திவ்ய பிரபந்தம்

Home

T18 உந்து மதகளிற்றன்

திருப்பாவை 18

இந்த பாடல், தாயாருக்கான பாசுரம். இந்த பாடலை தவிர அங்கண் மாஞாலத்து என்ற இன்னும் ஒரே ஒரு  பாடலில் மட்டும்  தான் ஆண்டாள், எம்பெருமானின் திருநாமத்தை நேரடியாக குறிப்பிடவில்லை. மற்ற எல்லா திருப்பாவை பாடல்களிலும் ஆண்டாள் எம்பெருமானின் ஒரு திருநாமத்தையாவது குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இந்த பாடலில் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் என்று தாயாரை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார், ஆகையால் இது தாயார் பாசுரம் எனப்படும். கண்ணன் திருவுள்ளத்தில் கொண்டுள்ள நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் பாசுரம், இது.

மத ஜலத்தை பெருக விடுகின்ற யானை போலவே பலம் உள்ளவராய், பின்வாங்க பின்வாங்க வேண்டாத தோள் வலி உடையவராய் ஸ்ரீ நந்தகோபருடைய மருமகளே, நப்பினை என்னும் பெயரை உடையவளே, பரிமளம் வீசும் கூந்தலை உடையவளே, வாயிலை திறப்பாயாக ! கோழிகள் நான்கு புறங்களிலும் பரவி, கூவின அழைத்தன. குருக்கத்திக் கொடிகளால் ஆன பந்தல் மேல் (உறங்கும்) குயில் கூட்டங்கள் பலமுறை கூவுகின்றன. (கண்ணனை விளையாட்டில் தோற்கவைக்கும் காரணமாக இருந்த) பந்து விளங்கும் விரல்களை உடையவளே ! உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக, சீர்மை பொருந்திய (உன்) கை வளைகளை ஒளிக்கும்படி நடந்து வந்து சிவந்த தாமரை போன்ற உன் திருக்கையால் மகிழ்ச்சியுடன் கதவை திறப்பாயாக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எம்பெருமானைப் பற்றுவார்க்கு, பிராட்டி என்ற ஒரு புருஷகாரம் என்பது போல, பிராட்டியைப் பற்றுவார்க்கும் ஒரு புருஷகாரம் வேண்டாமா என்று கேட்டுகொண்டு, அது வேண்டாம் என்றும், அவளுடைய கருணையே அவளைப் பற்றுகைக்குப் புருஷகாரமாக வரும் என்றும், எப்படி நெருப்பை தணிக்க நீர் வேண்டுமோ, நீரை தணிக்க நீரே போதும் என்பதை போல, இது என்று சொல்லி முடிக்கிறார். ஜனக ராஜனுக்கு நீயே உன்னை காட்டிக் கொண்டதை போல், நீயே வந்து உன்னை காட்டி அருள வேண்டும்.

எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டி முன்னாகப் பற்ற வேண்டும் என்ற பிரமாணம் இருப்பதாலும், நப்பின்னையே கிருஷ்ணாவதாரத்திற்கு பிரதான மஹிஷி என்பதாலும் இவளை பற்றுகிறார்கள்.

உந்துமதகளிற்றன் என்று சொல்வது, கண்ணனைச் சொல்லும்போது “நந்தகோபன் குமரன்” என்று நந்தகோபருடைய ஸம்பந்தத்தை முன்னிட்டு சொல்வது போல, நப்பின்னையும் நந்தகோபர் ஸம்பந்தத்தை முன்னிட்டு கூறுகின்றனர், அவருடைய ஸம்பந்தம் இவளுக்கு உகப்பு அளிக்கிறது. “உந்துமதகளிற்றன்” என்பதற்கு மதயானைகளை நொறுக்கித் தள்ளுகின்றவன் அல்லது, பெருக்குகின்ற மத நீரையுடைய களிறு போன்றவன், அல்லது களிறுகளை யுடையவன் எனப்பொருள்கள் கொள்ளலாம். போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும்’‘ (திருவாய்மொழி 6.4.5) என்று கம்ஸன் படைவீடான மதுரை நகரை நினைத்து அஞ்சினவற்கு அஞ்சாமல் வாழும் ஊர் என்கிறார்.

