திவ்ய பிரபந்தம்

Home

5.4.11 வேயர் தங்கள் குலத்துதித்த

பெரியாழ்வார் திருமொழி (5.4.11)

இந்த பாட்டால், இந்த பதிகம் கற்பவர்களுக்குப் பலன் சொல்லி முடிக்கிறார். இந்த பதிகம் கற்றவர்கள், விஷ்ணுசித்தர் என்கிற பெரியஆழ்வார் போலவே அனன்யார்க சேஷபூதர்கள் ஆவார்கள் என்கிறார்.

வைதிகருடைய குலத்தில் திருவவதரித்த பெரியாழ்வாருடைய மனதிலே, திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கிற கோப குமரனாய் செவ்வி பெற்றதாய், குளிர்ந்து இருந்துள்ள மேகம் போன்ற திருநிறத்தை உடையவனாய், இடையர்களுக்கு தலைவனானவனாய், நித்ய சூரிகளுக்கு ஸ்வாமியானவனாய், சனகாதி பிரம்ம ரிஷிகளுக்கு போக்கியனாவுள்ளவனை, பாட வல்லவர்கள் நிழலைப் போல அந்தரங்கராகப் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்பது விஷ்ணுசித்தர் என்ற திருநாமத்தின் பொருள். வேயர் குலம் என்பது பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு திருநாமம் என்பர். உதய கிரியில் ஆத்தியன் உதித்ததைப் போல இக்குடியில் இவர் அவதரித்தது என்கிறார். அவன் கேவலம் இருட்டை போக்குகிறான்; ‘தனிச்சுடரே’ என்று அந்த ஆதித்தியனும் இங்கே ஆனதால் அஞ்ஞானம் ஆகிற இருளை போக்கும், இதயகமலத்தை அலர்த்தும் ஆதித்யன் ஆகிறார் இவர்.

கோயில் கொண்ட கோவலனை என்று சொன்னது, திருபல்லாண்டு தொடங்கி இந்த பாடல் வரையில், இவர் திருவுள்ளத்தில் இருக்கிற கிருஷ்ணன், தான் பிறந்ததையும், வளர்ந்ததையையும் இவரைக் கொண்டு கேட்டபடி சொல்கிறது. நந்தகோபன் குமரன் கேட்டது, வால்மீகி பகவான் பாட, லவகுசர்களைக் கொண்டு சக்கரவர்த்தி திருமகன் கேட்டது போல அல்ல என்கிறார். ‘வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த எம்மானே‘ (திருவாய்மொழி 8.6.5) என்பது போல, இவர் திருவுள்ளத்தில் கோவில் கொண்டதைச் சொல்கிறார்.

திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்‘ (திருவாய்மொழி 8.6.2) என்றும், ‘திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே‘  (திருவாய்மொழி 10.7.8) (ஆழ்வார் தனது தலையை, திருமாலிருஞ்சோலை மலைக்கும், வியூகத்திற்கும் (திருப்பாற்கடல் ), ஒப்பிடுகிறார். அதேபோல், திருவேங்கடத்தையும், வைகுந்ததையும் தன்னுடைய உடலுக்கு ஒப்பிடுகிறார்) என்றும் சொல்வது, எம்பெருமான் உகந்து அருளின நிலங்களுக்கு ஈடாக ஆழ்வாரின் திருவுள்ளத்தை ஆதரித்தது. அதே போல திருவாய்மொழி (10.7.4)ல் ‘நன்கு என் உடலம் கை விடான்‘ என்று சொன்னது ஆழ்வார் திருவாய்மொழி பாடுவதற்காக என்றும், அதே பாடலில் ‘நங்கள் குன்றம் கைவிடான்‘ என்று சொன்னது நண்ணா அசுரர் நலியவே‘ என்பதற்காக என்று சொல்லி, ஆனால் பெரியாழ்வாருக்காக ‘இட வகைகள் இழிந்திட்டு‘ அதாவது, தான் உகந்து அருளின நிலங்களை தள்ளி ஆழ்வார் திருவுள்ளத்தில் குடி கொண்டதை உரையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். கிருஷ்ணன் கோவில் பெரியாழ்வார் திருவுள்ளம் ஆயிற்று.

நாச்சியார் திருமொழி (11.10)ல் ‘மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்’ என்று ஆண்டாள் அருளிச்செய்ததை, குறிப்பிட்டு, ‘உள்ளிருப்பார் சொல்லும் வார்த்தை உடன் இருப்பாருக்கு தெரியும் ‘ அன்றோ என்று உரையாசிரியர் சொல்கிறார்.

