திவ்ய பிரபந்தம்

Home

T17 அம்பரமே தண்ணீரே

திருப்பாவை 17

திருவாசல் காப்பவர்களின் அநுமதி கொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சியர்கள் ஸ்ரீநந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணனையும், நம்பி மூத்தபிரானையும் திருப்பள்ளி உணர்த்தும் பாசுரம்.

ஒருவரை ஒருவர் எழுப்பும் போது, தனித்தனியே பட்டதை எல்லாம், இங்கே திரளாக படுகிறார்கள். இமையோர்கள் குழாம் தொழுவதும், சூழ்வதும் செய் தொல்லை மாலை பெற்று அனுபவிக்கும் திரள் (திருவிருத்தம் 10.7) என்று நம்மாழ்வார் சொல்வது போல, இவர்கள் பெறுகைக்கு படுகிற திரள், பெற்று அனுபவிக்கின்ற நந்தகோபர் முதலியவர்களை திருபள்ளி எழுப்புகிறார்கள்.

இவர்கள் கண்ணனை பெற வேண்டுவதாலே, முதலில் ‘வேதம் வல்லார்களை’ கொண்டு, ‘விண்ணோர் பெருமான்’ திருபாதம் பணிகிறார்கள். ‘கால நன் ஞானம் துறை படிந்தாடி‘ (திருவிருத்ததம் 10.3) என்பதில் நல் ஞானம் என்பது பிராப்ய பிராபகங்கள் ஆகும், துறை என்பது முறை தப்பாமல் குரு பரம்பரை வழி பின்பற்றுவது.

  • துறை தப்பாத விபிஷணனை போல, வேதம் வல்லார்கள் என்ற இடத்தில் சென்ற பத்து பாடல்களில், குரு பரம்பரையை நினைத்து அனுஷ்டித்தார்கள்.
  • விண்ணோர் என்பவர்கள், இங்கே துவார பாலகர்கள் தொடங்கி, திவ்ய மகிஷிகள் வரை ஆகும்.
  • கண்ணனை ஆய்ச்சியர்கள் களவு காண்பார்கள் என்ற அச்சத்தினால் நந்தகோபர் முன்கட்டில் கிடப்பாராம். அநிருத்தனை களவு காண இருக்கும் பெண்கள், இவனை கண்டால் விட மாட்டார்கள் என்று நோக்கி கிடக்கிற நந்தகோபனை பற்றுகிறார்கள்.
  • உள்ளே கிடக்கிறது வைத்த மாநிதியுமாய், தாம் எடுத்த பேராளனுமாய், நிதி எடுத்தவருமானதால் கண்ணனை அப்படி பார்த்து கொள்கிறார்கள்.
  • “கணவனுடைய படுக்கையும் குழந்தையின் தொட்டிலையும் விடாத மாதாவைப் போலே” என்றும், ஸர்வேஸ்வரனையும் விபூதியையும் கை விடாத பிராட்டி போலவும், “ஸ்ரீநந்தகோபரையும் க்ருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே” என்றும்
    • முதல் கட்டில் நந்தகோபானும்,
    • இரண்டாம் கட்டில் யசோதையும்,
    • மூன்றாம் கட்டில் கண்ணனும்,
    • நான்காம் கட்டில் நம்பி மூத்தபிரானும் (பலராமனும்) பள்ளிக்கொள்வது முறையாதலால், அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு சொல்லப்பட்டது.

இதில், முதல் இரண்டடிகள் நந்தகோபரை உணர்த்தும். நந்தகோபருடைய கொடை மேன்மையை முதலடி கூறும். “அறஞ் செய்யும்” என்ற வார்த்தைகளால், மேனிக்கு நிறம் கொடுக்கும் பொருள்களில் முதன்மையான ஆடைகளையும், தாரகமான தண்ணீரையும், போஷகமான சோற்றையும் வேண்டுவார்க்கு வேண்டியபடி அறமாக அளிக்க வல்லவனே என்று சொல்வது, புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகப் பேணிக் கொடுக்கின்றதும் விளங்கும். யாசகர்கள் கொண்டால் அல்லது தரிக்க மாட்டார் என்பது போல, இவர் கொடுத்தால் அல்லது தரிக்கமாட்டார் என்பது ஆழ்ந்த கருத்து.

