திவ்ய பிரபந்தம்

Home

3.10.5 மானமரு மெல் நோக்கி

பெரியாழ்வார் திருமொழி 3.10.5

மான் பேடை போன்ற மெல்லிய நோக்கை உடையவளாய் விதேஹ ராஜா மகளாய் பால் போன்ற போக்கியமான மொழியை உடையவளே, விண்ணப்பம். காடு செறிந்து இருப்பதாய், கல் நிறைந்து கிடப்பதான வழியிலே எழுந்தருளி வன வாசம் பண்ணின காலத்திலே தேன் நிறைந்த சோலைகளோடு சேர்ந்த தாழ்வரையை உடைய சித்ர கூட மலையில் (இளைய பெருமாள் (லக்ஷ்மணன்) கட்டிய பர்ணசாலையில்) எழுந்து அருளி இருக்கும் போது பாராதந்த்ரியத்தால் பூர்ணனான பரதாழ்வான் ‘மீண்டும் எழுந்தருள வேண்டும்’ என்று வேண்டியதும் ஒர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பெருமாள் (ஸ்ரீராமன்) காட்டுக்கு எழுந்தருளினதை அறிந்த பரதன் எப்படியாவது அவரை மீண்டும் அயோத்திக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வர வேண்டும் என்று கருதி பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சித்திரகூடத்தில் வந்து பெருமாள்(ஸ்ரீராமன்) திருவடிகளில் சரணாகதி செய்தததை ஒரு அடையாளமாக கூறுகிறார்.

தன் இனத்தைப் பிரிந்து செந்நாய்களின் கூட்டத்தால் வளைக்கப்பட்டு அவற்றின் நடுவே நின்று மலங்க மலங்க விழிப்பதொரு பெண் மான் போன்று, தனக்கு வேண்டபட்ட மக்களை பிரிந்து கொடிய ராக்ஷசிகள் கூட்டத்தினால் சூழப்பட்டு, அவர்களுடைய மிரட்டல்களால் மனம் கலங்கி இருக்கும் பிராட்டிக்கு, ஏற்ற உவமையாம்.

Leave a comment