வாசம் செய் பூங்குழலாள்’ (திருவாய்மொழி 10.10.2) ஆனதால் இங்கே கந்தம் கமழும் குழலி என்கிறார்.

ஓடாத தோள்வலியன்” என்பதற்கு போர்க்களத்தில் பகைவரைக் கண்டு அஞ்சி ஓடாத மிடுக்கன் என்றும், நாட்டில் யாருக்கும் இல்லாத தோள் வலியை உடையவன் என்றும் பொருள், இப்படி சிறப்பித்துக் கூறுகைக் கீடான வலிமை இவர் பக்கம் இருப்பதால் தான் கண்ணனிடத்துக் கறுக்கொண்ட கம்சன் தான் நேரில் வந்து தீங்கு செய்யமாட்டாமல், பூதனை, சகடாசுரன் போன்றவர்களை ஏவுகிறான்.

அந்த கஞ்சன் மாளிகையின் கீழ் பிள்ளைகளை வளர்த்த நந்தகோபர்க்கு இவ்வளவு வலிமை இன்றிமையாததாகும். நித்ய ஸம்ஸாரியாக இருப்பவன் தனது அநீதிகளை நினைத்து அஞ்சினால், எம்பெருமானுடைய குணங்களை அநுஸந்தித்து, அச்சம் கெடுவதுபோல, கண்ணன் செய்யும் தீமைகளை நினைத்து அஞ்சும் ஆய்ச்சியர்கள் நந்தகோபருடைய தோள்வலியை நினைத்து அச்சம் போக்கி கொள்கிறார்கள்.

இப்படி பெருமிடுக்கைப் பெற்றுள்ள இவர், அஹங்காரம் சிறிதும் இன்றி, தாழ்ந்தார்க்கும் பரம சுலபராக இருக்கும் தன்மையைத் தெரிவிப்பது ‘நந்தகோபாலன், என்ற இவர் பெயர். நப்பின்னை கும்பர் மகளாயிருக்க, அவளைக் “கும்பர்மகளே!” என்று விளியாது “நந்தகோபலன் மருமகளே!” என விளித்தற்குக் காரணம், நப்பின்னை இளமையே தொடங்கி இங்கே வளர்வதினாலும், தனது தந்தையரை மறந்திட்டதினாலும் ஆகும். புக்ககத்தில் வாழ்வையே பெரிதாக மதித்து ஸ்ரீ நந்தகோபருடைய ஸம்பந்தத்தைத் தனக்குப் பெரும் பெறாக நினைத்து இருந்ததினாலும் இப்படி அழைக்கப்பட்டாள்.

இவர்கள் இப்படி அழைக்கையிலும், நப்பின்னை “கண்ணன் பிறந்த பின்னர் திருவாய்பாடியில், நந்தகோபர்க்கு மருமகளாகாதவள் எவள், இவர்கள் நம்மை தான் அழைக்கிறார்கள் என்பதை தான் அறிவது எப்படி என்று நினைத்து கிடந்த போது, அவர்கள் ‘நப்பின்னாய்!’ எனப் பேர் கூறி அழைக்கின்றனர்.

நந்தகோபலனுக்கு மருமகள்கள் பலர் கிடப்பினும் அவர்களைக் கொண்டு எங்களுக்கு ஒன்றும் பயன் இல்லை, உன் காலில் விழுபவர்கள் நாங்கள் என்பது உட்கருத்து.

இங்ஙனம் ஆய்ச்சியர்கள் அழைக்க, அதனைக் கேட்ட நப்பின்னை “க்ருஷ்ணாநுபவம் நான் ஓருத்தியே பண்ணுகிறேன் என்றும், க்ருஷ்ணனோடே நாமும் சேர்வதற்கு இவள் கருணை புரிந்திலள் என்றும் இந்த ஆய்ச்சியர்களுக்கு நம் மேல் சிறிது சீற்றம் இருக்கும் ஆதலால், இப்போது இவர்களுக்கு மறுமொழி சொல்ல வேண்டாம் என்று மீண்டும் பேசாதே கிடக்க’ “கந்தம் கமழும் குழலீ!” என்கிறார்கள். நீ உள்ளே இல்லை என்று தோன்றுமாறு செய்தி ஒன்றும் தராவிட்டாலும் உன்னுடைய குழலின் பரிமளம் (வாசனை) உன் இருப்பை சொல்கிறதே என்கிறார்கள்,

