திவ்ய பிரபந்தம்

Home

3.5.4 கடுவாய்ச் சின வெங்கண்

பெரியாழ்வார் திருமொழி 3.5.4

கொடியதான வாயை உடைய, மிக்க சீறுதலை உடைய, வெப்பத்துடன் கூடிய கண்களை உடைய, யானைக்கு சோற்றுக் கவளத்தை திரட்டி எடுத்து கொடுக்கும் பாகனைப் போல மலையின் வேர்ப் பற்றிலே திருக்கையை கீழே செலுத்தி, மலையை கிளரப் பிடுங்கி (அயவரும் அமரர்களுக்கு) தேவர்களுக்கு தலைவனான கண்ணன் தாங்கிக்கொண்டு நின்ற மலையானது, மேகங்களானவை கடலிலே போய், அதன் கரையில் இறங்கி கவிழ்ந்து கிடந்து, கடல் வெறும் தரை ஆகும்படி அங்குள்ள நீரையெல்லாம் முகர்ந்து கொண்டு ஆகாயத்தில் ஏறி, எல்லாவிடங்களிலும் குடத்தில் இருந்து சொரிவது போல நின்று மழை பொழிகின்ற கோவர்தனம் என்ற கொற்றக் குடை ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பயங்கரமான வாயையும் மிக்க சீற்றத்தையும் கூர்மையான கண்களையுமுடைய ஒரு யானைக்கு சோற்றுக் கவளத்தை எடுத்து கொடுக்கின்ற யானைப்பாகனைப் போல, தேவர்களுக்குத் தலைவனான கண்ணன், தன்னுடைய ஒரு திருக்கரத்தால் மலையின் அடிபாகத்தையும், மற்றொரு திருக்கரத்தினால் மலையின் மேல்பக்கத்தையும் பிடித்து தாங்கி நின்ற மலை கோவர்தனம் என்ற மலையாகும்.

முதலில், மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம் மலையை எடுத்து பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப் படுத்தினார். ‘மதயானை போலெழுந்த மாமுகில்காள்‘ என்று நாச்சியார் திருமொழியில் (8.9) என்பதை நினைவில் கொள்ளலாம்.

மீண்டும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளார். கடுவாய்(யானை பிளிரும் கொடூரமான சப்தம்), சினம் (குரோதத்தையும்), வெங்கண் (நெருப்பு பறந்த கண்களையும்) என்ற மூன்று அடைமொழிகளை யானைக்கும் மழைக்கும் பொருந்தும். ‘தீவளைத்து மின்னிலகும் ஒளிமுகில்காள் ‘ என்று மேகத்தை திருவாய்மொழியில் (9.7.5) சுவாமி நம்மாழ்வார் சொல்வதையும் காணலாம்.

பெரும்பெளவம் மண்டி யுண்ட, பெருவயிற்ற கருமுகிலே‘ என்று திருநெடுந்தாண்டகத்தில் (3) கூறியுள்ளதை கடல் வெறும் தரை ஆகும்படி செய்ததை உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேகங்கள் திருவாய்ப்பாடி முழுவதும் மழையைப் பொழிந்து வருத்த, அதனை குறைப்பதற்காக தூக்கின குடை கோவர்தனம் என்ற குடையே என்கிறார்.

Leave a comment