம்மை உறுப்பாக்கின இவனை, வாய் திறக்க விடுவதில்லை,’ என்று அவனை சிக் என்று கட்டிக் கொண்டு, அவனை விடை சொல்ல வல்லமை இல்லாதபடி கிடக்க வைத்தாள். ஆச்சியர்கள், மீண்டும் இவளை உணர்த்துவதும் கண்ணனை உணர்த்துவதும் என்று இருக்கிறார்கள். இவர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் அடியவர்களுக்காக மல்லு கட்டிக்கொண்டு, ஒரு மிதுனமாக இருப்பது. நமக்கு தஞ்சம் என்று கருத்து வெளிபட இருந்தார்கள்.
இப்படி சேர்ந்து இருக்கும் மிதுனத்தை, தனித் தனியே பற்றுபவர்கள் இராவணனுக்கும் சூரப்பணகையையும் ஒப்பார்கள் என்று சொல்கிறார். பெருமாளை பற்றி (இராமனை) பற்றி, சீதையிடம் சென்ற திருவடியிடம் (அனுமனிடம்), இளைய பெருமாள் (லக்ஷ்மணன்) கூட அறியாத காகாசுர வரலாறை அருளி செய்கிறார். ”செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை‘ (பெரிய திருமொழி 6.8.5) பிராட்டியை பற்றி வந்த விபிஷணனை, பெருமாள் விசேஷ ஸ்னேகம் செய்து அருளினார். அது மட்டுமல்லாமல், ‘எனது அடியார் அது செய்யார்‘ (பெரியாழ்வார் திருமொழி 4.9.2) என்ற அளவில், தன் அடியவர்களை எம்பெருமான் பற்றி உள்ளார். அப்படிபட்ட எம்பெருமானை அன்றோ நாம் தஞ்சமாக பற்றி இருப்பது என்கிறார். மேலும், ‘ நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து (திருவாய்மொழி 9.2.1) என்பது போல பற்றுபவர்கள் என்கிறார்.
பகவத் பிரபன்னர், ‘ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம்‘ ‘வாள் கெண்டையொண் கண் மடப்பின்னை தன் கேள்வன்‘, (திருவாய்மொழி 10.4.3 ) மற்றும் கூரம்பன் (நான்முகன் திருவந்தாதி 7) என்று அம்பின் கூர்மையையும், நிறத்தையும் ஒளியையும் கண்டு இருப்பார்கள் என்றும் துவய மகா மந்திரத்தை எப்போதும் அனுசந்தானம் செய்து கொண்டு இருப்பவர்கள் பிராட்டியின் கண்ணின் கூர்மையையும் ஒளியையும் நிறத்தையும் தஞ்சமாக இருப்பார்கள் என்கிறார்.
“குத்து விளக்கெரிய” என்றது, நம்மைப் போல் ‘பொழுது விடிந்தால், என்ன செய்வது என்று அஞ்சாமலும், இருளைத் தேட வேண்டாமலும், விளக்கின் ஓளியில் கிடந்து கிருஷ்ணன் முகத்தைக் கண்டு களிக்கப் பெறுகின்ற இந்த நப்பின்னை, என்ன நோன்பு நோற்றாளோ’ என்னும் வியப்பை சொல்கிறது. குத்துவிளக்கு என்றதால், இஷ்டமான இடங்களில் கொண்டு வைப்பதற்கு உரிய விளக்கு என்று தெரியும். நீயும் கண்ணனும் கண்வளரும் போது, வேண்டிய இடங்களில் விளக்கினை எடுத்து செல்ல அடியவர்களான நாங்கள் வேண்டாமா என்று கேட்பது போல உள்ளது. அப்படியாவது நாங்கள் உள்ளே வரவேண்டும் என்று ஆச்சியர்கள் கூறுகிறார்கள். ‘திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் ‘ (திருவாய்மொழி 10.6.9) என்பதை நினைவில் கொள்ளலாம்.
எரிய என்றது, வெளியே ஒரு கொடி விளக்கு, நிறம் இன்றி, ஒளி இன்றி, இருக்கும் போது, உள்ளே ஒரு நிலை விளக்கு, நின்று பிரகாசமாக எரிகின்றது என்று சொல்வது. தன்னை காட்டாதே, தன்னைக் கொண்டு காட்டக்கூடிய அவனையும், இவர்களுக்கு காட்டாதவள் என்கிறார்கள்.
