அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி, * எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை, * தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மின் என்று, * கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.3
அழகிய மையை அலங்காரமாகக் கொண்ட கண்களை உடைய மடப்பத்தையும் உடைய இடைச்சிகள் பசுக்களின் ரக்ஷணத்தையே தொழிலாகக் கொண்ட இடையர்களும், பசுக்களின் திரளும், மழையின் அபாயத்தால் வருந்திக் கூப்பிட்டு எங்களை ரக்ஷிக்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்ற வேண்டும், பிரார்த்திக்க ஒளியை உடைய (கருதுமிடம் பொருந்த வல்ல தேஜஸ் உடைய) திருவாழியானாய் திருக்கையில் ஏந்திய என் ஸ்வாமியானவன், (அவற்றைக் காக்க) எடுத்த மலையாவது, தங்களை ரக்ஷிக்க வேண்டும் என்று பற்றின தங்கள் பெண்களை ( மலைகளில் சஞ்சரிக்கின்றவர்களுடைய கண்களை கண்டு), நம் மலையை அழித்து மேய்கிற மான்களின் திரளை பாருங்கள் என்று ஒருவருக்கு ஒருவர் காட்டி, திரண்டு உருண்ட தோள்களை உடைய மலைவசிக்களான குறவர் வில்லை (அவர்க மேலே சரத்தை விடுவதாக) வளைகின்ற கோவர்த்தனம் என்ற கொற்றக் கூடையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அழகிய மை அணிந்த விசாலமான கண்களையும், மடப்பம் என்ற குணத்தையும் கொண்ட இடைச்சிகளும், ஆயர்களும், பசுக்கூட்டங்களும் மழையின் கடுமையால் கதறி, ‘எம்பிரானே! நீயே எங்களுக்கு ரக்ஷகனாக இருக்க வேண்டும் ’ என்று வேண்ட, பிரகாசமான ஆழியை கையில் ஏந்திய எங்களுக்கு ஸ்வாமியான கண்ணன், கையில் எடுத்த மலை, பெரிய புஜங்களை உடைய குறவர்கள், தங்களை சரண் என்று சேர்ந்த பெண்களின் கண்களை கண்டு, இவை மான் பேடைகள் என்று ஆச்சரியம் அடைந்து தங்களின் வில்லினை வளைத்து நிற்கும் கோவர்தனம் என்ற குன்று ஆகும்.
இந்த பாடலில் ஆழ்வார் ஆழி என்று சொல்லியது, எம்பெருமான், இந்திரனை அழிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், தன்னுடைய திருக்கரத்தில் இருக்கும் சுதர்சன சக்கரத்தை உபயோகித்து இருக்கலாம், ஆனால் எம்பெருமானின் கருணையால் (உண்பதை கொண்ட நாம், உயிரை கொள்ளலாகாது, அனுகூலனக்கு வந்த கலக்கம் தானே தெளிந்து விடுகின்றான்’) அவனை அழிக்க நினைக்க வில்லை என்பதையும் எடுத்து உரைக்கவே என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.
குறப்பெண்களின் கண்களை மானுக்கு ஒப்பிட்டு, அவை தங்களின் தோட்டங்களை அழிக்க வந்தனவோ என்று எண்ணி, வில்லினை கையில் எடுக்கிறார்கள் என்று சொன்னது மரபு கவிதை.
Leave a comment