இராமனை பெற மகா யாகம் செய்ய வேண்டியதை போல இல்லாமல், எடுத்த பேராளனாகையாலே பிறந்த பின் தானம் செய்வது. பிள்ளையின் மங்களத்திற்கும் வெற்றிக்கும் இவற்றை செய்கிறார். “அம்பரமே தண்ணீரே சோறே” என்றது வஸ்த்ரங்களை மாத்திரம் தானம் செய்பவன், தண்ணீரை மாத்திரம் தானம் செய்பவன், சோற்றை மாத்திரம் தானம் செய்பவன் என்னும் பொருளைத் தரும். அம்பரமும் தண்ணீரும் சோறும் நந்தகோபன் தானம் செய்ததாக எங்கும் கண்டது இல்லை. அப்படியிருக்க இங்கே இவர்கள் இப்படி கூறுவது ஏன் என்றால், இவை எல்லாம் (உடை, நீர், சோறு தானம் செய்வது), கண்ணனிடத்தில் கண்டதால், கண்ணனுக்கு காரண பூதனான நந்தகோபனிடத்திலேயும் இருக்கும் என்ற அனுமானத்தால் ஆகும்.

எல்லாம் ஒன்றேயான வஸ்துவை தரலாகாதோ என்றும், எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் நாங்கள், என்றும் சொல்லி, “உண்ணுஞ்சோறு, பருகுநீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றபடி, எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாயுள்ள கண்ணனை எமக்குத் தந்து எங்களை நன்றாக பார்த்து கொள்ளும் ஸ்வாமி நீயன்றோ என்கிறார்கள்.

இப்படி நந்தகோபரை அழைத்து, “எழுந்திராய்” என்று அவரைத் திருப்பள்ளி  உணர்த்தியவாறே, இவர்கள் உள்ளே புகுவதை அவர் அனுமதித்தமை தோன்ற, பின்னர் இடைக்கட்டில் புகுந்து யசோதைப் பிராட்டியை உணர்த்துகின்றனர்.

எம்பெருமானைப் பற்றும்போது பிராட்டியை முன்னிட்டுப் பற்றுவது போலே, இங்கு நந்தகோபரைப் பற்றும் போதும் யசோதைப் பிராட்டியை முன்னிட ப்ராப்தமாயிருக்க, முன்னர் நந்தகோபரைப் பற்றிப் பின்னர் யசோதையைப் பற்றுவது ஏன் எனில் ’ கணவனை முலையால் அணைக்கைக்காகவும், பிள்ளையை முலைப்பால் கொடுத்து வளர்க்கைக்காகவும் யசோதைப் பிராட்டி இடைக்கட்டில் கிடக்கிறபடியால், கண்ணால் காண்கிறபடிக்கு, மேற்பட ஒன்றும் அறியாத இந்த ஆய்ச்சியர்கள் கண்டபடியே பற்றுகிறார்கள்.

கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே! என்பதில் கொம்பு என்னும் பொதுப்பெயர், இங்கு வஞ்சிக் கொம்பு என்ற சிறப்புப் பெயரின் பொருள் பெற்றது. சிறந்த மாதர்களின் இடைக்கு வஞ்சிக் கொம்பை உவமை கூறுவார்கள். அது துவட்சியிலும் நேர்மையிலும் இடைக்கு உவமையாம். செடிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், கொழுந்தில் முதலில் வாட்டம் பிறப்பது போல பெண்டிர்க்கு ஒரு கேடு வந்தால் முந்துற யசோதை பக்கம் வாட்டம் காணப்படுவதினால் “கொழுந்தே!” என்றார்கள். ‘கொழுந்தே குலவிளக்கே‘ என்று சொல்லி, ஆயர்குல விளக்கே, ஆயர்குல அணிவிளக்கே என்று சொல்லி, அனுபவிக்க தர வேண்டாமா என்கிறார்கள். யசோதைக்கு ‘அறிவுறாய்‘ என்பதால், யசோதை அறிவதையும், அதனால் தங்களுக்கு பின்னால் ஒரு குறையும் இல்லை என்பதையும் சொல்லி உணர்த்துகிறார்கள். ஸ்ரீ நந்தகோபரை எழுந்திராய் என்றும், யசோதையை ‘அறிவுறாய்’ என்று சொல்லியும் திருபள்ளி எழுப்புவது, இவளை நெஞ்சினால் உணர்த்தி எழுப்பினால் அது கண்ணனை பெறுவதற்கு உதவும் என்பதால் ஆகும்.

இப்படி வேண்டப்பட்ட யசோதைப் பிராட்டியும் இவர்கள் உட்புகுவதற்கு இசைந்தமை தோன்ற, மூன்றாங்கட்டில் புகுந்து கண்ணனை உணர்த்துகின்றனர். இப்போது உலகளந்த வைபவத்தை எடுத்துக் கூறுகிறார். இதனால் கூறுவது என்னவென்றால், வேண்டாதார் தலையிலும், வேண்டாம் என மறுத்தவர் தலையிலும், திருவடியை வைத்து அருளின நீ, திருவடிகளில் விழுந்து யாசிக்கும் எங்களை அடிமை கொள்ளாது ஓழிவது எப்படி என்று கேட்பதாக அமையும்.

