திவ்ய பிரபந்தம்

Home

3.10.4 வாரணிந்த முலைமடவாய்

பெரியாழ்வார் திருமொழி 3.10.4

கச்சை அணிந்த முலையை உடையவளாய், மடப்பத்தை உடையவளாய், விதேக ராஜன் திருமாகளாய், தேர்களால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தியில் உள்ளவர்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய (ஸ்ரீராமனுடைய) பெருமைக்குத் தக்கவளான தேவீ, விண்ணப்பம் கேட்டு அருளாய்; மிகக் கூர்மையை உடைய வேல் தொழிலில் வல்லவன் ஆன ஸ்ரீ குகப் பெருமாள் உடன் கங்கை கரையில் உள்ள ஸ்ரிங்கிபேரபுரத்தில் சீர்மை மிகுந்த தோழமை கொண்டதும் ஒர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இராஜாக்களுக்கு போக்கியமான வஸ்துக்களை எடுத்துச் செல்பவர்கள் மற்றவர் கண் படாதபடி கட்டி முத்திரை இட்டு கொண்டு செல்வார் போல், இவள் கச்சை இட்டு கட்டிக்கொண்டு இருப்பது என்கிறார். இப்படி இருக்க வேண்டிய திருமேனி இப்போது உபவாசம் இருந்து திருமேனி இளைத்து இருக்கிறதை சொல்கிறார்.

மடவாய் என்றது, பிரிவு ஆற்றாமையால் வந்த துவட்சியை பற்ற சொல்வதும், பற்றியது விடாது, பெருமாள் அளவில் (ஸ்ரீராமன் அளவில்) அவனைத் தவிர வேறு ஒன்றும் அறியாதபடி இருப்பதைச் சொல்கிறது.

இராமன் ஒரே ஒரு மனைவி என்ற விரதம் உள்ளவன் ஆகையால், பெருமாளுக்கு (ஸ்ரீ ராமருக்கு) சிறுதேவியர் என்று பலரும் பெருந்தேவி என்று ஒருவரும் இல்லை ஆதலால், “பெருந்தேவி” என்று இங்கு கூறபட்டதற்கு, பெருமைக்குத் தக்க தேவி என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

இராமன் மனைவியுடனும் தம்பியுடனும் அயோத்தியை நீங்கிக் கங்கைத் துறை சேர்கையில், கங்கையில் ஓடம் விடுபவனும், ஆயிரம் ஒடங்களுக்கு தலைவனும், கங்கைக் கரையிலுள்ள ஸ்ருங்கிபேர புரத்திற்கு  அதிபதியும், வேடர் தலைவனுமான குஹப்பெருமாள் இராமனைக் காணும் பொருட்டுக் காணிக்கைகளுடன் அருகில் வந்து சேர்ந்து வணங்கி நிற்க, ஸ்ரீராமன் அவனது பக்தியைக் கண்டு மகிழ்ந்து “என் மனைவியான இந்தச் சீதை உன் தோழி, என் தம்பியான இலக்குமணன் என் தம்பியே, நீ எனது உயிர்த்தோழன்;  இது வரை நாங்கள் உடன் பிறந்தவர் நால்வர் என்று இருந்தோம், இன்று உன்னுடன் ஐவர் ஆனோம் ‘ என்று ஒற்றுமை நயம் தோன்றக் கூறியதை ஒரு அடையாளமாகக் கூறினான்.

பெரிய திருமொழி (5.8.1) ல் ‘ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து, மாழை மான் மட நோக்கி உன் தோழி, உம்பி எம்பி என்று ஓழிந்திலை, உகந்து தோழன் நீ எனக்கு‘ என்று சொல்வதை இங்கே குறிப்பிடலாம்.

Leave a comment