இவர்கள் இப்படி கூறுவதைக் கேட்ட நப்பின்னை “மலரிட்டு நாம் முடியோம்’ என்று முதலில் பண்ணின சத்தியத்தை நப்பின்னை மீறிக் கிடப்பதை இவர்கள் உணர்ந்து விட்டார்கள் போலும் என்று அஞ்சி மீண்டும் பேசாதே கிடக்க, “கடைதிறவாய்” என்கிறார்கள். அனைவருமாகத் திரண்டு பண்ணின சத்தியத்தை, ‘நீ பூ முடித்ததை போல நாங்களும் எங்கள் சென்னிப்பூவான கண்ணனை அணிந்து கொள்ளும் படி கதவைத் திறந்துவிடாய்’ என்றும் ‘அந்த பரிமள வெள்ளம் வெளியே புறப்படுமாறு கதவைத் திறந்துவிடாய்’ என்றும் கூறுகிறார்.

இதனைக் கேட்ட நப்பின்னை ‘கதவைத் திறப்பதிற்கு பொழுது விடிய வேண்டாமோ, பொழுது விடிந்தமைக்கு அடையாளங் கூறுங்கள் ’ என்றதற்கு இவர்கள் கோழி அழைத்தமையை அடையாளமாகக் கூறுகின்றனர். இவை சாம கோழிகள் என்றும் வேறு அடையாளம் ஆகும் என்றும் வேறு ஏதாவது கூறுமாறும் கேட்டாள்.

இவர்கள் ’குருக்கத்திப் பந்தலின் மேற் கிடந்து உறங்கின குயிலினங்கள் பல்கால் கூவினமையை அடையாளமாகக் கூறுகின்றனர். “வந்தெங்குங் கோழியழைத்தன காண்” என்றது போலப் “பலகால் குயிலினங்கள் கூவினகாண்” என்ற போதும், “மாதவிப்பந்தல் மேல்” எனக் கூறியதற்குக் காரணம், மாதவிப் பந்தல் குயில்கட்கு மிகவும் உகந்த படுக்கையாகும். அவை பொழுது விடிந்தமையையும் உணராமல் உறங்க வேண்டியிருக்க, அவையே உணர்ந்து எழுந்தன என்றால், பொழுது நன்றாக விடிந்து இருக்க வேண்டும் என்றும் கருத்து.

நப்பின்னை, நாச்சியார் திருமொழியில் உறங்கும் குயில்களையும் கிளப்பிக் கூவச் சொல்லி, வருத்துகிறவர்களன்றோ இவர்கள் என்றும், சொல்லியபடி அவை கூவாது இருந்தால், அவற்றைச் சோலையில் இருந்து துரத்தி விடுவதாகச் சொல்லி அச்சமுறுத்துகிறவர்களும் இவர்கள் என்றும் எண்ணிப் பேசாதே கிடந்தாள். மீண்டும் அவளை “பந்தார் விரலி!” என்று அழைக்கின்றனர். கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் இரவில் பந்தடித்து விளையாட, அந்த விளையாட்டில் கண்ணன் தோற்றதனால் நப்பின்னை, தனக்கு வெற்றியைத் தந்த அந்த பந்தைக் கையால் அணைத்துக் கொண்டே கிடந்து உறங்க, அதனைச் சாளர வாசல் வழியாக கண்ட இந்த ஆச்சியர்கள் “பந்தார்விரலி” என்கின்றனர். நாங்களும் பந்து போல் ஒரு உயிரற்ற பொருளாக பிறந்திருந்தால் எங்களையும் நீ உன் கைக்குள் அடக்கிக் கொள்வாய் அன்றோ என்ற பொருளும் வரும்.

உன் மைத்துனன் பேர்பாட என்று சொன்னது, எல்லையின்றி அவன் பெற்றுள்ள பல பெயர்களையும் சொல்லி வாயாரப் பாடுவதற்கு தாங்கள் வந்ததாக கூறுகின்றனர்.