உறங்காது எழுந்திராய் என்றது, “ஸதா பச்யந்தி ஸூரய:” என்றபடி ஒரு கணப் பொழுதும் கூட கண்ணுறங்காது ஸேவித்துக் கொண்டிருந்த நித்யஸூரிகளைத் துடிக்க விட்டு, எம்மை உகந்து, இங்கு வந்த நீ, எங்களுக்கும் முகம் காட்டாமல் உறங்கி, எங்களையும் துடிக்க விடாதே என்று சொல்வதாக கொள்ளலாம்.

இவர்கள் இப்படி இரந்து எழுப்ப செய்தேயும், அவன் ‘இவர்கள் நம்பி மூத்த பிரானை எழுப்பாமல் நம்மை எழுப்புகின்றனர் ஆதலால் முறை கெடச் செய்தார்கள் என்று இவர்களுக்கு நாம் முகம் கொடுப்பது தகுதியன்று’ என்று பேசாதே கிடந்தான். இந்த ஆச்சியர்கள் இங்கிதம் அறிவார் ஆதலால் அக்கருத்தினை உணர்ந்து, சிறிது மனம் நொந்து, இறுதியில் நம்பி மூத்தபிரானை உணர்த்துகின்றனர்.

செம்பொற் கழலடிச் செல்வா! என்று சொல்வதன் மூலம், தனக்குப் பின்பு ஸாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே!” என்ற ஆறாயிரப்படி அர்த்தம் இங்கே கொள்ளலாம். பலதேவற்குச் செல்வமாவது, கண்ணனுக்கு அடிமை செய்யப் பெறுகை. லக்ஷ்மணணோ லக்ஷ்மி சம்பந்தம் என்று இளையபெருமாள் இராமபிரானுக்குப் பின் பிறந்து பெற்ற செல்வத்தை (கைங்கர்யஸ்ரீ) , பலதேவன் கண்ணபிரானுக்கு முன் பிறந்து படைத்தனன் என்கிறார். ஸ்ரீ ராமனும் சீதாபிராட்டியும் காட்டிற்கு சென்று இருக்கும் காலத்தில், கண் வளரும் போது, வெளியே மதிளாய் நின்று பார்த்து கொண்டு இருந்தவர் அல்லவா. பெண்களையும் கண்ணனையும் சேர்த்து வைக்க சரியானவன் அல்லவா.

உம்பியும் நீயுமுறங்கேல் என்று சொல்வது, உனக்கு பவ்யனான தம்பியும் அவனுக்காக பவ்யனான நீயும், உறங்காது இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். ரக்ஷகர்களாக இருப்பவர்களுக்கு உறக்கம் உண்டோ என்கிறார்கள். நீயும் ஸ்வரூபத்தில் பாரதந்திரியன், அவனும் பிறப்பாலே பாரதந்திரியத்தை கொண்டாடுபவன், அதனால் நாங்கள் இழந்தது எவ்வளவோ என்று கூறுகிறார்.

பலராமன் சேஷாவதாரமாகையாலே அவரை பற்றி சொல்லும் போது, புல்கும் அணையாம் என்று சொல்லி, பிராட்டியும் எம்பெருமானும் பிரிந்தால், தாங்க மாட்டார் என்று சொல்வதையும், பெருமாள் (இராமன்) பிராட்டியை பிரிந்த போது, நெடுநாள் இருந்தார் என்றும், லக்ஷ்மணன் பிரிந்தபோது, அமுது செய்யவில்லை. என் தம்பி போன வழியே நானும் போகிறேன் என்று எழுந்தி அருளினார்.

ஸ்ரீ குக பெருமாள், மகாராஜர் (சுக்ரீவன்), திருவடி (அனுமன்), வீபிஷணன் என்ற எல்லோருக்கும், இளைய பெருமாளே (லக்ஷ்மணன்) புருஷகாரம், அதாவது அவனையே அணுகிறார்கள்.

உலகத்தில் படுக்கையில் பள்ளிகொள்வார் உறங்குவது கண்டோம் அத்தனை அன்றிப் படுக்கையும் கூட உறங்குவதை கண்டதில்லை. ஆகையாலே அவனுக்குப் படுக்கையான நீயும், எங்களுக்குப் படுக்கையான அவனும் உறங்காது உணர வேணும் என்கிறார்கள் என்பது ரசிக்கத் தக்க ஒன்று. பலராமன் சேஷாவதாரமாகையாலே அனந்தன் மேல் கிடந்த புண்ணியனுக்குப் படுக்கையாக இருப்பதை புரிந்து கொள்வது சுலபம். கண்ணன் இவர்களுக்குப் படுக்கையாவது ப்ரணயத்தாலே.

இந்த பாட்டில், முதலடியிலும் ஐந்தாமடியிலுமுள்ள அம்பரம் என்னுஞ் சொல், வடசொல். அச்சொல்லுக்கு ஆடையென்றும் ஆகாசமென்றும் பலபொருள்களுண்டு.

Leave a comment