எம்மனா என் குல தெய்வமே என்னுடைய நாயகனே, * நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார், * நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம், * சும்மெனா தேகை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.
பெரியாழ்வார் திருமொழி 5.4.3
“பிறவி யென்னும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால், இரவு செய்யும் பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால்” என்ற தம்முடைய விரோதிகள் ஒழிந்தமையையும் வேண்டியவை கிட்டியதையும் அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் ஓருவர் மாத்திரம் பேறு பெற்றால் போதுமா, உம்மோடு ஸம்பந்தம் உடையார்க்கும் விரோதி கழிந்தால் அன்றோ நீர் பேறு பெற்றதாக கருதப்படும்” என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக ஆன பின்பு என்னைப் போல் நன்மை பெற்றார் இவ்வுலகில் யாரேனும் உண்டோ, என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி, என்னோடு ஸம்பந்தம் உடையவர்கள் விரோதிகள் கழிந்தது மட்டுமன்றி, இந்நாட்டிலுள்ள அனைவருடைய விரோதிகளும் அன்றோ கழிந்தன’ என்று சொல்லி, இதற்கு மேற்படவும் ஒரு நன்மையுண்டோ?” என்று இந்த பாட்டு சொல்கிறது.
எனக்கு மன்னனானவனாய், என் குடிக்கு தெய்வமாய், எனக்கு நாதனானவனே, உன் அபிமானத்தில் அந்தர் பூதனாய், நான் பெற்ற பேற்றை இந்த சம்சாரத்தில் வேறு யார் பெறுவார். பூத , பிசாசுகள் போல் தள்ளி அமுக்கும் உலகத்தில் உள்ள பாவங்கள் எல்லாம் மூச்சு விடாமல் கை விட்டு ஓடிச் சென்று புதர்களில் பாய்ந்து போயின என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
எம்மனா என்பதை எம் அனா என்று தாயாரை சொல்வது போல் ஆகும். தாய் முலை பால் போல, ஞானத்தை கொடுத்தவனே என்ற பொருளையும் கொடுக்கும். “என் குலதெய்வமே” என்று சொல்வது, இவர் குலத்தை முன்னிட்டு இவரை அங்கீகரித்தது . ‘ஏழாட் காலும் பழிப்பிலோம் ‘ (திருப்பல்லாண்டு 3) என்று முன்பும் சொல்லி உள்ளார். சுவாமி நம்மாழ்வார் கூறிய ‘குடிக் கிடந்தாக்கஞ் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து‘(திருவாய்மொழி 9.2.2) என்பதையும் ‘எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி‘ (திருப்பல்லாண்டு 6) என்பதையும் இங்கே நினைவில் கொள்ளலாம் . என்னுடைய நாயகனே என்று சொல்வது ‘குலதொல் லடியேன்‘ (திருவாய்மொழி 6.10.1) என்பதையும் தாண்டி, இவனால் அவருக்கு வந்த ஏற்றத்தைச் சொல்வது. இவர் குலத்தில் உள்ளவர்களுக்கும் இவரால் பெருமை .
எம்மனா என் குல தெய்வமே என்னுடைய நாயகனே என்று இந்த மூன்றினாலும், தேக ஆத்ம அபிமானத்தையும், மற்றவர்களுக்கு சேவை செய்வதையும், ஸ்வாதந்திரியமும் கழிந்தது என்று ஆளவந்தார் என்ற ஆச்சார்யன் சொல்வார். அதே போல் , உபாயமும் , உபேயமும் சர்வேஸ்வரனும் என்ற மூன்றும் என்ற அர்த்தமும் விளங்கும் .
“நம்மன்போல வீழ்த்தமுக்கும்” என்று சொன்னது பாவங்களின் கொடுமையைக் கூறுகிறது. ‘இன்னமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க‘ (திருவாய்மொழி 7.1.8)ல் சொல்லியபடி அமுது எனத்தோன்றி நம்மை முடிக்கும் பாவங்கள் . ‘தடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும்‘ (திருவாய்மொழி 8.10.1) என்பது போல் முற்றும் போய்விடும் என்கிறார் .
‘சும்மெனாதே; என்பது வாயைத் திறவாமல் ஓடிப் போய் விட்டான்’ என்ற பொருளில் வரும். போவது பிறர்க்குத் தெரியாதபடி போனான். ‘தூறுகள் பாய்ந்தன’ என்பது ஸம்ஸாரிகளை என்று திருக்கோட்டியூர் நம்பி அருளி செய்வார்.
தூறுகள் பாய்ந்தனவே என்பது, ‘கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால்’ (பெரிய திருவந்தாதி 6.4) ல் சொல்லியது போல் பாவங்கள் அருகில் எங்கும் காணப்படவில்லை என்கிறார். தூறு என்பது செடியாய் சம்சாரிகளை சொல்கிறது என்று திருக்கோட்டியூர் நம்பி என்ற ஆச்சாரியார் சொல்வார். ‘முற்ற இம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில் புக்கு‘ (திருவாய்மொழி 10.10.8) ல் சொல்லியபடி இந்த மூவுலகம் எல்லாமாகிற பெரிய தூற்றை உண்டாக்கி , அந்த தூற்றின் உள்ளே ஒருவரும் அறியாதவண்ணம் மறைந்து நிற்பவனை சொல்கிறார்.
Leave a comment