“கோட்டுக்கால் கட்டிலில்” என்றதும், ‘எங்களைப் போலே நெரிஞ்சி காட்டிற்கும் (பிருந்தாவனத்திற்கும்) மணற் கொட்டகத்திற்கும் (மணற்குன்று) தேடி ஓடவேண்டாமல், இவள் ஒருத்தி மாத்திரம் வாய்த்த படுக்கையில் சுகமாகக் கிடக்கப் பெறுவதே! என்னும் இவர்கள் நினைவு வெளிப்படும். நந்தகோபன், உந்து மத களிற்றனாகக் கூறப்பட்டதால் அவனது மாளிகையில், ஆனைகளின் உயிர்பிடியை பிடித்து அவற்றின் கொம்புகளை பறித்து அவற்றை ஆதாரமாக கடைந்து செய்த கட்டிலான கோட்டுக்கால் கட்டில், இருக்கத் தடையில்லையே என்கிறார்.
வீரபத்தினி ஆகையால் இப்படி பட்ட கட்டிலில் அல்லாமல் வேறு எங்கும், கண் உறங்குவது இல்லை. சீதையும் இராமனின் வீரத்தை கண்ட பின்பே, ஆண் என்று அணைத்தது இராமாயணத்தில் சொல்லபட்டு உள்ளது. குவாலாய பீடத்தின் கொம்பை பறித்து செய்யபட்ட கட்டில், மற்றவர்கள் பார்த்து கொண்டு இருக்க, பிரதான மகிஷிக்கே அமையும். இவர்கள் கிருஷ்ணனின் கட்டிலின் கால்களை பற்றியவர்கள். ஆசனத்தின் கால்களை சுற்றிய நாகம் ஆசனத்தில் ஏறுவது போல இவர்களும் கண்ணனை அடைவார்கள். பிரம்மாதிகள் கொடுத்த தொட்டில் என்றால் உதைத்தே உடைக்கும், படுக்கை பற்றில் படுக்கையானதால் ஆதரத்துடன் பேணி இருக்கும். ‘கோட்டிடை யாடினை கூத்து‘ (திருவிருத்தம் 21) இவளுக்கே, கொடுத்ததும் இவளுக்கே என்கிறார். அதிக விலை ஆனாலும் இரத்தினம், மாணிக்கம் பதித்து இருந்தாலும் இதனை கட்டில் என்றே ஆயர் அழைப்பர் என்கிறார்.
பஞ்ச சயனம் என்றது, அழகு, குளிர்த்தி, மென்மை, பரிமளம், வெண்மை என்கிற ஐங்குணங்களின் அமைப்பு, சிறந்த சயனத்தின் இலக்கணமாகும். இந்த ஐந்து குணங்களுள் மென்மையும், சேர்ந்திருக்க, மெத்தன்ன என்று தனியே கூறியது மற்ற குணங்களிலும் மென்னை படுக்கைக்கு விசேஷ குணமாதாலும், அது இந்த படுக்கையில் மிகுந்து இருப்பதானாலும் கூறப்பட்டது. “பஞ்சசயனம்” என்பதற்கு, துளிர், மலர், பஞ்சு, மெல்லிய கம்பளம், பட்டு என்னும் ஐந்து பொருள்களினால் செய்யப்பட்ட சயனம் என்றும் சொல்வார்கள்.
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்றதால், அவளுடைய குழலின் சீர்மை கூறுகிறது. மொக்குகளைப் பறித்துக் குழலிலே சூடினால் அவை தன் நிலத்தில் இருப்பது போலே அலரப் பெற்ற கூந்தலை உடைய நப்பின்னை என்று சொல்வது. “கொங்கைமேல் மார்பை வைத்துக் கிடக்கின்றவனே, என்றும், நப்பின்னையின் கொங்கையைத் தன் மார்பின்மீது வைத்துக் கொண்டு கிடப்பவனே என்றும் இருவகையாகப் பொருள் தோன்றும்.
“மலர் மார்பா எழுந்து வாராய்” என்று சொல்லாமல், “வாய் திறவாய்” என்றது ஒரு பொருள் என்று கிடக்கிறவர்களைப் பிரிக்கலாகாது என்னும் நினைவால் ஆகும்.