இதற்கு நப்பின்னை, “யந்த்ரத்தினால் கதவைத் திறந்து கொள்ளும்படி பண்ணி வைத்திருக்கிறேன்’, அதனை உபாயமாக கொண்டு வாருங்கள் என்று சொல்ல, அதனைக் கேட்ட ஆய்ச்சியர்கள், “நாங்கள் ஸ்வப்ரயத்தினால் பேறு பெற நினைத்து உள்ளோமோ, இல்லை, உன்னாலே பெற இருக்கிறோம், உன் கை பார்த்திருக்கிறவர்கள் நாங்கள்; நாங்களே திறந்து கொண்டு புக வல்லோம், உன் கையில் வளைகள் நன்கு ஒலிக்க, அவ்வொலியைக் கேட்டு எங்கள் நெஞ்சு குளிரும்படி நீயே எழுந்து வந்து திறக்க வேண்டும்’ என்கிறார்கள்.

செந்தாமரைக் கையால், இயற்கையாயுள்ள செம்மைக்கு மேல் பந்து பிடித்ததனாலும் மிக்க செம்மையுடைய கையால் என்கிறார்.

சீரார்வளை என்று சொன்னது, வளை என்றும் கழலாது இருக்கும் சிறப்பு. நப்பின்னை எம்பெருமானை பிரிந்தால் தான், வளை கழலும் என்றும், தினமும் அவள் எம்பெருமானுடன் சேர்ந்து இருப்பதால், ஒரு வருத்தமும் அடையாமல், வளை கழலாது சீரார் வளைக்கையாக இருக்கிறது என்கிறார். இந்த வளையின் ஓசையைக் கேட்டுக் கண்ணனும் உணர்ந்தானாய், தாங்களும் வாழ்ந்தாராகக் கருதி ‘ஒலிப்ப’ என்கிறார்கள். வளைக்கு சீர்மையாவது கழலாமல் இருப்பது என்றும், சங்குதங்கு முன்கைநங்கை (திருசந்தவிருத்தம் 57) என்ற பாடலும் ‘இரு கையில் சங்கு இவை நில்லா’ (திருநெடுந்தாண்டகம் 24)  (என் இரண்டு கைகளிலும் இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன) என்ற பாடலும் மேற்கோள் காட்டப்படுகிறது.

நப்பின்னை கிடந்தபடியே கதவைத் திறக்க முயல, அதனை அறிந்த இவர்கள், எங்களுக்காக நீ நாலடி நடந்து வந்தாய்’ என்னும் பரிசை நாங்களும் பெறுமாறு எழுந்து வந்து திறக்க வேணும் என்பதை “வந்து திறவாய்” என்கிறார்கள்.

இந்த பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்தருளின பாட்டு என்று மிகவும் ஆதரித்து பேசபடும் பாட்டு. எம்பெருமானார் திருப்பாவை அநுஸந்தானத்துடன் எழுந்தருளுகிற அளவில், ஒருநாள் பெரியநம்பி என்ற ஆசார்யாரின் திருமாளிகைக்கு எழுந்தருள, அப்போது திருக்காப்பு சேர்ந்து இருக்கையாலே, அநுஸந்தானத்தைக் கேட்டு அத்துழாய் என்ற ஆசார்யாரின் பெண் திருக்காப்பு நீக்கியருள, எம்பெருமானார் அவளைக் கண்டவாறே மூர்ச்சித்து விழ, அத்துழாய் பெரியநம்பி பக்கம் சென்று, “ஐயா! கதவைத் திறந்து சென்றேன்’ என்னைக் கண்டவுடனே ஜீயர் மூர்ச்சித்து விழுந்தார்” என்று சொல்ல, ’நம்பி, “உந்து மதகளிறு அநுஸந்தானமாக இருக்க கூடும்” என்றருளிச் செய்ய, அதனைக் கேட்ட அத்துழாய் ‘அதனால் என்ன’ என்று கேட்க “செந்தாமரைக் கையால் சீரார் வளை யொலிப்ப வந்து திறவாய்’, என்று அநுஸந்தித்த போது நீ திறந்தவாறே, உன்னைக் கண்டு ‘நப்பின்னையை ஸேவிக்கப் பெற்றேன்’ என்று மூர்ச்சத்திருக்க வேணும்” என்று நம்பி அருளிச்செய்தார். அதனால் இந்த பாட்டு எம்பெருமானார் உகந்தது என்று சொல்வார்கள்.

Leave a comment