ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம், * கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை, * வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்தில் இழி, * தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே.
பெரியாழ்வார் திருமொழி 4.2.4
ஸ்வர்க்க லோகத்தில் உள்ள பெருமை மிக்க பூக்களை உடைய, கல்ப மரத்தின் பூங்கொத்தில் இருந்து பெருகிய தேனானது ஆறாய் ஓடிக் கொண்டு இருக்கிற அழகை உடைய திருமாலிருஞ்சோலை – பசுக்களை உடைய இடையர்கள் திரண்டு (இந்த்ரனுக்காக) சமைத்த ஆராதன உத்சவத்தை தேவர்களுடைய ராஜாவான இந்த்ரனுக்கு ஆகாமல் கோவர்தன மலைக்கு ஆகும் படி செய்தவனுடைய திருமலை ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கோவர்தன மலையை தூக்கி ஆநிரை மற்றும் ஆயர்களை இந்திரனின் கோபத்தினால் உண்டான கல்மழையில் இருந்து காப்பாற்றியது முதலில் கூறப்பட்டது. தன் அபிமானத்தில் இருக்கும் அந்த இடையர்களை அந்யசேஷத்தில் இருந்து (மற்ற தேவதைகளை போற்றுவது) மீட்டு மலைக்கு கொடுக்க சொல்லி, அதையும் அவர்கள் அறியாது தானே ஏற்றுக்கொண்டு அவர்களை முழுமையாக தனக்கே என்று ஆக்கிக் கொண்டு அருளியதை போல, இங்கும் ஸகல பாகவதர்களையும் தென் திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலைக்கு சேஷமாக்குகைக்காக எம்பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கின்றான் என்ற கருத்துத் தோன்றும் இந்த வரலாற்றை இங்கு கூறுகிறார்.
தேவலோகத்துள்ள கல்ப வ்ருக்ஷத்தில் பூங்கொத்துக்களில் இருந்து பெருகிய மது தாரைகளானவை, திருமாலிருஞ் சோலைமலையில் ஓடின என்பது பின்னடிகளின் கருத்து. இதனால் அம்மலையினது மிகுந்த உயரம் தெரிவிக்கப் படுகிறது.
Leave a comment