திவ்ய பிரபந்தம்

Home

4.2.3 தக்கார் மிக்கார்களை

பாகவதர்கள் அப்படி இல்லாமல், “சலிப்பின்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே” (திருவாய்மொழி, 3.7.6) என்று எப்போதும் எம்பெருமான் அநுக்ரஹம் வேண்டும் என்று இருப்பார்கள். அப்படிப்பட்ட அடியவர்களை சலனமற நோக்குவாரும், ‘வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே‘ (திருவாய்மொழி 3.7.5) என்று இம்மைக்கும் மறுமைக்கும் ரக்ஷித்தாரும் இவரே; இதை ஒட்டியே, பாகவதர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லும் இடத்தில் புருஷகாரம் தேட வேண்டாம் என்றதும். ஈஸ்வரன் அருளைவிட இவர்கள் அருள் நன்றாக இருப்பது என்று சொல்லி, ‘ நல் அருள் ஆயிரவர்  நலன் ஏந்தும் திருவல்லவாழ் (திருவாய்மொழி 5.2.10)’ என்பதை குறிப்பிடுகிறார்.

இப்படிப் பட்ட மஹான்களை நிலை குலைத்துக் கொடுமை புரிகின்ற கபட ராக்ஷஸாதிகளை எம்பெருமான் நரகத்திற்கு புகச் செய்வார் என்று கூறுகிறார். தண்டகாரண்யத்தில் ரிஷிகள் பகவத் தியானம் குலையும்படி நடந்த அரக்கர்கள் போன்றவர்களை, அதாவது, எம்பெருமான், இப்படிபட்ட கபட ராக்ஷஸாதி ஆத்மாக்களுடைய குற்றங்களின் மிகுதியையும், தனது ஸ்வாதந்திரியத்தையும் (எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் திறமையும் கர்வமும்) கொண்டு சீற்றமுற்று, “பொறுக்க மாட்டேன், யம லோகத்திற்கு தள்ளி விடுவேன்‘ என்று சொல்கிறார். திருவாய்மொழி 3.5.2 ல் சொல்லிய ‘அசுரர்க்குத் தீங்கிழைக்கும் திருமாலை,’ என்பதை இங்கே குறிப்பிடலாம்.

சலவர் என்பது கபடத்தை உடையவர்கள் என்ற பொருளில் வரும். தெக்கா நெறியே என்றது யமனது பட்டணம், தெற்கு திசையில் உள்ளது ஆகையால், நரகத்துக்குப் போவது அவ்வழியாலே தான் என்று சொல்வதை “தெக்கா நெறி“ என்று சொல்கிறார்.

எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை என்று சொல்வது, எந்த பிரயோஜனமும் நினைக்காமல் அவனையே தொழும் அடியர்களை கூறுகிறார். அதாவது, எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை, வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார் என்று முதல் திருவந்தாதி (26) ல் சொல்லிய அடியவர்கள் போல என்கிறார்.

செல்வன் என்பது பிராட்டியை உடையவன், என்ற பொருளில் வரும்.

கான் நெறி என்பது காட்டு வழி, பாவக் காட்டுக்கு வழி, என்றும் அதனை மாற்றும் திருமாலிருஞ்சோலை என்றும் கூறி பாடலை முடிக்கிறார். இதேயே நம்மாழ்வார் திருவேங்கடமுடையானுக்கு சொல்லும்போது, ‘ஓயு மூப்புப் பிறப் பிறப்புப் பிணி, வீயு மாறுசெய் வான்‘ (திருவாய்மொழி 3.3.9) என்றும், சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே (திருவாய்மொழி 3.3.7) என்றும், திருமாலிருஞ்சோலை எம்பெருமானுக்கு சொல்லும்போது, அயன்மலையடைவது அதுகருமமே (திருவாய்மொழி 2.10.3) என்றும் கூறியதை நினைவில் கொள்ளலாம்.

Leave a comment