வழுவொன்றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு, * மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை, * இழவு தரியாத தோரீற்றுப்பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும் * குழவியிடைக் காலிட்டி எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
பெரியாழ்வார் திருமொழி 3.5.2
இந்திரப்பட்டம் பெறுவதற்குச் செய்த சாதனங்களில் ஒரு குறையும் இல்லாத செய்கைகளை செய்தது பெற்ற தேவேந்திரனுடைய வசத்தில் இருக்கும் (ஆயிரம் கண்களும் சிவக்கும்படி) கோபித்து ஏவப்பட்ட மேகங்கள் வந்து ஏழு நாட்கள் மழை பெய்து பசு, ஆயர்கள் இவர்கள் எங்கும் போகாதபடி செய்ய, மது என்ற அரக்கனை முடித்த கண்ணன் ஒரு சிரமமும் இன்றி எடுத்து தலை கீழாகப் பிடித்த மலையானது, சிங்கக்குட்டியானது, (யானையின் குழந்தையை வருத்தும்படி) தொடர்ந்து முயற்சி செய்த போதிலும், தன் குழந்தைக்கு வரும் துன்பத்தை சகிக்க மாட்டாத அதனை பெற்ற பெண் யானையானது நான்கு கால்களுக்கு நடுவே அடக்கிகொண்டு அந்த சிங்கக் குட்டியோடு எதிர்த்து நின்று போர் செய்கின்ற மலை கோவர்தனம் என்னும் ஜெயம் கொண்ட மலை என்பது இதன் பொழிப்புரை.
ஒரு குறையுமற்ற செய்கைகளை செய்து முப்பத்து மூவாயிரம் கோடி தேவர்களுக்கும் நிர்வாககன் என்ற இந்திரப் பதவியை அடைந்த தேவேந்திரனுடைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, விழ வில்பழ நடைசெய், மந்திர விதியில் பூசனை பெறாத (பெரிய திருமொழி 2.3.3) இந்திரனுடைய கோபத்தினால், ஏவப்பட்ட மேகங்களானவை, குமுறிக் கொண்டு வந்து ஏழு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து பசுக்களையும் மனிதர்களையும் துன்பப்படுத்த, கண்ணபிரான் எல்லாவற்றையும் காப்பதற்காக, அடியோடு எடுத்து தலைகீழாகப் பிடித்து அருளின மலையானது ‘கோவர்த்தனம்’ ஆகும். தன்குட்டியின் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத, அதனை பெற்ற பெண் யானையானது, தன் குட்டியை, தன்னுடைய நான்கு கால்களின் நடுவில் அடக்கிக்கொண்டு, அந்தச் சிங்கக்குட்டியோடு எதிர்த்து போரிட்ட இடம் கோவர்த்தனம் என்ற குடையே என்கிறார்.
தன்னைப் பற்றிக் கிடக்கும் சிஷ்யனுடைய துன்பங்களை பொறுக்க மாட்டாத ஆசார்யன், அந்த சிஷ்யனை முடிப்பதாக தொடர்ந்து வருகின்ற கருமங்களுக்கு அஞ்சி, அவனைத் தன் திருவடிகளுக்கு அந்தரங்கன் ஆக்கிக் கொண்டு அந்த கருமங்களின் வாசனைகளை நீக்கி முடிக்கும் தன்மையை இதன் உள்ளர்த்தமாக சொல்கிறார்.
Leave a comment