எம்பெருமான் இடைக்குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியவன் ஆனது போல ஆழ்வார், தமக்கும் எளியவனானதை, கோவலனை என்பதன் மூலம் சொல்கிறார். எம்பெருமான் ஆழ்வார் நெஞ்சில் புகுந்த பின்பு, பிரகாசித்ததை , “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்கிறார்.

எம்பெருமான் ஆழ்வாருக்கு செய்த ஔதார்யம், ஆழ்வாரை அவன் வடிவழகில் ஈடுபட வைத்ததே ஆகும். ஆயரேறு என்பது இடைக்குலத்தில் பிறக்கப் பெற்றோம் என்னும் மகிழ்ச்சியினால் காளை போலச் செருக்குடன் இருப்பவன் என்கிறார். ஆழ்வார் திருவுள்ளத்திற் புகுந்த மகிழ்ச்சியினாலும் அப்படி செருக்குற்றார் என்றும் சொல்லலாம். சுவாமி நம்மாழ்வாரும் ‘செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே‘ (திருவாய்மொழி 10.3.10) என்று அருளிச் செய்தார்.

அமரர் கோவை என்று சொன்னது, ‘அயர்வரும் அமரர்கள் அதிபதி ‘ (திருவாய்மொழி 1.1.1), அதாவது அனுபவம் மாறில் முடிந்துபோய் விடும்படியான நித்யசூரிகளுக்கு ஸ்வாமியானவன் என்கிறார்.

அந்தணர்கள் அமுதத்தினை ’ என்றது சுவையின் மிகுதி பற்றியும், பெறுவதற்கு அரியது ஆனதாலும், கிடைப்பவர்க்கு போக்யமாயிருக்கும் தன்மை பற்றியும், பருகினவர்களை மயக்கும் தன்மை பற்றியும் கருத்தில் கொண்டு எம்பெருமானை அமுதமாகக் கூறுகிறார். பரமபதத்தில் கிடைக்கும் அனுபவம் இந்த விபூதியில் கிடைக்கும்படி சனகாதிகளுக்கு போக்கியமாக இருக்கிறவனை – ‘ பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார், விண்ணுளாரிலும் சீரியரே‘ என்று சுவாமி நம்மாழ்வார் திருவிருத்தம் (8.9) சொன்னதும் ‘வேதியர் முழு வேதத் தமுதத்தை,’ (திருவாய்மொழி 3.3.5)ல் அருளிச் செய்ததும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி திருவடி தொழுவதற்கு என்று அங்கு எழுந்தருளின காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசிரியரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லார்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்ய வேண்டும்” என்று பிரார்த்திக்க, எம்பார், “எம் பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டு உணர்ந்ததில்லை; இப்போது அவரைக் கேட்டு உங்களுக்குச் சொல்லுவோம் என்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளி இருக்கிறார்; ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொல்லியே ஆக வேண்டும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளை எடுத்துத் தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு, ‘இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று, “அந்தணர் தம் அமுதத்தினைப் பாட வல்லார், சாயைப் போல அணுக்கர்கள்” என அமைத்து பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தார்.

தாமும் என்பதற்கு அவர்களின் ஏற்றத்தை நினைத்து, பிரயோஜனத்தை எதிர்பார்க்காமல் மங்களாசாசனம் செய்வது, மற்றும் தன் காலத்திற்கு மட்டும் இல்லாமல் கழிந்த காலத்திற்கும் மங்களாசாசனம் செய்வது. ‘ஏழாட்காலும் பழிப்பிலோம்‘ (திருபல்லாண்டு 3) என்று இவர் அருளிச் செய்தது.

சாயை போலப் பாட வல்லார் என்பது, பெரியதிருவந்தாதி (4.1)ல் சொல்லியபடி, ‘நிழலும் அடிதோறும் ஆனோம்‘ என்பதாகும், அதாவது, அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு பாத நிழலாகவும் பாதரேகையாகவும் ஆவது ஆகும். இதில் பாடுவது என்பது, ‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு ‘ (திருப்பல்லாண்டு 1.1.1) ஆகும். ‘சாயைபோல என்பது, நிழல் உண்டாகும் படி பாட வல்லார், அதாவது, குளிர்ச்சி உண்டாகும் படி, பாட வல்லார், அணுக்கர்கள்’ என்றும் சிலர் உரைப்பர்.

Leave a comment