தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை, * தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன், பொன்மலை * எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை, * அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே.
பெரியாழ்வார் திருமொழி 4.2.3
எப்போதும் சென்று திருவடி தொழுது நிற்கும் தாஸபூதர்களை அந்த பாவக் காட்டு வழியில் இருந்து தவிர்த்து வருவது சம்சார தாப ஹர ஸ்தலமான மாலிருஞ்சோலை ; எம்பெருமானோடு ஒத்த கிருபையில் ஒத்து இருப்பவர்களையும், எப்போதும் அநுக்ரஹ சீலராய் இருக்கையாலே அவனைக் காட்டிலும் மேன்மை உற்று இருப்பவர்களையும், திருவுள்ளம் கலங்கப் பண்ணும் பிரதிகூலரை தென் திக்கில் யமலோகத்தின் வழியே போகும் படிசெய்யும் திருமகளின் மணவாளன் வசிக்கும் பொன்மயமான ஸ்தலம் திருமலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தக்கார் என்பது எம்பெருமானுக்குத் தகுதியானவர்கள், மற்றும் கிருபையில் ஓத்தவர்கள். அதாவது, “எல்லா ஆத்மாக்களும் உய்வு பெறவேணும்‘ என்ற நினைவில் ஒத்து இருப்பது ஆகும். மிக்கார் என்பது அந்த அருள் விஷயத்தில் எம்பெருமானுக்கும் மேற்பட்டவர்கள்.
பாகவதர்கள் அப்படி இல்லாமல், “சலிப்பின்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே” (திருவாய்மொழி, 3.7.6) என்று எப்போதும் எம்பெருமான் அநுக்ரஹம் வேண்டும் என்று இருப்பார்கள். அப்படிப்பட்ட அடியவர்களை சலனமற நோக்குவாரும், ‘வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே‘ (திருவாய்மொழி 3.7.5) என்று இம்மைக்கும் மறுமைக்கும் ரக்ஷித்தாரும் இவரே; இதை ஒட்டியே, பாகவதர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லும் இடத்தில் புருஷகாரம் தேட வேண்டாம் என்றதும். ஈஸ்வரன் அருளைவிட இவர்கள் அருள் நன்றாக இருப்பது என்று சொல்லி, ‘ நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் (திருவாய்மொழி 5.2. 10)’ என்பதை குறிப்பிடுகிறார். இப்படிப் பட்ட மஹான்களை நிலை குலைத்துக் கொடுமை புரிகின்ற கபட ராக்ஷஸாதிகளை எம்பெருமான் நரகத்திற்கு புகச் செய்வார் என்று கூறுகிறார். அதாவது, எம்பெருமான், இப்படிபட்ட கபட ராக்ஷஸாதி ஆத்மாக்களுடைய குற்றங்களின் மிகுதியையும், தனது ஸ்வாதந்திரியத்தையும் (எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் திறமையும் கர்வமும்) கொண்டு சீற்றமுற்று, “பொறுக்க மாட்டேன், யம லோகத்திற்கு தள்ளி விடுவேன்‘ என்று சொல்கிறார். திருவாய்மொழி 3.5.2 ல் சொல்லிய ‘அசுரர்க்குத் தீங்கிழைக்கும் திருமாலை,’ என்பதை இங்கே குறிப்பிடலாம்.
சலவர் என்பது கபடத்தை உடையவர்கள் என்ற பொருளில் வரும். தெக்கா நெறியே என்றது யமனது பட்டணம், தெற்கு திசையில் உள்ளது ஆகையால், நரகத்துக்குப் போவது அவ்வழியாலே தான் என்று சொல்வதை “தெக்கா நெறி“ என்று சொல்கிறார்.
செல்வன் என்பது பிராட்டியை உடையவன், என்ற பொருளில் வரும். கான் நெறி என்பது காட்டு வழி, பாவக் காட்டுக்கு வழி, என்றும் அதனை மாற்றும் திருமாலிருஞ்சோலை என்றும் கூறி பாடலை முடிக்கிறார்.
Leave a comment