“மலர் மார்பா, வாய் திறவாய்” என்ற சொல் அமைப்பினால், நீ உன் மார்பை நப்பின்னைக்குத் தந்தால், உன் வாயை மட்டுமாகிலும் எங்களுக்கு தரக்கூடாதா என்று ஆச்சியர்கள் கேட்கின்றது தெரியும். இப்படி இவர்கள், “வாய் திறவாய்” என்றதைக் கேட்ட பின், கண்ணன், “இந்த ஆய்ச்சியர்கள் மிகவும் நொந்தனர் போலும், இப்படி இவர்களை வருத்தபட செய்வது தருமமன்று’ என்று ‘இதோ வந்து கதவைத் திறக்கின்றேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லுவோம்” என்று திருவுள்ளம் கொண்டார்.
இவர் வாயைத் திறக்க முயற்சி செய்ததை நப்பின்னை, “அவர்களுக்காகக் கதவைத் திறக்க எழுந்து சென்ற நம்முடைய முயற்சியைத் தடுத்த இவனது முயற்சியை நாம் நிறைவேற விடுவோமா?” என்று எண்ணி கண்ணன் வாய் திறக்க முடியாதபடி அவனது கழுத்தைக் கட்டி, அமுக்கிக் கொண்டு கிடக்க, அதனைச் சாளர வாசல் மூலம் கண்ட ஆய்ச்சியர்கள், நப்பின்னையை நோக்கி, “அடியவர்களின் காரியத்தை முடிப்பதற்கு என்றே உறுதி கொண்ட நீயும் இப்படி செய்வது தகுதியன்று” என்கிறார்கள்.
வாய் திறவாய் என்றது அவன் ஊமத்தங்காய் தின்றது போல இருக்கும் போது இவர்கள் வேண்டுவது. கிடந்த இடத்தே கிடந்து, கம்பீரமான ஒரு மிடற்றோசை கேட்கும்படி வாய் திறவாய் என்றது.
நீ உன் மணாளணை என்றது, அவன் நினைவே, நினைவாயிருக்கும் நீ என்றும், உன் நினைவே நினைவாயிருக்கும் அவன் என்றும் சொல்வது. உன் புருவ நெறிப்புக்கு காரியம் செய்யும் அவனை, விலகாமல் இருப்பதே எங்களுக்கு கதி; இனி உனக்கே அடிமையாகிறோம் என்கிறார்கள். பேறு அவளால் என்றால் பிரிவும்/இழவும் அவளால் தான் என்பதில் குறை இல்லை. உன் மணாளனை என்று சொன்னது, எல்லோருக்கும் உடையவனை, நீ ஒருவள் மட்டும் அனுபவிப்பது தருமமோ என்றும் கருத்து.
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் என்று சொன்னது, இவர்கள் சேர்ந்து இருந்து நேரம் சென்றால் கூட, புருஷக்காரத்திற்கு உதவுவதாகவும், தனியே வந்தால் தாங்கள் கேட்டுக் கொண்ட காரியம் நிறைவேறும் என்றும் கருத்து கொண்டார்கள்.
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் என்றது ஒரு நொடி பிரிவு என்றாலும் நாங்கள் வெளியே இருந்து படுகின்ற பாட்டை நீ படுக்கின்றாய் என்றார்கள். நெகிழ்ந்து அணைக்கையில், பத்து மாசம் பிரிந்து பட்டவள் (சீதா தேவி) படுகிறாய் என்கிறார்கள். ஆற்றகில்லாயால் என்று சொன்னதால், உனக்காகத் தானே அவன் புறப்படாமல் இருக்கிறான். அவன் பிரிந்தால் நீ தாங்க மாட்டாய் என்ற பொருள் வரும்.
தத்துவம் அன்று தகவு என்பதற்கு இருவகையாகப் பொருள் கூறலாம். தத்துவம் நாங்கள் இத்தனை நேரம் சொன்ன வார்த்தைகள், ஆற்றாமையாலே சொன்னதன்று, உண்மையே சொன்னோம் என்றும் எங்கள் பக்கம் இருந்து நீ இப்படி செய்வது தருமமன்று, என்பது முதல் பொருள்.
தகவு தத்துவம் அன்று என சேர்த்து, உனக்கு நீர்மை (எளிமை) உண்டு என்பது உண்மை இல்லை, என்று சொல்வது இரண்டாவது பொருள். உன்னுடைய ஸ்வரூபத்திற்கும் ஸ்வபாவத்திற்கும் பொருந்தாது என்கிறார்கள். அகில ஜகந்மாதரம் என்றதற்கும் சேராது; அசரண்ய சரண்யாம் என்பதற்கும் சேராது. தேவ தேவ திவ்ய மகிஷி என்ற பட்டத்திற்கு பொருந்தும் என்கிறார்கள்.
Leave a comment