எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது, * நில்லுமின் என்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே, * சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும், * அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
பெரியாழ்வார் திருமொழி 4.10.3
அரங்கத்தரவணைப் பள்ளியானே ; திருவாழியும் , ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும் திருக்கரங்களில் ஏந்திக்கொண்டு இருப்பவனே, அடியேனுடைய ஆயுளின் எல்லையான இறுதிக்காலத்தில் யமபுரத்திற்கு போகும் வழி கிடைத்தால் , எம கிங்கரர்களால் அடித்து பிடிக்கும் போது, ‘தள்ளி நில்லுங்கள் என்று சொல்ல ஒரு உபாயமும் என்னிடம் இல்லை, (ஆதலால்) சொல்வதற்கு யோக்யதை உண்டான காலத்திலேயே தேவரீருடைய திருநாமங்களை எல்லாம் சொன்னேன் ; என்னை எப்போதும் திருவுள்ளம்பற்றி எம கிங்கரர்கள் கையில் அகப்பட்டு வருந்தாதபடி காப்பாற்றி அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
எல்லை என்று மரண தசையைச் சொல்லுகிறது; ஆயுசுக்கு மரணம் எல்லையாதலால், அதனை வாசல் என்று கூறுகிறார்.
எம்பெருமானே! நான் இறுதி காலத்தில் கர்ம பலன்களினால் யம புரத்தின் வழியே சென்றால், அங்கே யம கிங்கரர்கள் வந்து என்னை அடித்துப் பிடிக்கும்போது, “நீங்கள் என்னருகில் வரக் கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது’ என்கிறார் .
சங்கோடு சக்கரம் ஏந்தினானே என்று சென்ற பாட்டில் சொன்ன ஆழ்வார் இங்கு நேமியும் சங்கமும் ஏந்தினானே என்கிறார். இதுவே ஆழ்வார் கொண்டு இருக்கும் உபாயம் என்கிறார். இவர்கள், ‘எப்போதும் கை கழலா நேமியான்’ (பெரிய திருவந்தாதி 9.7) என்று இருப்பவர்கள் ஆயிற்றே. ‘இதுவே உபாயம் ஆயிற்றே, ஏன் நில்லுமின் என்னும் உபாய மில்லை என்று சொல்கிறீர், மேலும் என் திருநாமங்கள் எல்லாம் சொல்கிறீர்’ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்ற, உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்று சொன்னது உபாயமாக சொன்னேனா, மேற் சொன்ன அநர்த்தம் அடியேனுக்கு விளைய கூடாது என்பதற்காக இப்போதே உன் திருநாமங்களை எல்லாம் பக்தியுடன் சொல்லி விட்டேன்; இதுவே ஒரு துணையாக இருந்து, என்னை நீ உன் திருவுள்ளத்தில் கொண்டு, அடியேனை காத்தருள வேண்டும் என்கிறார்.
இதற்காகவன்றோ தேவரீர் அணித்தாக திருவரங்கம் எழுந்து அருளி இருந்து கண் வளர்ந்து அருளுவது என்கிறார் .
Leave a comment