மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ, * செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில், * திருவடி தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்ற, * உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட ஓ சலிக்கும் ஒளிய ரங்கமே.
இராமாவதார, கிருஷ்ணாவதார, மற்றும் அவதார குணநலங்கள் பெரியபெருமாள் இடத்தில் பிரகாசிப்பதாலே, அவற்றை அனுபவித்து, அவன் உகந்து அருளிய திவ்ய தேசமான திருவரங்கம் திருப்பதியின் வைபவத்தையும் சேர்த்து, சென்ற பதிகத்தில் பாடி அருளினார். அந்த அளவில் திருப்தி அடையாமல், மீண்டும் இந்த திவ்ய தேசத்தின் சிறப்புகளையும், பெரியபெருமாளின் குணவிசேஷங்களையும் பாடி, இந்த பதிகத்திலும் அனுபவிப்பதை காண்போம்.
பெரியாழ்வார் திருமொழி 4.9.1
அழகை உடைய கரு நெய்தல் மலரானது பெரிய பெருமாளுடைய அழகிய திருமேனி நிறத்தையும் பெரிய பிராட்டியாருடைய மலர்ந்த திருக்கண்களின் நிறத்தையும் பிரகாசித்து காற்று அசைக்க அசைந்து ஒளியை உடைய திருவரங்கமானது; (சித்திரகூடத்தில் பிரபத்தி செய்த ) தம்பியான ஸ்ரீ பரத்தாழ்வானுக்கு திருவடி நிலைகளை மீண்டு எழுந்து அருளுவார் என்று மிகவும் நம்புவதற்கு அடையாளமாக அடகு வைத்து , ராக்ஷ்சர்களால் நலிவுபட்ட தேவர்கள் அலைச்சல் இன்றி வாழும்படி சித்திரகூடத்தில் இருந்து அருகே போய் யுத்தம் செய்கைக்கு இட்டுப் பிறந்த தெற்கு திசையில் சென்று ராவணாதிகளை அழித்து விபீஷணாழ்வானை ராஜ்ஜய அபிஷேகம் செய்துவைத்து பிராட்டியோடு திரு அயோத்திக்கு எழுந்து அருளி உலகத்தை ஆண்டு அருளினை லக்ஷ்மிபதியான எம்பெருமானின் வாசஸ்தலம் இது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இராமனை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு, சித்திரகூடத்தில் பணிந்து வேண்டிய பரதாழ்வானை நோக்கி, ‘தந்தை சொல் பழுது படாத படி பதினான்கு வருடம் வனவாசம் கழித்தால் அன்றி யான் அரசாள மீள மாட்டேன்’ என்று அருளிச் செய்ய, பரதன் ‘இனி நாம் நிர்ப்பந்திக்கலாகாது’ என்று இசைந்து, “அடியேனுடைய பாரதந்திரியம் விளங்குவதற்கும், தேவரீர் மீண்டும் எழுந்தருள்வீர், என்று நம்புவதற்கும் தாங்கள் இந்த பாதுகைகளில் உங்கள் திருவடிகளை பதித்து அடியேனுக்கு அருள வேண்டும்” என்று வேண்ட, அதற்கு இராமனும் அந்த பாதுகைகளில் பாதம் பதித்து பரதனுக்கு அருளின வரலாறு கூறப்பட்டுள்ளது. ‘அதிரோஹார்ய பாதாப்யாஂ பாதுகே ஹேமபூஷிதே’ (அயோத்யா காண்டம் 112.2).
உலகத்தில் ஒருவர் ஒரு பொருளை மற்றொருவர் இடத்தில் அடகு வைப்பது நம்பிக்கைக்காக ஆகும். அதுபோல இராமபிரானும் பரதனுடைய நம்பிக்கைக்காக, அவனிடத்தில் இந்த மரவடியை வைத்து அருளினதால் “பணயம் வைத்து” என்றார். வான் என்பது பெருமையைச் சொன்னது ஆகும். இதனால், உறுதியான நம்பிக்கையை கூறுகிறார். பணயம் என்பது விசுவாசம் , வான்பணயம் என்பது மஹாவிசுவாசம் என்கிறார் .
போய் வானோர் வாழ, என்று சொன்னது , சித்திரகூடத்தில் இருந்து தண்டகாரண்யம் புகுந்து , பின்னர்இலங்கை வரை எழுந்து அருளிய தூரங்களை எல்லாம் சொல்கிறார் . வானோர் வாழ என்பது இராவணாதிகளை அழித்து தேவர்கள் வாழ வழி செய்ததை சொல்லியது .
ராவணன் முதலான ராக்ஷஸர் எல்லாரும் கூடி இருப்பது தென் திசையில் என்பதால், அதனைச் சேருவுடைய திசை என்றார். இந்த திசைக் கருமம் திருத்துவதாவது, ‘நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு’ (திருவாய்மொழி 7.5.2)ல் சொல்லியது போல், உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று அவர்ள் இருந்த இடத்தில் கொன்று, நாட்டை காப்பாற்றியது. அதாவது, வனத்தில் அரக்கரை அழித்ததும், ஸுக்ரீவனுக்குப் பகை அறுத்து அரசாட்சி செய்வித்ததும், ‘இலங்கை பாழாளாகப் படை (திருப்பல்லாண்டு 3) பொருந்தும் விபீடணனுக்கு அரசு அளித்ததும் ஆகும். பெருமாள் திருமொழி (10.7)ல் கூறியபடி, ”குரைகடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி, எரி நெடுவே ல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து’ என்று கூறியதையும் இங்கே நினைவில் கொள்ளலாம் .
திருவடி என்று சொன்னது ஸ்வாமியை சொல்வது ஆகும். திருவரங்கச் சோலைகளில் உள்ள அழகிய கருநெற்தல் பூக்கள் காற்று அசைக்கும் போது, அசைந்து ஒளிவிடுகின்றன என்கிறார் . எம்பெருமானது திருமேனி நிறத்துக்கும், பெரிய பிராட்டியின் விலாசமான கண்களுக்கும் கரு நெய்தல் பூவை உவமையாக கூறுகிறார்.
Leave a comment