திவ்ய பிரபந்தம்

Home

4.9.11 கைந் நாகத்திடர் கடிந்த

பெரியாழ்வார் திருமொழி 4.9.11

பெரிய துதிக்கையை உடைய ஸ்ரீ கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கியதாய் ஜுவலிகின்ற திரு ஆழியை ஆயுதமாக உடையவன் விரும்பி வர்த்திக்கின்ற கோவிலாய், தென்னாட்டில் உள்ளாரும், வடநாட்டில் உள்ளாரும் தொழும்படியாக நின்று அருளின திருவரங்கம் என்னும் திருப்பதி விஷயமாக மெய்யே சொல்லும் நாவை உடையவராயும் அவன் அடிமை பூண்டவராயும் இருக்கிற பெரியாழ்வார் அருளிச் செய்த இந்த தமிழ் மாலையான பதிகத்தை சொல்ல வல்லவர்கள் ஸ்ரீ வைகுண்ட நாட்டில் ஒன்றுக்கு ஒன்று இணையான திருவடிகளின் கீழ் எக்காலத்திலும் அடியார்கள் குழாங்களோடு இணை பிரியாமல் இருப்பார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

இந்த பதிகம் கற்பார் நலம் அந்தம் இல்லாதோர் நாடு (ஸ்ரீவைகுந்தம் / பரமபதம்) அடைந்து அடியார்கள் குழாங்களுடன் கூடி என்றென்றும் வாழப் பெறுவர் என்று பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

யானைக்கு தன் கனத்தின் அளவு துக்கம் என்கிறார். கைந் நாகத்திடர் என்று யானைக்கு இந்த வார்த்தையை சொல்வது, ‘கைம்மா துன்பம் கடிந்தபிரானே‘ (திருவாய்மொழி 2.9.1)ல் சொல்வது போல் துதிக்கையை மூழ்கும் அளவு வந்த துன்பம் என்கிறார். பூ ஒன்றும் பலகாலம் கிடைக்காததால் தளர்ந்த போது, ‘மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை‘ (திருவாய்மொழி 3.5.1) ஒன்றை கண்டு பூவை பறித்து, கரையில் ஏறும் அளவில், முதலை வந்து யானையின் காலை பிடிக்க, ஒரு நீர்ப்புழு நிமித்தமாக ஈஸ்வரனை அழைக்கவேண்டுமோ என்று, தாமே தள்ளிபோவோம் என்று போகப் பார்த்த அளவில், பிடித்த முதலை பிரபலம் ஆனதாலும், இங்கே ஆயிரம் தேவ வருஷங்கள் ஆனதாலும், முதலைக்கு தன் நிலம் ஆனதாலும், அபிமதலாபத்தாலும் முழுவலி முதலை (பெரிய திருமொழி 5.8.3) என்கிறபடி ஆனைக்கு தன நிலம் இல்லாதபடியாலும் பலம் குறைத்தாலும் துதிக்கை மூழ்கும் அளவு துயர் வந்தது என்கிறார்.

இப்படி தானால் செயல் அற்று, சர்வேஸ்வரனையே ரக்ஷகனாக அனுசந்தித்து ‘நாராயணா ஓ மணிவண்ணா நாகனையாய் வாராய், என் ஆரிடரை நீக்காய்‘ (சிறிய திருமடல் 22) என்று சப்தமிட, எம்பெருமான் மடுவின் கரையில் வந்து ஆனையின் இடர்கடிந்தது சொல்லப்பட்டது.

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய், தொழுங் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே‘ (திருவாய்மொழி 3.1.9) என்று நம்மாழ்வார் சொல்வது போல, கையும் திருவாழியும் கொண்டு, வந்து தோன்றி முதலையை விடுவித்ததும் யானையை ரக்ஷித்ததும் சொல்லப்பட்டது.

கருதும் கோயில், என்றது பரமபதம் ஷீராப்தி முதல் எல்லா ஸ்தலங்களைக் காட்டிலும் அடியவர்கள் அனுபவிப்பதற்கும் அவர்களை காப்பதற்கும் ஏற்ற ஸ்தலம் என்று விரும்பி வர்த்திக்கும் க்ஷேத்திரம் திருவரங்கம் என்கிறார்.

மெய் நாவன் என்று சொன்னது, மெய்யே சொல்லும் நாவை உடையவன் என்றும் அசத்தியம் கலவாத நாவை உடையவன் என்றும் இதனால், இவர் அருளிச் செய்யும் பகவத் வைபவம், திருப்பதி(திவ்யதேச) வைபவம் முதலியவற்றில் சிறிதும் பொய் கலவாமை சொல்லப்பட்டது.

விட்டு சித்தன் என்று சொன்னதால் ‘அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்த‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.10) சர்வேஸ்வரனை தன் திருவுள்ளத்தில் எப்போதும் வைத்து இருப்பவர் .

Leave a comment