திவ்ய பிரபந்தம்

Home

3.10. 1 நெறிந்த

சென்ற பதிகத்தில் இராமாவதார குணநலன்களை அனுபவித்தவர், அந்த அவதாரத்தில் அவருக்கு துணையாக வந்து அவதரித்த பிராட்டியான சீதா தேவியின் புருஷக்காரத்துவத்துடன், மற்ற குணங்களான, கிருபை, பாரதந்திரியம் (அவனுக்கே நாம் அடிமை), அனன்யகதித்துவம் (நீயே கதி) என்ற திருகுணங்களை அவனுடைய அடியார்கள் எல்லாம் அறிந்து, அவற்றை பின்பற்றி, அவனை அடையவேண்டும் என்ற காரணத்தினால், தன்னுடைய அனுஷ்டானத்தின் மூலம் வெளிபடுத்துவோம் என்று திருவுள்ளம் கொண்டார.

அதில் முதலில் கிருபையை, தண்ட காரண்யத்தில் இராவணன் பிரித்தான் என்று ஒரு காரணம் கொண்டு, இலங்கையில் எழுந்தருளினாள்.

இந்த அவதாரத்தின் சிறப்பினாலே, எம்பெருமானாகிய இராமன், பிராட்டி இருக்கும் இடம் அறியாமல், திருத் தம்பியாகிய லட்சுமணனுடன் தேடி திரிந்து, பம்பா தீரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது, சுக்ரீவ மகாராஜாவின் ஆணையின் பேரில் திருவடி என்கிற ஹனுமான், தன்னுடைய உருவத்தை மறைத்துக்கொண்டு எம்பெருமான் முன் வந்து சேர்ந்த போது, அனுமனின் தோழமையை அங்கீகரித்து, ராஜ்யத்தையும் தாரத்தையும் இழந்து இருக்கும் சுக்ரீவனை கண்டு, அவனுடன் தோழமை பூண்டு, அவனுக்கு விரோதியான வாலியை முடித்து, சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்டுக்கொடுத்து, அவர்களை கிஷ்கிந்தாவிற்கு அனுப்பி, மழைக்காலத்தில் மால்யவானில் தங்கி இருந்தார்.

சுக்ரீவன் எம்பெருமான் செய்த உதவியை மறந்து, உலக விஷயங்களில் லயித்து எம்பெருமானுக்கு கொடுத்த சத்தியத்தை மறந்த நிலையில், மழைக்காலத்திற்கு பிறகும் சுக்ரீவன் திரும்பி வரவில்லை; அதனால், இராமன் லட்சுமணனை அழைத்து சுக்ரீவனை இங்கு அழைத்து கொண்டு வா என்று சொல்ல, லக்ஷ்மணன் கிஷ்கிந்தா சென்று கோஷம் இட, அதனை கேட்டு சுக்ரீவன் நடுங்கி அருகில் இருந்த திருவடியை அழைத்து இந்த சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து, அபவாதம் செய்த காலத்தில் அஞ்சலி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து, தாரையை அனுப்பி லட்சுமணனை பார்க்க செய்து திருத்தம்பியின் செவிக்கு ஆறும்படி சில வார்த்தைகளை கூறிய பின், சுக்ரீவனும் அனுமனும் லட்சுமணனின் துணை முன்னிட்டு, எம்பெருமான் ஸ்ரீ ராமனை சந்தித்து, எம்பெருமானை சேவித்தனர். சுக்ரீவன் தன்னுடைய பெரிய வானர சேனையை திரட்டி எல்லா திக்குகளுக்கும் அனுப்பி, சீதையை தேடி போகும் படி அனுப்ப, தெற்கு திசையில் வானரங்களுக்கு தலைவனாக அங்கதனை நியமித்து, ஜாம்பவான், சுக்ரீவன், திருவடி (அனுமன்) இவர்கள் முன்னிலையில், திருவடி அல்லாமல் வேறு ஒருவரால் இந்த காரியம் நடக்காது என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு, அதனால், பிராட்டியை கண்டால் சொல்லவேண்டிய அடையாளங்களை அனுமனுக்கு அருளி செய்து, திருவாழி மோதிரத்தையும் கொடுத்தார்.

தெற்கில் வெகு தூரம் சென்று பிராட்டியை காணாமல், வருத்தப்பட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் தங்களை முடித்து கொள்ள முடிவு எடுத்த சமயத்தில், சம்பாதி என்ற கழுகின் வார்த்தைகளை கேட்டு, இராவணன் என்பவன் இலங்கை என்ற தீவினில் சமுத்திரத்தின் நடுவில் இருப்பதை அறிந்து, ஹனுமான் தன்னை சமுத்திரத்தை தாண்டி செல்ல செய்வது என்று முடிவு செய்து, அவரும் அவ்வாறே செய்து, இலங்கையில் தன்னுடைய வடிவை சுருக்கிக்கொண்டு, எல்லா இடங்களிலும் தாயாரை தேடி, அலைந்து காணாமல், கவலையுற்று அசோகவனம் என்ற இடத்தில் மனித நடமாட்டம் இருப்பதை கண்டு, அங்கே சென்று, பிரம்மாண்டமான ராக்க்ஷிகளின் நடுவே மலங்க மலங்க நோவு கண்டவர்களை போல அநேக அடையாளங்களாலே, இவரே பிராட்டி என்று அறுதி இட்டு, முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நிச்சயித்து, மறைந்து இருந்து, அப்போது காம நோக்குடன் அங்கு வந்த இராவணனின் வாத பிரதிவாதங்களையும், பிராட்டியின் வார்த்தைகளையும் கேட்டு, இராவணன் கோபம் அடைந்து அங்குள்ள ராக்ஷஷிகளிடம் ‘இவளை நம் பக்கம் வர செய்யுங்கள்’, அதற்காக கொடுமையாக நடந்து கொள்ள சொல்லி, அங்கு இருந்து அகன்றான்.

