மிடறு மெழு மெழுத்து ஒட வெண்ணெய் விழுங்கிப் போய், * படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே, * கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின் * இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.6
வெண்ணையை கழுத்திலே, (உறுத்தாமல்) மெழுமெழுத்து உள்ளே போகும்படி அமுது செய்து புறம்பு போய், அளவற்ற தீம்புகளை செய்து இந்த ஆய்பாடி எங்கும் திரியாதபடி பல காட்டு யானைகளை திரியும் காட்டு வழியிலே கன்றுகளின் பின்னே, தட்டித் திரியும்படி சுகுமாரனான என் கண்ணனை காட்டிற்கு அனுப்பினேன் அது என் பாவமே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
என் கண்ணனை, கழுத்துக்கு (தொண்டைக்கு) உறுத்தாமல் வெண்ணைய் விழுங்கி, பல வீடுகளில் கள்ளத்தனம் செய்தும் இந்த ஆயர்பாடி எங்கும் திரியாமல், காட்டு யானைகள் ஓடும் இடத்தில், கன்றுகள் பின் செல்ல செய்த நான் பாவியேன் என்று புலம்புகிறாள்.
லட்டு சீடை முதலான பக்ஷணங்களை சாப்பிட வேண்டுமானால் கல் இருக்குமோ என்று சோதித்து மெதுவாகக் கடித்து உண்ண வேண்டும். வெண்ணெய் என்றால் வருத்தமின்றி மழ மழ உள்ளே போகும் என்பதால் அதனை இங்கே குறிப்பிடுகிறார். ‘தாழியில் வெண்ணைய் தடங்கையார் விழுங்கிய‘ (பெரியாழ்வார் திருமொழி 1.5.9) என்றபடியும், ‘தடா நிறைந்த, வெள்ளி மலை இருந்தால் ஓத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு” (பெரிய திருமொழி, 10.7.3) என்றபடியும் அதிக வெண்ணைய் கண்டு பிரியப்பட்டு, திருக் கையை விரித்து நிறைய அள்ளி ‘கை கலந்து உண்டான்‘ (திருவாய்மொழி 1.8.5) என்றபடி வலக்கையாலும் இடக்கையாலும் வாரிவாரி அமுது செய்யும் போது ஒரு பருக்கை இல்லாததால் கழுத்தில் உறுத்தாமல் மெழு மெழுத்து உள்ளே ஒடும்படி என்று சொல்லி அவன் சௌகுமார்யத்திற்கு ஏற்றது என்கிறார். ஈட்டிய வெண்ணைய் தொடு (திருவிருத்தம் 3.1) உண்கைக்காகவே இந்த அவதாரம் எடுத்தது என்றும், சொந்த வீட்டிலேயே இப்படி வெண்ணைய் விழுங்கி பிறகு மற்ற இடத்திற்கு போயேன் என்றும் யசோதை சொல்வதாக சொல்கிறார்.
படிறு பல செய்து என்பதால் பல தீம்புகள் செய்ததாக சொல்கிறார். “பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்,” (பெரிய திருமொழி 10.7.5) என்று திருமங்கைஆழ்வார் சொன்னபடி விளையாடுகிற பெண்களின் கையில் உள்ள விளையாட்டு பொருள்களை பறிப்பது, அவர்கள் புடவைகளை பற்றி கிழிப்பது, சிற்றில்களை அழிப்பது, ‘தொட்டுதைத்துநலியேல்கண்டாய்‘ (நாச்சியார் திருமொழி, 2.8) “எம்மைப்பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால்” (நாச்சியார் திருமொழி 2.9) என்றபடி அவர்களோடு செய்யும் லீலைகளுக்கு அளவில்லை என்றபடியால் பல என்றும், அவர்களுக்கு அது தேவையாகவும் சிரமமாகவும் இருக்கிறபடியால், ‘படிறு‘ என்றும் கூறுகிறார்.
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும் (நாச்சியார் திருமொழி 3.1) என்றபடி, ஒரு வீடு இரண்டு வீடு இல்லாமல், ஒரு தெரு இரண்டு தெரு இல்லாமல், இந்த ஆய்பாடி முழுவதும், திரிந்ததை சொல்கிறார். இதனால் நம்பிள்ளை, இப்படி பயப்படாமல் செய்கிறான் என மிகவும் உகந்து இருப்பாள் என்றும் சொல்கிறார். ஆகையால் இப்படி போக விடாமல் காட்டு அனுப்பி விட்டேனே என்று வருந்துகிறாள்.
Leave a comment