இனி உயிருடன் இருப்பதில் பயன் இல்லை என்று முடிவு செய்து, பிராட்டி, அந்த ராக்ஷசிகள் தூங்கும் சமயம் பார்த்து, ஒரு சிம்சுபா மரத்தின் கிளையை, பிடித்தார். இனி நாம் தாயாரை சந்திக்காமல் இருக்க கூடாது என்று, இராம நாமங்களை சொல்லி, பிராட்டியின் செவிக்கு இனிமையாக இருக்கும்படி, ஸ்ரீ ராமனின் திருக் குணங்கள் வார்த்தைகளாக வந்த திசையை நோக்கிய சீதா பிராட்டி, வானர ரூபமான ஹனுமனை கண்டு, மயங்கி, பின் நெடு நேரம் இவரும் பேசி, இவளின் சந்தேகங்களை முழுவதுமாக அனுமன் தீர்த்து வைத்தார். தான் ராம தூதன் என்று சொல்லி, திருவாழி மோதிரத்தை சமர்ப்பித்து அது கண்டு தாயார் பிரீதி கொண்டு, பாரதந்திரியம் (அவனுக்கே நாம் அடிமை), அனன்யகதித்துவம் (நீயே கதி) என்ற திருகுணங்களை, அனுமன் சீதை உரையாடலின் மூலம், பெரியாழ்வார் அனுபவித்து பாடும் பாடல்களை நெறிந்த கருங்குழல் (3.10) என்ற இந்த பதிகத்தில் அனுபவிக்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 3.10.1

நெருங்கிஉள்ளதாய், கறுத்த கூந்தலை உடையவளாய் மடப்பத்தை உடையவளான பிராட்டியே, தேவரீருக்கு தாசனான என்னுடைய விண்ணப்பம் ஆவாது, நெருங்கிய நவரத்தினங்கள் அழுத்திய கீரீடத்தை தரித்த ஜனக ராஜாவானவர், கல்யாணத்தை காரணமாகக் கொண்டு வந்த வில்லை முரத்து தேவரீரை கொண்டு வந்த செய்ததை அறிந்து இருபத்தொரு தலைமுறை துஷ்ட ராஜாக்களாகிற களையை பிடுங்கினவனாய் ஒருவராலும் செய்ய செய்ய முடியாத தபஸ் உடையவனான பரசுராமன் நடுவழியிலே தெளிவாக அவன் கர்வபங்கம் செய்வதற்குத் தகுந்த வில்லைக் கொண்டு அவன் தபஸ்ஸை அறுத்ததும் (அடியேன் பெருமாளுடைய / இராமனுடைய அடியீர் என்று தேவரீர் அறிவதற்கு) ஓர் அடையாளம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இராமன் பிராட்டியை மணம் புரிந்ததையும், வழியில் பரசுராமனை வென்றதையும், அடையாளமாகக் ஹனுமான் கூறுகிறான். கறுத்துச் சுருண்டிருக்கும் முடி உடைமை கூந்தலுக்குச் சிறப்பாதலால் “தெறிந்த கருங்குழல்” என்கிறார். இது, பிராட்டியின் முன்னிருந்த நிலையை சொல்வது. மடப்பமாவது, மனத்தில் கொண்டது விடாமல் இருக்கும் தன்மை; இங்கு பிராட்டி சிறையிருக்கும் போதும் ஸ்ரீராமனை அல்லாது மற்றொருவனை நெஞ்சில் கொண்டவள் அன்று என்பதை சொல்கிறார். பரசுராமனிடத்திலிருந்து வாங்கிய போதும் வைஷ்ணவ தனுசு ஆனதால், “செறிந்த சிலை” என்கிறார். பிராட்டியின்  திருவுள்ளத்தில் இருந்த சந்தேகங்கள் நீங்குமாறு பல அடையாளங்கள் சொல்ல நினைத்து இருப்பதால், “ஓர் அடையாளம்” என்கிறார்.

மடப்பத்தை என்று சொன்னது, இங்கு இருந்த போதும், அவள் பற்றியது விடாததை சொல்கிறார்.

நின் அடியேன் என்று சொல்வது பிராட்டியின் தாசன் என்பதை குறிக்கிறது. ‘தாசோகம் கோஸலேந்தரஸ்ய ‘ என்று அனுமனே சொல்வதால் அவனுக்கு தாசன் இவளுக்கும் தாசன் ஆவான் என்கிறார்.

பண்டொரு காலத்தில் கார்த்தவீர்யன் காட்டிற்கு சென்று வேட்டையாடிப் பரசுராமனது தந்தையான, முனிவரது ஆச்ரமத்தை அடைந்து அவரது மதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து திரும்பி வருகையில், அவரிடம் இருந்த, அவருக்கு எளிதில் பல வளங்களையும் கொடுத்தது ஒரு பசு கண்டு, அந்த பசுவின் கன்றை அவருக்கு தெரியாமல் வலியக் கவர்ந்து செல்ல, அதனை அறிந்த பரசுராமன் சீறிச்சென்று கார்த்தவீர்யனுடன் போர் செய்து, அவனை அவனுடைய மொத்த ஸேனைகளுடன் நிலைகுலைய செய்து அவனது ஆயிரம் தோள்களையும் தலையையும் தனது கோடாலியால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டு, தன் தந்தையைக் கொன்ற அவன் குமாரர்களையும் கொன்று, அதனாலேயே க்ஷத்ரிய வம்ச முழுவதன் மீதும் கோபம் கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை ஒழித்திட்டது பரசுராம அவதாரதத்தின் வரலாறு ஆகும்.

Leave a comment